தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

D03114-4.1 அகப்பாட்டு உறுப்புகள்

4.1 அகப்பாட்டு உறுப்புகள்

குறிஞ்சி முதலான ஐவகைத் திணைகளையும் சார்ந்ததாகப் பாடப்படும்
காதல் பொருளில் அமைந்த பாடல்களை அகப்பாட்டு என்பர். எந்த
ஓர் அகப்பாட்டு ஆயினும் அதை வைத்து நாம் அறியக்கூடிய செய்திகள்
பல உள்ளன. அச்செய்திகள் யாவும் அகப்பாடல் மூலமாகவே
அறியப்படுகின்றன. ஆகவே, அவ்வாறு அறியப்படும் செய்திப்
பிரிவுகளை அகப்பாடலின் உறுப்புகள் என்று பெயரிட்டு வழங்கினர்.

திணையே கைகோள் கூற்றே கேட்போர்

இடனே காலம் பயனே முன்னம்

மெய்ப்பாடு எச்சம் பொருள்வகை துறை என்று

அப்பால் ஆறிரண்டு அகப்பாட்டு உறுப்பே

என்னும் ஒழிபியல்     நூற்பா (2) அகப்பாட்டு உறுப்புகளை
முறைப்படுத்தி வழங்குகிறது.

இந்நூற்பாவின் வழி உணரப்படும் அகப்பாட்டு உறுப்புகளை உரிய
விளக்கங்களுடன் இனிக் காண்போம்.


4.1.1 உறுப்புகளின் பெயரும் வரையறையும்

நாற்கவிராச நம்பி அகப்பாட்டிற்குரிய உறுப்புகள் பன்னிரண்டைப்
பெயரிட்டு வகைப்படுத்தி வழங்குகிறார். அவையாவன:

திணை

இது ஏழுவகைப்படும். அவையாவன: குறிஞ்சி, பாலை, முல்லை,
மருதம், நெய்தல், கைக்கிளை, பெருந்திணை.

கைகோள்

கைகோள் என்றால் ஒழுக்கம் என்று பொருள். இது களவு, கற்பு
என இருவகைப்படும்.

கூற்று

அக வாழ்வில் தொடர்புடைய மாந்தர்கள், பேசும் பேச்சுகள் கூற்று
எனப்படும்.

கேட்போர்

அகப்பாடல் மாந்தர்கள் பேசும் பேச்சுகளைக் கேட்போர்.

இடம்

அகப்பாடலில் களவு     முதலான செயல்பாடுகளும் கூற்றுகளும்
நிகழும் நிலம் இடம் எனப்படும்.

காலம்

அகப்பாடலில் களவு முதலான செயல்பாடுகளும் கூற்றுகளும் நிகழும்
நேரம் காலம் எனப்படும்.

பயன

‘ஓர் அகப்பாடலால் அடையக்கூடிய பயன் இது’ என அறிவது.

முன்னம்

முன்னம் என்னும் சொல்லுக்குக் ‘குறிப்பு’ என்பது பொருள்.

மெய்ப்பாடு

இதனை ‘வெளிப்பாடு’ என்று கொள்ளலாம். பொருள் புலப்படுத்த
உடம்பின்கண் தோன்றுவது மெய்ப்பாடு. இது எட்டு வகைப்படும்.

எச்சம்

ஒரு பாடலின் பொருளை முழுமை பெறச் செய்வதற்கு எஞ்சி நிற்கும்
‘சொல்’ அல்லது ‘செய்தி’க்கு எச்சம் என்று பெயர்.

பொருள் வகை

இதனைப் பொருள் கொள்ளும் வகை என்று அமைத்துக்
கொள்ளலாம். இதையே பொருள்கோள் என்றும் கூறுவர்.

துறை

தலைவன், தலைவி முதலான யாருடைய கூற்றாகவும் அமையாமல்
அகப்பாடல் கவிஞர் கூற்றாக அமைவது துறையெனப்படும்.

மேற்குறிப்பிட்டவற்றைத் திணையின் தொடர்புடையவை, பாடல்
தொடர்புடையன எனப் பிரிக்கலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:17:50(இந்திய நேரம்)