தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

1.2 நாடகக் கலை வடிவங்கள்

  • 1.2 நாடகக் கலை வடிவங்கள்

    சங்க கால இலக்கியங்கள் தருகின்ற செய்திகள் வழி,
    அக்காலக் கட்டத்தில் தமிழ் நாடகம் நிகழ்ச்சி அமைப்பில்
    வேறுபட்ட வடிவம் பெற்றிருந்த தன்மையை அறியலாம்.
    அவ்வகை வடிவக் கூறுகள் சங்கம் மருவிய காலத்திலும்
    தொடரலாயின.

    சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் நாடகமானது
    கூத்து மற்றும் ஆடல் (ஆட்டம்) எனப் பெயர்
    கொண்டழைக்கப்பட்டது. நாடகம்     நடத்தப்படும் போது
    மேற்கொள்ளப்பெற்ற உத்தி முறையே இவ்வகைப் பெயர்
    மாற்றத்திற்கான காரணமாக அமைந்திருந்தது.

    நாடகம் நடைபெறும்போது, நாடகக்கதை, நிகழ்வினை
    முக்கியப்படுத்தி நடித்துக் காட்டுகையி்ல் அது ‘கூத்து’
    என்றழைக்கப்பட்டிருக்க வேண்டும். கூத்து, கதையைத் தழுவி
    அமைந்து வருவதைப் பல சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன.

    அதைப்போல, ஒரு நாடகம் நடைபெறும்போது, நடன
    நகர்வுகளை (அசைவுகளை) முதன்மைப்படுத்தி நிகழ்த்தும்போது
    அது ஆடல் (ஆட்டம்) என்றழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
    ஆடலானது நகர்வுகளைத் தழுவி அமைவதற்கான பல சான்றுகள்
    நமக்குக் கிடைத்துள்ளன.

    அவை பற்றிய சான்றுகள் குறித்து இப்போது நோக்குவோம்.

    அ) கூத்தின் தன்மையினைப் பின்வருமாறு அறியலாம்.
    எ.டு : வள்ளிக் கூத்து, துணங்கைக் கூத்து.

    ‘வள்ளிக்கூத்து’ எனப்படுவது நடைமுறையில் உள்ள ‘வள்ளி’ யின்
    கதையைப் பின்பற்றி அமைவதாகும். காலங்காலமாகத் தொடர்ந்து
    வரும் இக்கூத்து அதன் கதைத் தன்மையால் வாடாமல்
    (அழியாமல்) நின்று செழித்துள்ளது என்பதை,


    வள்ளிக்கூத்து


    வள்ளிக்கூத்து


    வாடா வள்ளியின் வளம் பல தரூஉம்

    (பெரும் : 370)

    என்ற பெரும்பாணாற்றுப்படைப் பாடல் வரி விளக்குகிறது.

    மகளிர் தழீஇய துணங்கை

    (குறுந் : 31 : 2)


    கை புணர்ந்திடும் துணங்கை

    (பெரும் : 234- 235)

    போன்றன துணங்கைக் கூத்தின் செய்முறை விளக்கத்தினைப்
    புலப்படுத்தும் வண்ணம் குறிப்புத் தருகின்றன.

    ஆ) ஆடலின் தன்மையினைப் பின்வரும் சான்றுகளால்
    நிறுவலாம்.
    எ.டு : வெறியாடல்

    வேலன் வெறி அயர்களத்து

    (அகம் : 114 : 2)

    என ‘வேலன் வெறியாடல்’ எனும் ஆடற்கலை குறித்து
    அகநானூறு
    குறிப்புத் தருகிறது. வெறியாடல் என்ற சொல்லே
    ஆடலின் வேகத்தினை முதன்மைப்படுத்துவதைக் காணலாம்.

    1.2.1 கூத்துகள்

    சங்ககாலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் கூத்துகள்
    செழிப்புற்று விளங்கின என்பதை முன்னரே அறிந்தோம்.
    கூத்துகள் குறித்த செய்திகளை இக்காலக் கட்ட இலக்கியங்கள்
    பெருமளவு தருகின்றன.

  • வள்ளிக்கூத்து


  • ‘வள்ளிக்கூத்து’ பற்றிய குறிப்புக்களைத் தொல்காப்பியம்
    குறிப்பிடுகிறது.
    வாடா வள்ளி வயவர் ஏத்திய

    (தொல் : பொருள் : 63)

    இதுபோலவே பெரும்பாணாற்றுப்படை எனும் இலக்கியமும்
    ‘வள்ளிக்கூத்து’ குறித்த செய்தியினைத் தருகிறது.

  • துணங்கைக் கூத்து


  • துணங்கைக் கூத்து எனும் கூத்தானது மகளிர் கை
    கோத்துக்கொண்டு நடத்திக்காட்டிய கலையாகச் சங்க காலத்தில்
    விளங்கியது. இளம் பெண்கள் இறைவழிபாட்டின்போது இவ்வகை
    நிகழ்வுகளை நடத்திக்காட்டியிருக்க வேண்டு்மெனக் கருதலாம்.
    ‘எல்வளை மகளிர் துணங்கை’

    (குறுந் : 364 : 5-6)

    எனும் குறுந்தொகைப் பாடல்வரியும் துணங்கைக் கூத்து
    குறித்துப் பொதுவாகப் பேசுகிறது.

    இத்துணங்கைக் கூத்தானது     இசையொலிக்கு ஏற்ப
    நடத்திக்காட்டப்பெறும்.

    ‘இணையொலி இமிழ் துணங்கை’

    என்ற மதுரைக்காஞ்சிப்     பாடல்     வரி இதனைப்
    புலப்படுத்துவதாய் உள்ளது.

  • குரவைக் கூத்து


  • மிகவும் பழமையான கூத்து வகைகளுள் குறிப்பிடத்தக்கது
    குரவைக்கூத்து ஆகும். மக்களிடையே செல்வாக்குப் பெற்ற
    கலையாக இது விளங்கியது. இக்கூத்தானது பின்னணி இசைக்கு
    ஒப்ப, பல     கலைஞர்கள்     சேர்ந்தாடும் வகையில்
    அமைக்கப்பட்டிருப்பது சிறப்புக்குரியதாகும்.
    ‘மன்று தொறு நின்ற குரவை’

    (மதுரைக் காஞ்சி : 615)

    என்ற மதுரைக்காஞ்சிப் பாடல் வரியும்,

    ‘வேங்கை முன்றில் குரவை’

    (நற் : 276)

    என்ற நற்றிணைப் பாடல் வரியும் குரவைக் கூத்தின்
    செல்வாக்கினைக் குறிப்பிடுகின்றன.

    குரவைக் கூத்து நடத்திக்காட்டப் பெற்ற இடம் குறித்த
    செய்தியும் அறியத்தக்கதாகும். வெண்மணல் பரப்பே குரவைக்
    கூத்திற்கான இடமாக விரும்பி ஏற்கப்பட்டிருந்த நிலையை,

    ‘வெண்மணல் குரவை’

    (ஐங் : 181)

    என்ற ஐங்குறுநூற்று பாடல் வரியும்,

    ‘கொண்டல் இடுமணல் குரவை’

    (அகம் : 20)

    என்ற அகநானூற்றுப் பாடல் வரியும் அறிவிக்கின்றன.

    மேலும் தேர்ந்த இசையுடன் இயைந்த குரவைக்கூத்தின்
    தன்மையும் வளர்ச்சி நோக்கில் குறிப்பிடத்தக்க ஒன்றே.

    ‘பண் அமை இன்சீர்க் குரவை’

    (கலி : 102)

    என்னும் கலித்தொகைப் பாடல்வரி மேற்குறிப்பிட்ட குரவையின்
    இசைத்தன்மையையே விளக்குவதைக் காணலாம்.

    1.2.2 பிற கூத்துகள்

    சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை ஆகியன
    குறித்த செய்திகளை விரிவாகத் தருகின்றது.

    ஆய்ச்சியர் குரவையில் இராமாயணம், மகாபாரதம் போன்ற
    கதைகளின் நிகழ்ச்சிகள்     நாட்டிய     நாடக பாணியில்
    ஆடத்தக்கவாறு அமைந்துள்ள சிறப்பினைக் காணலாம்.

    குரவைக் கூத்து நடத்திக் காட்டப்பெற்ற முறைமை குறித்தும்
    சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது. பொதுவாக, கண்ணனை
    மையப்படுத்திய கதை நிகழ்வாக இது அமையும். ஏழு
    சுரங்களையும் நடனப் பெண்களாக உருவகப்படுத்தும் நிலை
    இதில் காணப்படுகிறது. ‘குரல்’ கண்ணன் என்றும், ‘இளி’
    பலராமன் என்றும், ‘துத்தம்’ பின்னை என்றும், ஏனைய
    நரம்புகள் மற்ற நால்வர் என்றும் படைத்து எழுவராகக் குரவைக்
    கூத்தாடி மகிழ்ந்த நிலை உரையாசிரியரால் அறிய முடிகிறது.

    1.2.3 ஆடல்கள் (ஆட்டங்கள்)

    சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் பல்வகை
    ஆட்ட வடிவங்கள் தமிழகத்தில் வளம் பெற்றிருந்தமையை
    முன்னரே அறிந்தோம்.

  • வெறியாடல்


  • ‘வெறியாடல்’ என்பதே ஆடல் (ஆட்டம்). வடிவத்திற்கென
    அறியக்கிடைக்கும் முதல் வடிவமெனலாம்.

    ‘வெறியாடல்’ என்னும் ஆடல்கலை சங்க காலத்தில்
    சிறப்புற்று விளங்கியது. மலைப்பாங்கான இடங்களில் முருகனது
    அருள் பெற்றவனாக வேலன் வேகமாக ஆடத்தொடங்குவான்.
    அவன் நோய்களை, குறிப்பாக பெண்களுக்கான நோய்களை
    நீக்கும் வல்லமை பெற்றவனாகக் கருதப்பட்டான்.

  • சிலப்பதிகார ஆடல்கள்


  • சிலப்பதிகாரம் பதினொரு வகை ஆடல்களைக் குறிப்பிகிறது.
    இவைகளை மாதவி இந்திராவிழாவில் பொது மக்களுக்காக
    (பொதுவியல்) ஆடிக்காட்டினாள். இப்பதினொரு ஆடல்களும்
    பின்வருமாறு அமைந்தன. அவை, அல்லியம், கொடுகொட்டி,
    பாண்டரங்கம், துடி, குடையாடல், குடம், பேடியாடல்,
    மரக்காலாடல், மல்லாடல், பாவையாடல், கடயம் ஆகியனவாகும்.

    இதனைச் சிலப்பதிகாரம்,
    ‘பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
    பதினோராடலும் பாட்டும் கொட்டும்’

    (சிலப் : அர : 13-14)

    என்று குறிப்பிடுகிறது. இப்பாடல் வரிகளுக்கு உரைதரும்
    அடியார்க்கு நல்லார் இப்பதினோராடல் குறித்தும் விளக்கம்
    தருகிறார். அவை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது
    முக்கியமல்லவா? அவைபற்றித் தனித்தனியே காண்போம்.

  • அல்லியம்


  • கம்சன் ஏவிய மத யானையின் கொம்பினைக் கண்ணன்
    முறிப்பதைக் காட்டும் காட்சி.

  • கொடுகொட்டி


  • திரிபுரத்தினைச்     சிரித்தே     எரித்த சிவபெருமான்
    வெற்றிக்களிப்பால் கைகொட்டி ஆடிய ஆட்டம்.

  • பாண்டரங்கம்


  • முக்கண்ணன் நான்முகனுக்கு ஆடிக்காட்டிய ஆட்டம்.

  • துடி


  • ‘துடியாடல்     வேல்     முருகனாடல்’     எனக்
    குறிப்பிடப்பெறுகிறது. சூரபதுமனைக் கொன்றபின் முருகன்
    அலைகடல் மீது உடுக்கை அடித்துக்கொண்டு ஆடிய ஆட்டம்.

  • குடையாடல்


  • படைகளை இழந்து அரக்கர்கள் தோல்வி கண்ட நிலையில்
    ஆறுமுகன் வெற்றிக் குடை பிடித்து ஆடிய ஆட்டம் இது.

  • குடம்


  • வாணாசுரனால் கைது செய்யப்பட்ட காமனின் மகன்
    அநிருத்தனை விடுதலை செய்வதற்காகக் குன்றெடுத்தோனாகிய
    கண்ணன் குடத்தின் மீது ஆடியது.

  • பேடியாடல்


  • தன் மகனை விடுவிக்கக் காமன் பேடி உருக்கொண்டு
    கண்டோர் வியக்கும்படி ஆடியது.

  • மரக்காலாடல்


  • அரக்கர்கள் ஏவிய பாம்பு, தேள் போன்ற நச்சுப்பூச்சிகளை
    நசுக்கிக் கொல்வதற்காக மரக்கால் கொண்டு கொற்றவை ஆடியது.
    இம்மரக்காலாடல் ஆட்டமே இன்றைய பொய்க்கால் குதிரை
    ஆட்டத்திற்கான முன்னோடி ஆட்ட வடிவமாகக் கருதப்படுகிறது.

  • மல்லாடல்


  • மல்லன் வடிவில் மாயவன் வாணாசுரனை எதி்ர்த்துக்கொன்ற
    நிகழ்வினைச் சித்தரிப்பது.

  • பாவையாடல்


  • அவுணர்களின் போர்க்கோலம் ஒழிவதற்காகத் திருமகள்
    ஆடியது.

  • கடயம்


  • இந்திரனின் மனைவியான அயிராணி வயலில் உழவனின்
    மனைவி வடிவில் ஆடியது.

    இவ்வகை ஆடல்கள், ஆடற்கலை இலக்கணத்துடன் மிகவும்
    நேர்த்தியாக ஆடப்பெற்ற நிலையை அறிய முடிகிறது.
    1.
    தமிழின் முத்தமிழ்க் கூறுகள் எவை?
    2.
    தொல்காப்பியம் குறிப்பிடும் ‘நாடக வழக்கு’ என்ற சொல்
    எதைக் குறிக்கிறது?
    3.
    சங்ககால நாடகக் கலை வடிவங்கள் பொதுவாக
    எவ்வகையனவாய் அமைந்தன?
    4.
    கூத்து வகைகளில் இரண்டினைக் கூறுக.
    5.
    ஆடல் வகைகளில் இரண்டினைக் கூறுக.
    6.
    மரக்காலாடல் இன்றைய எந்த ஆடல் வடிவத்தின்
    முன்னோடி வடிவமாகக் கருதப்படுகிறது?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 16:04:02(இந்திய நேரம்)