தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

3.5 வில்லுப்பாட்டு என்னும் கதைக் கூற்றரங்கு

  • 3.5 வில்லுப்பாட்டு எனும் கதைக்கூற்றரங்கு

    ‘வில்’ போன்ற இசைக்கருவியின் வடிவத்தால் பெயர்
    கொண்டது வில்லுப்பாட்டு என்னும் கதைப் பாடல் வடிவமாகும்.

    தமிழகத்தின் தென் பகுதியில் (குமரி, நெல்லை மாவட்டங்கள்)
    செல்வாக்குப் பெற்றுள்ள இக்கலையை ‘வில்லிசைப்பாடல்’
    என்றும் ‘வில்லடிச்சான் பாட்டு’ என்றும் வழங்குவர்.

    வில்லடிச்சான் கோவிலிலே - விளக்கு
    வைக்க நேரமில்லை

    என்னும் நாட்டுப்புறப்பாடல், வில்லுப்பாட்டுக் (bow song) கும்
    கோவிலுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும்.

    இப்பாடல் வடிவமானது கதைகூறல் முறையில் இன்றும்
    மக்களிடையே, குறிப்பாகத் தென் மாவட்ட மக்களிடையே,
    செல்வாக்குடன் விளங்கி வருகிறது.

  • கதைக் கூற்றரங்கு


  • நாடகத்தன்மையுடன் கதை கூறிச் செல்லும் முறைமைக்குக்
    கதைக் கூற்றரங்கு (Narrative Theatre) என்று பெயர்.
    வில்லுப்பாட்டு முழுக்க இவ்வடிவத்துக்கான கூறுகளைக் கொண்டு
    விளங்குகிறது. கதைக் கூற்றரங்கில் ஒரு கதையின் பல்வேறு
    பாத்திரப்படைப்புக்களின் இயல்புகளையும்     மிகச் சிறந்த
    முகபாவனைகளுடன் குறிப்பிட்ட குழுவினர் நடித்துக் காட்டும்
    பாங்கு, பார்வையாளரை மிகவும் ஈர்க்கும் வண்ணம் அமைந்து
    நிற்கும். (முகபாவனை = முகத்தில் அந்தந்தச் சூழ்நிலைக்கேற்ப
    மாறும் உணர்ச்சி வேறுபாடு.)

    இக்கலையானது, தென் மாவட்டங்களில் அம்மன் கோவில்
    விழாக்களிலும், கொடை விழாக்களிலும் இப்போதும் நடத்தப்
    பெற்று வருகின்றது. தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் இடம்
    பெறுகின்றது.

  • தோற்றம்


  • இதன் தோற்றம் குறித்துப் பலவாறு செய்திகள் உள்ளன.
    இக்கலை பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றியி்ருக்கலாம்
    என்பர். (தி.சி. கோமதி நாயகம், தமி்ழில் வி்ல்லுப்பாட்டுக்கள்.
    ப. 78) ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டு முதற்கொண்டே இது
    தமிழகத்தில் செல்வாக்குடன் விளங்கி வருகிறது.
    3.5.1 மேடை

    வில்லுப்பாட்டுக்கெனத் தனிப்பட்ட     மேடை வடிவம்
    ஏதுமில்லை. திருவிழாக்களின் போது கோயில்களுக்கு முன்னால்
    அமைக்கப்படும் மேடையில் இது நடத்தப் பெறுகிறது. பொது
    நிகழ்ச்சிகளின் போதும் வில்லுப்பாட்டு நடத்திக் காட்டப்படுகிறது.
    எனினும் வில்லுப்பாட்டுக் குழுவினர் அனைவரும் உரிய
    வகையில்     அமர்ந்து     கொள்ளத்தக்க     மேடை
    அமைக்கப்பட்டிருக்கும்.

    அடுத்து நாம் காணவிருக்கும் படத்தின் மூலம் வில்லுப்பாட்டு
    மேடையின் வடிவம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

  • ஒளியமைப்பு


  • வில்லுப்பாட்டு மேடைக்கெனப் பொதுவான ஒளியமைப்பே
    பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒளியமைப்பில் பயன்பாடு அல்லது
    தரவேறுபாடு     நிகழ்ச்சியில்     எந்த மாறுபாட்டையும்
    ஏற்படுத்துவதில்லையாதலால் ஒளியமைப்பில் தனிக் கவனம்
    ஏதும் இல்லை. இக்காலத்தில் மின்சார ஒளி விளக்குகள்
    பெருமளவில் பயன்படுத்தப் பெறுகின்றன.

  • ஒலியமைப்பு


  • வில்லுப்பாட்டு நிகழ்வு வில்லை அடிக்கும் கோலின்
    சத்தத்தையும், பாடல்     வரிகளையும் உரைநடையையும்,
    பின்பாட்டுக்காரன் சொற் குறிப்புக்களையுமே முதன்மையாகக்
    கொண்டதாகும். மேடையில் அமர்ந்திருக்கும் கலைஞர்கள் உரத்த
    குரலில் பாடும் திறன் மிக்கவர்கள். என்றாலும் இக்காலத்தில்
    ஒலியமைப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
    3.5.2 இசைக்கருவிகள்

    வில்லுப்பாட்டுக் கலையில் ‘வில்’ என்னும் இசைக்கருவி
    முதன்மை பெறுவதிலிருந்தே     இசையின் பங்களிப்பின்
    முக்கியத்துவம் நமக்குப் புரியும். இதனாலேயே ‘வில்லிசை’
    என்றும் பெயர் பெற்றமைகிறது.

    வில், உடுக்கை, குடம், தாளம், கட்டை ஆகிய முக்கிய
    இசைக்கருவிகள் வில்லுப்பாட்டில் இடம் பெறுகின்றன.



    வில்


    உடுக்கை



    குடம்


  • வில்


  • வில்லுப்பாட்டின் முதன்மைக் கருவியாகிய வில்லினைத்
    தயாரிக்க வில்கதிர், முனைக்குப்பிகள், வடம், மணிகள்,
    மணிகளைக் கோத்திடத் தேவையான வளையங்கள், கம்பிகள்,
    கயிறுகள் முதலியனவாகும்.
    வில்கதிர் -
    பனை மரத்தால் செய்யப்பட்ட வில்
    வடிவப் பகுதி
    வடம் -
    முறுக்கப்பட்ட கயிறு.
    முனைக்குப்பிகள் -
    வில்லின் இரு பக்கங்களிலும்
    பொருத்தப்படும் அழகிய சிமிழ்
    போன்ற அமைப்பு.

    பனையின் வைரம் பாய்ந்த அடிமரப் பகுதியினின்றும்
    செதுக்கி உருவாக்கப்படும் வில்பகுதியின் உடற்பகுதி கயிற்றால்
    வரிந்து சுற்றப்பெறும். மணிகளைக் கோக்கத் தேவைப்படும்
    வளையங்கள் உரிய இடைவெளி விட்டு, கதிரில் பொருத்தப்
    பட்டிருக்கும்.

    கதிரின் நடுப்பாகம் குடத்துடன் சேர்த்துக் கட்டப் பெறும்.
    குடம் மண்குடமாதலால் கதிரின் நடுப்பகுதி துணியால்
    சுற்றப்பட்டிருக்கும். வில், குடத்துடன் ஒட்டியிருக்கும் நிலையில்
    நாண்வடம் மலோகவும், கதிர்ப்பகுதி கீழாகவும் அமைந்திருக்கும்.

    கதிரின்     மேற்பகுதியில்     வெண்கலக்     குப்பிகள்
    பொருத்தப்பட்டிருக்கும். இரு முனைகளும் இணைக்கும் நாண்
    மூலம் இழுத்துக் கட்டப்பெறும்.

    கதிரில் தொங்கவிடப்படும்     மணிகள் வெவ்வேறு
    ஒலியமைப்பைக் கொண்டவையாகும். மணிகள் கதிரின் ஒருபக்கம்
    ஆறும் மறுபக்கம்     ஐந்துமாகப்     பதினொன்று என
    அமைக்கப்பட்டிருக்கும். ஒற்றைப் படையில் மணிகளை
    அமைப்பது பொதுவான மரபாகும்.

  • வீசுகோல்


  • ‘புலவர்’ என்றழைக்கப்படும் வில்லினை இயக்குபவர் கைகளில்
    வைத்திருக்கும்     கோல்     வீசுகோல்     எனப்படுகிறது.
    இவ்வீசுகோல்களைக் கொண்டு     புலவர்     நாண் மீது
    தாளத்திற்கேற்பத் தட்டி இசை எழுப்புவர்.

  • உடுக்கு


  • வில்லுப்பாட்டில் ‘உடுக்கு’ என்னும் இசைக் கருவியும்
    சிறப்பிடம் பெறுகிறது. தெய்வம் சார்ந்த கதைகளுக்கும், வீர
    அவலக் கதைகளுக்குமான உணர்ச்சிக் கூறுகளை வெளிப்படுத்த
    உடுக்கின் சத்தம் முக்கியமான பங்கு
    பணியாற்றுகிறது. உடுக்கானது இருபுற
    வாய்ப்பகுதிகளையும் இடை சுருங்கிய
    நடுப்பகுதியையும் கொண்டது. சிறிய
    வடிவிலான     உடுக்கை
    பயன்படுத்தப்படுவதால் ‘சித்துடுக்கை’
    என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது.


    உடுக்கை

    இதன் உடற்பகுதி வெண்கலம் அல்லது பித்தளையால் ஆனது.

  • குடம்


  • குடம்

    வில்லுப்பாட்டின் முக்கியமான இன்னொரு
    இசைக்கருவி ‘குடம்’ ஆகும். இதற்கு
    வில்லுக்குடம் என்று பெயர். இதன்
    கழுத்துப் பகுதி மிகவும் உறுதியாகவும், வாய்
    விளிம்பு வளைவு இன்றியும் காணப்பெறும்.

    இது தனிக்கவனத்துடன் மண்ணால் உருவாக்கப் பெறும்.
    மண்குடமானது மேடையில் ‘புரியணை’ என்னும் வைக்கோல்
    வளையத்தின் மேல் வைக்கப் பெற்றிருக்கும். புரியணையின் மேல்
    குடம் வைக்கப்பட்டுள்ள நிலையில் தான் குடத்தின் கழுத்துடன்
    வில் கதிரின் நடுப்பகுதி சேர்த்து கட்டப்பெறும். குடத்தினை
    இயக்க, ‘பத்தி’ மற்றும் ‘சொட்டிக்கட்டை’ ஆகியனவற்றைப்
    பயன்படுத்துவர். ‘பத்தி’ கொண்டு குடத்தின் வாய்ப்பகுதியிலும்,
    ‘சொட்டிக்கட்டை’ கொண்டு குடத்தின் மீதும் தட்டி ஓசை
    எழுப்பப்படும்.

  • தாளம்


  • இரண்டு வட்ட வடிவ இணைப்பகுதிகளால் ஆன இசைக்கருவி
    இது. இரும்பினாலோ பித்தளையினாலோ இது ஆக்கப்
    பெற்றிருக்கும்.

  • கட்டை


  • இணையான இரு மரக்கட்டைத் துண்டுகளால் ஆன கருவி
    இது.     கருங்காலி     மரத்துண்டுகளே     பெரும்பாலும்
    பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட சதுர வடிவில் கைக்கி
    அடக்கமாக இஃது அமைந்திருக்கும். இதனைக் ‘கட்டைத் தாளம்’
    என்று பெயரிட்டு வழங்குவர்.
    3.5.3 கதை

    வில்லுப்பாட்டுக்கான கதைகள்     பல்வேறு வகையில்
    அமைகின்றன. மரபு வழிக்கதைகள் முதல் தற்கால நிகழ்வுகள்
    வரை எதையும் வில்லுப்பாட்டுக்கான கதையாகக் கொள்ளலாம்.
    ஆனால் கட்டமைப்பு நிலையில் அவை பொதுவான வடிவத்தைக்
    கொண்டு விளங்குவதைக் காணலாம்.

    வில்லுப்பாட்டில் வரும் கதைகள் பொதுவாகப் பின்வருமாறு
    அமையும், அவை

    அ)
    தொன்மைக் கதைகள்
    ஆ)
    நாட்டுப்புறக் கதைகள்
    இ)
    தெய்வக் கதைகள்
    ஈ)
    சமுதாயக் கதைகள்
    உ)
    வரலாற்று வீரர் கதைகள்
    ஊ)
    நடப்பியல் நிகழ்வுகள்

    போன்றனவாகும்.

    இவ்வகையில் அய்யன் கதை, வள்ளியம்மன் கதை,
    பார்வதியம்மாள் கதை, மார்க்கண்டன் தவசு, அரிச்சந்திரன் கதை,
    கிருட்டிணசாமி கதை, பெருமாள்சாமி கதை, மாகாளியம்மன் கதை,
    இராமாயணக் கதைகள், சுடலைமாடன் கதை, நீலி கதை,
    முத்துப்பட்டன் கதை, சின்ன நாடான் கதை, தோட்டுக்காரி
    அம்மன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, கான்சாகிபு போர்,
    கட்டபொம்மன் கதை, காந்திமகான் கதை போன்றவை
    குறிப்பிடத்தக்க வில்லுப்பாட்டுக் கதைகளாகும்.

    எடுத்துக்காட்டாக, மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்று
    விளங்கிய ‘அரிச்சந்திரன் கதை’யைப் பார்ப்போம்.

    அரிச்சந்திரன் கதை நாம் வழி வழியாக அறிந்து வரும்
    கதைதான். தனது நாட்டை இழந்தும் மனைவியையும் மகனையும்
    பிரிந்தும் வாழ்கிறான். அரிச்சந்திரன், தன்னையே விற்கும்
    நிலைக்குத் தள்ளப்பட்டு, சுடுகாடு காக்கும் பணி மேற்கொண்ட
    போதும் உண்மைக்காக கொண்ட கொள்கை தவறாமல்
    இருக்கிறான். கடைசியில் தனது வாய்மை மூலம் வெற்றி
    காண்கிறான்.

    அரிச்சந்திரன் கதையில் வரும் துயரம் மிகுந்த காட்சிகள்
    வில்லுப்பாட்டிற்கு மிகவும் ஏற்ற சூழலைத் தருவதால் இக்கதை
    வில்லுப்பாட்டுக்கென விரும்பி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

    3.5.4 அமைப்பு

    வில்லுப்பாட்டானது தனித்துவம் மிக்க பாடல் மற்றும் உரை
    கலந்த அமைப்பைக் கொண்டு விளங்குகிறது.

    காப்பு விருத்தத்தில் கதை தொடங்குகிறது. தொடர்ந்து
    வருபொருள் உரைத்தல், குருவடி பாடுதல், அவையடக்கம்,
    நாட்டு வளம் அல்லது கயிலைக் காட்சி, கதைத் தலைவன்
    அல்லது தலைவியின் வாழ்க்கை நிகழ்ச்சி, வாழி பாடுதல் என
    அமையும்.

    காப்பு விருத்தம், என்பது கடவுள் வாழ்த்துப் பாடலாகும்.

    வருபொருள் உரைத்தல், என்பது அடுத்து வரப் போகும்
    வில்லுப்பாட்டுக் கதையினைக் குறிப்பிடும் செய்தியாகும்.

    குருவடி பாடுதல், என்பது ‘குரு’ எனப்படும் ஆசானை
    வணங்கிப் பாடுவது என்பதாகும்.

    அவையடக்கம், என்பது கற்றுத் தேர்ந்த அவையினர் முன்
    பாடப்போகும் தாங்கள் வணங்கி மகிழ்வதான குறிப்பி்னை
    உணர்த்துவதாகும்.

    நாட்டு வளம் அல்லது கயிலைக்காட்சி என்பது நாட்டைப்
    போற்றிப்பாடும் பாடலாகும். இஃது எல்லாக் கதைகளுக்கும்
    பொதுவானதாக அமைக்கப்பட்டிருக்கும்.

    இப்பாடல்,

    நாடு நல்ல நாடு - எங்கும்
    நாவலர்கள் புகழும் நாடு

    எனத் தொடங்கி அமையும்.

    தலைவன் அல்லது தலைவியின் கதை கூறுதல் என்பது
    கதைத் தலைமை மாந்தரின் குணநலன்களை வரிசையாக
    அடுக்கிக் கொண்டே பாடிச் செல்வது.

    ‘வாழி பாடுதல்’ என்பது கதைகேட்போரும், மற்றோரும்
    எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துதல் என்பதாகும்.
    இப்பாடல் பொதுவாகப் பின் வருமாறு அமையும்.

    ஆல் போல் தழைத்து - நல்ல
    அறுகம்புல் போல் வேரூன்றி
    மூங்கில் போல் அன்ன சுற்றம் - அவர்
    முசியாமல் வாழ்ந்து வாறார்

    ‘புலவர்’ எனப்படுகிற தலைமைக் கலைஞர் பாட்டின்
    இடையிடையே உரைநடையால் விளக்கம் அளிப்பார். புலவர்
    பாடியும் உரை சொல்லியும் முடிக்கும் போது இடைமறிக்கும்
    பின்பாட்டுக்காரர் ‘ஆமா’, ‘ஆகா’, ‘ஓகோ’, ‘அப்படியா’, ‘எப்படி’,
    ‘சரி’ எனப் பல சொற்களை சூழ்நிலைக்குத்தக்கவாறு பேசுவார்.
    கதைக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அமைப்பு முறையாக இது
    விளங்குகிறது. ஒரே போக்கில் செல்லும் கதையின் வேகத்தை
    மாற்றி, அலுப்பின்றிப் புத்துயிர் ஊட்ட இது போன்ற சொற்கள்
    உதவுகின்றன எனலாம். இது வில்லுப்பாட்டின் தனித்தன்மை
    வாய்ந்த அமைப்புக் கூறாகும்.

    3.5.5 நடத்து முறை

    வில்லுப்பாட்டு மேடையில் முக்கியமான கூறாக விளங்குவது
    ‘வில்’ எனப்படும் இசைக்கருவியே எனலாம். வில்லுப்பாட்டுப்
    புலவரும் அவருக்குப் பக்கத்துணையாக உள்ள மற்ற
    பாட்டுக்காரர்களும் அவர்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும்
    மேடையில் இருக்கவேண்டிய முறைப்படி அமர்ந்து கொள்வர்.
    பொதுவாக ஐந்து கலைஞர்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் பங்கு
    பெறுவர்.

    குடத்தின் மேல் வில் இணைக்கப்பட்டிருக்கும். வீசும் கோலை
    நாணின் மேல்     வீசுவதற்கு     ஏற்றவாறு     உயரம்
    அமைக்கப்பட்டிருக்கும். தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு,
    கற்பூரம் முதலானவை வில்லின் முன் படைக்கப்படும்.

    மேடையில் அனைத்துக்     கலைஞர்களும் அமர்ந்து
    கொண்டதும் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டிய பின்னர்,
    தங்கள் இசைக்கருவிகளை ஒரு சேர இயக்குவர். இஃது ‘இராச
    மேளம்’ எனப்படும். தொடர்ந்து காப்புப் பாடலுடன் கதை
    தொடங்கும்.

    எடுத்துக்காட்டாக, ‘அய்யன் கதை’ வில்லுப்பாட்டின்
    தொடக்கக் காட்சியைக் காண்போம்.

  • காப்பு

  • மெய்தவத்தில் நின்றரக்கன் விரல் தூண்ட வரம் வாங்கி
    செய்ய சிவனார் தனைவிரட்டத் திருமாலிடமே மகிழ்ந்து
    செல்ல
    தையல் வடிவாய் பெண்வேசம் கொண்டு சத்தியம் செய்து
    வரமழித்த
    ஐயன் கதை தன்னைப்பாட ஆனைமுகன் காப்பாமே

    (அய்யன் கதை : காப்பு)


  • நாடகக் கூறு


  • வில்லுப்பாட்டானது நாடகக் கூறுகள் மிகுந்து விளங்கும் கலை
    வடிவமாகும். இதில் பாடுகின்ற கலைஞர் வாய்மொழியாகக் கதை
    நிகழ்வினை நடத்திக் காட்டும் பொழுது நாடகத் தன்மையுடன்
    நிகழ்த்திக் காட்டப்படும்.

  • கால அளவு


  • வில்லுப்பாட்டின் நிகழ்ச்சிக்கான கால அளவு பல இரவுகள்
    கூடத் தொடர்ந்து வருவதுண்டு. கோயில் விழாக்களில்
    பாடப்பெறுவதால் இது முக்கியமான சடங்குத் தொடர்பான கலை
    நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. இதனால் கதை நிகழ்ச்சிகளை
    வெவ்வேறு சொற்களில் மீண்டும் மீண்டும் பாடி நிகழ்த்துவதுண்டு.

    தற்பொழுது கால மாற்றத்திற்கேற்ப ஒரே இரவில் பாடி
    முடிக்கும் வழக்கமும் உள்ளது. மேலும் பொது நிகழ்ச்சிகளில்
    பதினைந்து நிமிடத்திற்குள்ளாகவே வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினை
    நடத்திக் காட்டும் வண்ணம் இடம் பெறச் செய்துள்ளனர்.

  • இக்கால நிலை


  • இக்காலத்தில் வில்லுப்பாட்டானது கால மாற்றத்திற்கேற்ப
    புதுமையாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இப்புதுமைக்கு
    வித்திட்டவர் பிச்சைக்குட்டிப் புலவர் ஆவார். பல சமுதாய
    நிகழ்வுகளை வில்லுப்பாட்டாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு
    வெற்றி கண்டவர் இவர். கால அளவில் சுருக்கம், கதையமைப்பில்
    மாற்றம், கதைப் பொருளில் புதுமை போன்றவற்றைக் கொண்டு
    வந்தார். கட்டப்பொம்மன், பாரதி, காந்தியடிகள் கதை
    போன்றனவும், கண்ணகி கதை, சீதா கல்யாணம் போன்றனவும்
    இவரால்     உருவாக்கப்     பெற்ற     குறிப்பிடத்தக்க
    வில்லுப்பாட்டுக்களாகும். இவர் ‘வில்லிசை வேந்தர்’ எனப்
    போற்றப்பட்டார்.

    திரைப்படத்தில் வில்லுப்பாட்டினை அறிமுகம் செய்த
    பெருமை         கலைவாணர்
    என். எசு. கிருட்டிணனைச்சாரும்.
    ‘காந்திமகான் கதை’ இவரின் சிறப்பான
    படைப்பாகும். கொத்தமங்கலம் சுப்பு,
    குலதெய்வம் இராசகோபால், சுப்பு ஆறுமுகம்
    போன்றோர் குறிப்பிடத்தக்க வில்லுப்பாட்டுக்
    கலைஞர்கள் ஆவர்.

    அறிவியல், கருத்துப்பிரச்சாரம், விழிப்புணர்வுப் பிரச்சாரம்
    போன்ற பலவற்றிற்கு வில்லுப்பாட்டு மிகச் சிறந்த ஊடக
    வடிவமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.

    3.5.6 வில்லுப்பாட்டின் பயன்

    வில்லுப்பாட்டானது மக்களது உள்ள உணர்ச்சியோடு ஒன்றி
    வளரும் கலையாக உள்ளது. நாடகத்தன்மை மிகுந்த நிலையில்
    கதை கூறலில் இது உருவாக்கித் தரும் பயன்பாடுகள் பலவாகும்.

    மிகச்சிறந்த கதைக்     கூற்றரங்கு     என்ற நிலையை
    வில்லுப்பாட்டுப் பெறுகிறது. மரபு வழிக் கதைகள் முதல்
    இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலைகள் வரை வில்லுப்பாட்டு
    மூலம் மக்களைச் சென்றடைகிறது.

    தமிழுக்குத் தனித்துவம் வாய்ந்த இலக்கிய வடிவத்தை
    வில்லுப்பாட்டு பங்களிப்புச் செய்துள்ளது. இதனை வாய்மொழி
    இலக்கியமாகக் கொள்ளலாம். ஆனால் செவிக்குத் தேனாக
    விருந்து படைக்கும் இலக்கியம் இது.

    எந்தக் கால     அளவுக்குள்ளும் ஒரு கதையினைப்
    படைத்துக்காட்ட ஏற்ற நாடக வடிவம் இது. மக்களையும்
    கதையின் போக்கினூடே ஒன்றவைத்துக் கதை கூறும் வடிவமாக
    இது திகழ்கிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 16:07:39(இந்திய நேரம்)