தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

4.2 பம்மல் சம்பந்த முதலியார்

  • 4.2 பம்மல் சம்பந்த முதலியார்

    பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் 1873 ஆம் வருடம்

    பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி சென்னையில் பம்மல் என்ற இடத்தில் பிறந்தார். இவரது
    பெற்றோர் ப. விஜயரங்க முதலியாரும்,
    ப. மாணிக்கவேலு அம்மாளும் ஆவர். இவரது வீடு சென்னை ஆச்சாரப்பன் வீதி இலக்க எண் 70 இல் உள்ளது. இவரது இயற்பெயர்     திருஞான     சம்பந்தம் என்பதாகும்.


  • அடிப்படைக் கல்வி


  • பம்மல் சம்பந்த முதலியார் கற்றவர் மிகுந்த குடும்பத்தில்
    பிறந்தார். எனவே சிறந்த அடிப்படைக் கல்வி இவருக்குத் தானாக
    வாய்த்தது. தமது ஐந்தாம் வயதில் கல்விக்கான அடித்தளம்
    அமைக்கப்பட்டதாகச் சம்பந்த முதலியாரே குறிப்பிடுகிறார்.
    அதுமுதல் 1879 வரை மூன்று பள்ளிக் கூடங்களில் கல்வி
    பயின்றார். மூன்றாவது பள்ளியான நரசிம்மலு வாத்தியார்
    பள்ளிக்கூடத்தில் ஆங்கிலக் கல்வி கற்றார். 1880ஆம் வருடம்
    மிகவும் புகழ் பெற்ற சென்னை பிராட்வேயிலுள்ள இந்து
    புரொப்பரைட்டரி (Hindu Proprietory School) என்னும்
    பள்ளிக்கூடத்தில் சேர்ந்து தொடர்ந்து ஆங்கில வழிக் கல்வி
    பயின்றார். 1882ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரிப்
    பள்ளிக்கூடத்தில் சேர்ந்து தொடர்ந்து கல்வி கற்றார். 1886ஆம்
    ஆண்டு முதல்     பச்சையப்பன்     கல்லூரியில் பயின்று
    மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து பி.ஏ
    பட்டமும், 1897ஆம் ஆண்டு சட்டத்தில் பட்டமும் பெற்றுக்
    கொண்டார். 1898ஆம் ஆண்டு வக்கீலாகப் பதிவு செய்து
    பணியாற்றத் தொடங்கினார்.

  • மறைவு


  • சட்டம் பயின்று தேர்ந்து, புகழ் பெற்றபோதும், நாடகக்
    கலைக்குத் தன் உழைப்பை நல்கியவர் சம்பந்த முதலியார்.
    கட்டுப்பாடு, கலை உணர்வு, ஒழுக்க மேம்பாடு இவற்றைக்
    கொண்டு தமிழ் நாடகக் கலைக்கு உயர்வு தேடித் தந்தவர்.
    நாடகம் தொடர்பான பல ஆய்வுரைகளை வழங்கியவர். 1943இல்,
    ஈரோட்டில் நாடகத்தமிழ் மாநாட்டில் நாடகத் தமிழ்க்கொடி
    ஏற்றி வைத்தவர். தமிழ் நாடக ஆர்வலர்களால்போற்றப்பட்டவர்.
    தொழில் முறைசார் நாடகக் குழுக்களுக்கும் தம் ஆதரவை
    நல்கியவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சம்பந்த முதலியார்
    அவர்கள் 1964ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார்.
    4.2.1 நாடக ஆர்வம்

    கல்வி கற்கும் நாளிலேயே சம்பந்த முதலியார் நாடகத்தில்
    ஆர்வம் கொண்டார். 1883 ஆம் ஆண்டு பள்ளி விழாவில்
    அலெக்சாண்டரும் கள்வனும் என்னும் ஆங்கில நாடகத்தில்
    கள்வனாக வேடமேற்றார். பிற நாடகக் குழுக்களின்
    நாடகங்களைக் காண நேர்ந்த போது நாடகக்கலை தொடர்பான
    சிந்தனையை வளர்க்கத் தொடங்கினார். மேனாட்டு நாடகங்களை
    விரும்பிப் பார்த்தார். நம் நாடகங்களின் குறைகளைக்
    கண்டறிந்தார். இக்குறைகளை நீக்க வேண்டி மேனாட்டு நாடக
    முறையை அறிமுகப்படுத்த எண்ணினார். இதன் விளைவாக,
    பயின்முறை (Amateur) நாடக முறையில் நாடகம் படைக்க முடிவு
    செய்தார்.

  • பயின்முறை நாடகக் குழு


  • நாடகத்தைத் தொழிலாகக் கொள்ளாமல், கற்றவர்கள் தங்கள்
    ஓய்வு நேரத்தில் மேற்கொள்ளும் நாடகப் படைப்பு முறையென
    இதனைக் கொள்ளலாம். இதுவே பயின்முறை எனப் பெயர்
    கொண்டழைக்கப்பட்டது. மேனாடுகளில் இவ்வகை நாடகமுறை
    செல்வாக்குப் பெற்று விளங்கி வந்தது.

  • சுகுண விலாச சபை


  • சுகுண விலாச சபை என்னும் குழுவை 1891 இல் பம்மலார்
    தோற்றிவித்தார். இப்பயின்முறை நாடகம் தமிழகத்தில் பல
    பயின்முறை நாடகக் குழுக்களின் தோற்றத்திற்குப் பிற்காலத்தில்
    தூண்டுகோலாக அமைந்தது. இக்குழுவில் பங்கேற்ற அனைவரும்
    கல்வியறிவும், நாடக ஆர்வமும் மிக்கவர்களாக விளங்கினார்கள்.
    4.2.2 நாடக ஆசிரியர்

    1891 முதல் 1936 வரையில் சம்பந்த முதலியார் குறிப்பிடத்தக்க
    நாடகப்பணி ஆற்றினார். தம் வாழ்நாளில் 94 நாடகங்களை
    எழுதியுள்ளார். பெரும்பாலான நாடகங்களை அவரே அச்சிட்டு
    வெளியிட்டுள்ளார். தமக்கிருந்த ஆங்கிலப் புலமையில் பல
    ஆங்கில நாடகங்களையும் தமிழாக்கம் செய்துள்ளார்.

  • மொழி பெயர்ப்பு நாடகங்கள்


  • சம்பந்த முதலியார் மேனாட்டு நாடகங்களையும் வடமொழி
    நாடகங்களையும் தமிழில் மொழி பெயர்த்தார். தொன்ம
    இலக்கியங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளையும் நாடக
    மாக்கினார். சமுதாயத்தில்     புரையோடிப் போயிருந்த
    பிரச்சினைகளைச் சிறு நாடகங்களாக எழுதினார்.

    ஆங்கில மொழியிலிருந்து சேக்சுபியரின் ஐந்து நாடகங்களைத்
    தமிழில் தந்துள்ளார். பிரஞ்சு மொழியிலிருந்து மோலியரின் ஒரு
    நாடகத்தினைக் காளப்பனின் கள்ளத்தனம் என்ற பெயரில்
    நாடகமாகத் தந்தார். மேலும் வடமொழியிலிருந்து நான்கு
    நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தளித்தார்.

    மொழி பெயர்க்கப்பட்ட     நாடகங்களின் நிகழ்வுகள்
    தமிழ்ப்பாங்கானவை. பாத்திரப்     பெயர்களும் அவ்வாறே
    அமைக்கப்பட்டன. உதாரணமாக ஹேம்லட் அமலாதித்தன்
    எனவும் - மேக்பத் மகபதி எனவும் ஷைலாக் சியாம்லாலாகவும்
    சிம்பலின், சிம்ஹளநாதனாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

  • சிறந்த நாடகங்கள்


  • புஷ்பவல்லி, சுந்தரி, லீலாவதி, சுலோசனா, கள்வர் தலைவன்,
    யயாதி, மனோகரா, சாரங்கதாரா, இரண்டு நண்பர்கள், முற்பகல்
    செய்யின் பி்ற்பகல் விளையும், ரத்னாவளி, காலவரிஷி,
    மார்க்கண்டேயர், அமலாதித்தியன், வாணீபுர வணிகன், சபாபதி,
    வேதாள உலகம், பொன் விலங்கு, மகபதி, சிறுத்தொண்டர்,
    அரிச்சந்திரன், வள்ளி மணம், கொடையாளி கர்ணன்,
    சகுந்தைலை, காளப்பன் கள்ளத்தனம், நல்லதங்காள், ஏமாந்த
    இரண்டு திருடர்கள், ஸ்திரி ராஜ்யம், இந்தியனும் ஹிட்லரும்,
    கலையோ காதலோ போன்றன சம்பந்த முதலியாரின்
    குறிப்பிடத்தக்க நாடகப் படைப்புகளாகும்.

  • நாடக நூல்கள்


  • கீதமஞ்சரி, நாடகத்தமிழ்,     நாடகமேடை நினைவுகள்
    (ஆறுபாகங்கள்), நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி,
    தமிழ் பேசும் படம், பேசும்பட அனுபவங்கள் போன்ற நூல்களை
    எழுதியுள்ளார்.

  • திரைப்படங்களான நாடகங்கள்


  • சம்பந்த முதலியார் 1931 ஆம் ஆண்டு முதல் திரைப்படத்
    துறையிலும் பணிபுரியலானார். மேடைக்கெனத் தாம் எழுதிய
    நாடகங்களே திரைப்படமாக்கப் பெற்றதால் திரைப்படங்களில்
    பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. முதலில் சதி
    சுலோசனா நாடகம் திரைப்படமாயிற்று. பின்னர் 1936 ஆம்
    வருடம் மனோகரா திரைப்படத்தில் புருஷோத்தமனாக வேடம்
    ஏற்றார். காலவரிஷி, ரத்னாவளி, லீலாவதி, சுலோசனா,
    சந்திரஹரி, சபாபதி, பொங்கல் பண்டிகை, இராமலிங்க சுவாமிகள்
    போன்ற நாடகங்களும் திரைப்படமாயின.
    4.2.3 நாடகப் பயிற்றுவிப்பாளர்

    சம்பந்த முதலியார் மிகச் சிறந்த நடிகராக விளங்கினார். தான்
    எழுதிய நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் வேடமேற்றார்.
    தமது சுகுணவிலாச சபையின் நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சியும்,
    பிற தொழில் நுட்பப் பயிற்சியும் அளித்து வந்தார்.

  • மனோகரா


  • சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகம் தமிழ் நாடக
    மேடையில் குறிப்பிடத்தக்க சிறப்பினைப் பெற்றது. தமது
    படைப்புகளில் மனோகரா நாடகம் முதன்மையானது எனச்
    சம்பந்த முதலியாரே குறிப்பிடுகிறார். இந்நாடகத்தினைப் பல
    தொழில் முறைக் குழுக்களும் நடத்தின. மேலும் பலமுறை பல
    மேடைகளில் நடிக்கவும் நேர்ந்தது. அனுமதி பெற்றே 859 முறை
    இந்நாடகம் நடத்தப்பட்டுள்ளது. இந்நாடகத்தில் மனோகரனாக
    சம்பந்த முதலியார் அவர்களே வேடமேற்றார். இந்நாடகத்திற்கான
    ஒத்திகை ஆடையுடன் இரவு முழுக்க நடைபெற்றது.

  • ஊக்கமளித்தல்


  • திட்டமிடப்பெற்ற நாடக ஒத்திகை மேற்கொள்வதைக்
    கட்டாயமாகக் கடைப்பிடித்தார். சக நடிகர்களின் சிறந்த
    நடிப்பாற்றலை மனம் நெகிழ்ந்து பாராட்டினார். தமிழ் நாடகக்
    கலையை உரிய தளத்தில் கொண்டு நிறுத்தத் தமக்குத் துணை
    நின்ற நெஞ்சங்களை வாழ்த்தினார். தமது நாடக மேடை
    நினைவுகள் எனும் நூலில் அவற்றை உணர்ச்சிப் பொங்க
    வெளிப்படுத்தியுள்ளார்.
    4.2.4 நாடகப் பங்களிப்பு

    சம்பந்த முதலியாரின் நாடகப் பங்களிப்பினை மூன்று
    நிலைகளாக்கிக் காணலாம்.

    1)
    பன்முக நோக்கிலான பலவகை நாடகங்கள்
    2)
    மேடையில் படித்தோரைப் பங்கேற்கச் செய்தது.
    3)
    நாடகம் நடைபெறும் கால அளவில் வரையறை

  • பன்முக நோக்கு நாடகங்கள்


  • தமிழ் நாடக மேடையில் பன்முக நோக்கிலான பலவகை
    நாடகங்களையும் ஒருசேரப் படைத்தளித்த பெருமை சம்பந்த
    முதலியாரையே சாரும். தமது சுகுணவிலாச சபையிலுள்ள
    கற்றுத்தேர்ந்த நடிகர் குழுவினரின் ஊக்கமும் இம்முயற்சிக்குக்
    காரணமாக அமைந்தது.

  • சமூக நாடகங்கள்


  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலக்கட்டத்தில் தமிழ்
    நாடகமேடை தெருக்கூத்து வடிவிலிருந்து சற்று மாறுபட்ட
    கதையமைப்பைக் கொண்ட நாடகங்களைக் கொண்டிருந்தது.
    மக்கள் தங்களுக்குள்     அறிமுகமான பழங்கதைகளையே
    நாடகமாகப் பார்த்து வந்தனர். சமூக உணர்வு குறித்த
    விழிப்புணர்வு அப்போது இல்லை. இன்பியலும், அங்க அசைவு
    மிக்க நகைச்சுவைகளுமே மிகுந்திருந்தன. சம்பந்த முதலியார்.
    இன்பியலில் சமூக உணர்வுகளை உட்புகுத்தி நாடகமாக்கினார்.
    மனோகரன், இருசகோதரிகள், தாசிப்பெண், புஷ்பவல்லி,
    உத்தமபத்தினி போன்ற நாடகங்கள் இவ்வகை நாடகங்களாகும்.

  • அங்கத நாடகங்கள்


  • சமுதாயச் சீர்கேடுகளை வெளிப்படுத்தும் வண்ணம் பல
    அங்கத நாடகங்களை (Satirical Plays) எழுதியுள்ளார். சபாபதி
    நாடகம் (ஆறு பாகங்கள்) இவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும்.

    அரிச்சந்திரன் நாடகக் கதையைப் பெயர் மாற்றி சந்திரகரி
    என்ற பெயரில் நையாண்டி செய்தார். பொய்யை மட்டுமே
    பேசுபவனாகச் சந்திரகரி படைக்கப்பட்டான்.

  • தொன்மக் கதைகள்


  • மக்களுக்குப் பிடித்தமான தொன்ம (புராண)க் கதைகளையும்
    சம்பந்த முதலியார் மக்களுக்கான நாடகமாக்கினார். யயாதி,
    காலவரிஷி, சிறுத்தொண்டன், மார்க்கண்டேயன் போன்றவை
    குறிப்பிடத்தக்கனவாகும்.

  • நாட்டுப்புறக் கதைகள்


  • சம்பந்த முதலியார் நாட்டுப்புறக் கதைப் பாடல்களையும்
    நாடகமாக்கினார். நல்லதங்காள், சாரங்கதாரன் போன்றன
    இவற்றுள் அடங்கும்.

    சமுதாய உணர்வுகளை இழையோட விட்ட இவரது
    நாடகங்கள் இன்றும் நினைக்கத் தக்கன. இவரது புத்த அவதாரம்
    நாடகம் வரலாற்றை நினைவு கூரவல்லதாகும்.

  • பிறமொழி நாடகங்கள்


  • வேற்றுமொழி நாடகங்களையும், மேனாட்டு நாடகங்களையும்
    சம்பந்த முதலியார் தமிழாக்கம் செய்தமையும் தமிழ் நாடக
    மேடைக்கு அணிசேர்த்தன.

    வகை வகையான நாடகங்களை எழுதியதோடு அவற்றை
    மேடையேற்றியும், அச்சிட்டும் தமிழ்மக்கள் பயன் பெறச்
    செய்தார்.

  • மேடையில் படித்தோர் பங்கேற்பு


  • நல்ல நடிகர்களே நல்ல பார்வையாளரை உருவாக்க முடியும்.
    நல்ல நடிகர்கள் உருவாகக் கல்வியறிவு முக்கியம். இதனால்
    கற்றவர்கள் மேடையேறினால் தமிழ் நாடக மேடை சீர்ப்படும்
    என நம்பிக்கை கொண்டார்.     அதன் அடிப்படையில்
    பயின்முறையில் சுகுண விலாச சபாவைத் தொடங்கினார்.
    தம்மோடு பயின்றவர்களையும், பணிபுரிந்தவர்களையும் நாடக
    நடிகர்களாக மாற்றினார். இத்தகைய முயற்சி தமிழ் நாடக
    மேடைக்குப் புதுப்பொலிவு தந்தது. படித்தவர்களும், மேல்தட்டு
    மக்களும் நாடகக் கலையைக் காணவும், ஆதரவு தரவும் இது
    துணைசெய்தது. தமிழ் நாடக மேடை வளருமென்ற நம்பிக்கையை
    ஊட்டியது.

  • நாடகம் நடக்கும் கால அளவில் வரையறை


  • அக்கால தெருக்கூத்துகள் பல நாட்கள் தொடர்ந்து
    நடைபெறும் நிலை இருந்தது. அதனைத் தொடர்ந்த நாடகங்களும்
    விடிய விடிய நடத்தப்பட்டு இருந்தன. கலைஞர்களுக்குக் களைப்பு
    ஏற்படும் வரை கதையை இழுத்து நீட்டினர்.

  • சீர்திருத்தம்


  • சம்பந்த முதலியார் தமது     நாடகங்களுக்கான கால
    அளவினைக் குறைத்தார். நாடக உரையாடல்களை உள்ளபடியே
    பேசி நடிக்க வேண்டுமென்பதில் கண்டிப்புக் காட்டினார்.
    பாடல்களைக் குறைத்தார். நாடகங்களின் இயல்புத் தன்மைக்கு
    முக்கியத்துவம் தந்தார். இதனால் நாடகம் நடைபெறும் கால
    அளவு கட்டுப்படுத்தப்பட்டது.
    1.
    சம்பந்த முதலியாரின் பெற்றோர் யாவர்?
    2.
    சம்பந்த முதலியார் தோற்றுவித்த பயின்முறை நாடக
    சபையின் பெயர் என்ன?
    3.
    மேக்பத் என்ற நாடகத்திற்கு, சம்பந்த முதலியார் இட்ட
    பெயர் யாது?
    4.
    மனோகரா நாடகம் அனுமதி பெற்று எத்தனை முறை
    மேடையேற்றம் செய்யப் பெற்றது?
    5.
    சம்பந்த முதலியார் நாடகங்களில் திரைப்படமாக மாற்றம்
    கண்டவற்றுள் ஐந்தினைக் குறிப்பிடுக.
    6.
    தமது நாடக அனுபவங்களை எந்த நூலின் வழி சம்பந்த
    முதலியார் வெளிப்படுத்தியுள்ளார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 16:09:12(இந்திய நேரம்)