Primary tabs
-
4.1 தமிழ் நாடக மேடை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் நாடக மேடை
வீழ்ச்சியடையும் நிலையைக் கொண்டிருந்தது. நாடக
உரையாடல்கள் வரையறுக்கப்படாமல் இருந்தன. நடிகர்கள்
ஒழுக்கக் கேடுகள் உருவாகக் காரணமாயிருந்தனர்.
கதையமைப்புகளில் கவனமில்லை. உரையாடல்கள் தரம் தாழ்ந்து
கண்டனத்துக்கு உள்ளாயின. அடித்தள மக்களை நிறைவு செய்ய
வேண்டிய தரக்குறைவான பேச்சுக்களை மேடையில் பேசினர்.
நடிகர்கள் மேடையில் சண்டை போடத் தொடங்கினர்.
நடிகர்களின் தரம் தாழ்ந்த நிலை, மேல்தட்டு மக்களை
மேடையிலிருந்து விலகச் செய்தது. நடிகர்களைச் கூத்தாடிகள்
என்று அடைமொழி இட்டு அழைக்கலாயினர். நாடகக்காரர்கள்
என்றாலே மக்கள் இழிவாக எண்ணத் தொடங்கினர். தங்குவதற்கு
வீடு கூடக் கிடைக்கவில்லை. தமிழ் நாடக மேடை ஒழுக்கம்,
கட்டுப்பாடு இழந்து வீழ்ச்சியடையத் தொடங்கியது. பொலிவு
இழந்தது.
இத்தகைய சூழலில் தமிழ் நாடக மேடையைக் காப்பாற்ற
முற்பட்டவர் இருவர். ஒருவர் பம்மல்சம்பந்த முதலியார்,
இன்னொருவர் சங்கரதாசு சுவாமிகள்.
4.1.1 இருபெரும் கலைஞர்கள்தமிழ் நாடக மேடை அடைந்த வீழ்ச்சிக்கான காரணங்களை
அறிந்து அவற்றை நீக்கத் துணிந்தவர்கள் இருவர். இருவரும்
இருவேறு நிலைகளில் தமிழ் நாடக மேடையில் ஒழுக்கம்,
கட்டுப்பாடு, தரமான நாடகம், நல்ல பார்வையாளர்,
வடிவமைக்கப்பட்ட குழு என நாடகப் புரட்சி செய்தனர்.
அவர்கள் பம்மல் சம்பந்த முதலியாரும், தவத்திரு சங்கரதாசு
சுவாமிகளும் ஆவர். பயின்முறை, தொழில் முறை என இரு
நிலைகளில் ஒரே காலகட்டத்தில் நாடகமுயற்சி மேற்கொண்டனர்.
தற்காலத் தமிழ் நாடக வளர்ச்சி்க்கு இவர்களையே
முன்னோடிகளாகக் கொள்ளலாம்.
4.1.2 இருவரின் பணிகள்தமிழ் நாடக முன்னோடிகளாகத் திகழ்ந்த சம்பந்த
முதலியாரும், சங்கரதாசு சுவாமிகளும் தமிழ் நாடகத் துறை
வளர்ச்சிக்குச் செய்த பணிகள் சிறப்பானவை.
ஒருவரோடு ஒருவர் மிக நெருங்கிய
நட்புடையவராயிருந்ததோடு, இருவரும் இணைந்து செய்த
பணிகள், இருவகைக் குழு முறையையும் வளர்த்தன. நல்ல
கலைஞர்கள் உருவாக்கப்பட்டனர்; நாடகத்துறையும் ஒரு புதுப்
பொலிவைப் பெற்றது.
- இருவகை நாடகக் குழுக்கள்
சம்பந்த முதலியாரின் பயின்முறை நாடகக் குழுமுறையும்,
சங்கரதாசு சுவாமிகளின் தொழில் முறை நாடகக் குழு முறையும்
தமிழ் நாடக மேடையில் இருவகை நாடகக் குழுமுறையின்
செயல்பாட்டுக்கு அடித்தளம் வகுத்தன.
தமிழகத்தில் பல குழுக்கள் இவ்வகையில் தோற்றம் கண்டன.
நாடகமுறையில் வேறுபாடு இருந்த போதும் செயல்பாட்டிலும்,
நோக்கத்திலும் ஒன்றுபட்டு உழைத்தன. சம்பந்த முதலியாரின்
மனோகரா நாடகத்திற்குச் சுவாமிகளின் பாடல்கள்
மெருகூட்டியதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
பல பயின்முறையிலான குழுக்கள் கற்றவர் மத்தியில்
தோன்றின. அதுபோலவே சங்கரதாசு சுவாமிகளின் தொழில்
முறையைப் பின்பற்றி தி.க. சண்முகம் ச கோதரர்கள், நவாப்
ராஜமாணிக்கம் போன்ற பல சிறந்த கலைஞர்கள் தனி நாடகக்
குழுக்களின் மூலம் நாடகங்கள் படைத்தளித்தனர். இன்றும்
இவ்வகையில் பல நாடகக் குழுக்கள் பணியாற்றி வருகின்றன.
- கலைஞர்கள் உருவாக்கம்
சம்பந்த முதலியார் மற்றும் சங்கரதாசு சுவாமிகள்
ஆகியோரின் பயிற்சியின் விளைவாகப் பல சிறந்த கலைஞர்கள்
உருவாக்கப்பட்டனர். இவர்களில் பலர் தமிழ் நாடகக் கலையின்
தொடர் செயல்பாட்டுக்காக அயராது உழைத்துச் சிறப்புப்
பெற்றனர். தி.க. சண்முகம் சகோதரர்கள்,
தெ.பொ. கிருட்டிணசாமி பாவலர், என்.எஸ். கிருட்டிணன்,
எஸ்.வி. சகஸ்ரநாமம் போன்ற பலர் நாடக மேடையின்
வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர்.
- புதுப்பொலிவு
தமிழ் நாடகம் இன்றைய சிறப்பான நிலையை அடைய
இவ்விரு கலைஞர்களின் அயராத உழைப்பு முக்கியமாகிறது.
தமிழில் பல நல்ல நாடக நூல்கள் உருவாகவும் இவர்களின்
அரிய முயற்சியே காரணமாயிற்று. நல்ல பார்வையாளர் தமிழ்
நாடகத்திற்குக் கிடைப்பதற்கும் இவர்களின் நல்ல நாடக
முயற்சிகளே காரணமாக அமைந்தன.
இவ்வகையில் சம்பந்த முதலியாரும், சங்கரதாசு சுவாமிகளும்
இருவகைச் செயல்பாட்டின் மூலம் தமிழ் நாடக வளர்ச்சியின்
முன்னோடிகளாக விளங்கினார்கள்.