தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D0311660-6.1 அகப்பொருள் சிறப்பு

6.1 அகப்பொருள் சிறப்பு

நாற்கவிராச நம்பி 252 நூற்பாக்கள் வழியாக ஐந்து இயல்களில்
முறைப்படுத்தி வழங்கிய அகப்பொருள் இலக்கணச் செய்திகளைப்
பதினோரு பாடத் தொகுப்புகளாகக் கற்றுணர்ந்தீர்கள். இனி
அப்பாடச் செய்திகள் வழியாக நாம் மேற்கொண்டு உய்த்துணரும்
பற்பல சிறப்புப் பண்புகளைக் கண்டுணரலாம். ஒரு வகையில்
இப் பாடத்தில் காணும் செய்திகள் முந்தையப் பாடப் பகுப்புகளில்
இடம்பெற்றவையாகவும் இருக்கலாம். எனினும், அவை சிறப்புப்
பார்வையுடன் மீளவும் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.


6.1.1 நாற்கவிராச நம்பி

நூலாசிரியரின் சிறப்புப் பண்புகளாகச் சில செய்திகளை மீளவும்
இவண் நினைவு கூர்தல் தக்கதாகும். அவையாவன:

(1)

நம்பி, நாற்கவிராசன் எனப்பட்டார். ஆசு, மதுரம், சித்திரம்,
வித்தாரம் என்னும் நான்கு வகைகளிலும் பாடல்கள் இயற்றுவதில்
வல்லவர் என்பதைப் இப்பெயர் வெளிப்படுத்துகிறது.

(2)

தமது     நூலாக்கத்தின்     நோக்கத்தைத் தலைப்பிலேயே
புலப்படுத்துவதாக அகப்பொருள் விளக்கம் என்றே பெயர்
அமைத்துள்ளார்.

(3)

நூலாசிரியரே உரையும் வரைந்துள்ளார்.

(4)

இலக்கணக் கூற்றுகளுக்கு - கிளவிகளுக்கு - பொருத்தமான
இணையான விளக்கம் வழங்கவல்ல நூலாகப் பொய்யாமொழிப்
புலவரின் தஞ்சைவாணன் கோவை என்னும் இலக்கண நூலை
ஆசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.

(5)

“முந்து நூல் கண்டு” என்பதற்கேற்பத் தொல்காப்பியத்தை மனம்
கொண்டும், சிந்தித்தும், சங்க அக இலக்கியப் போக்கினைச்
சேர்த்துச் சிந்தித்தும் நூலாக்கினார் நாற்கவிராச நம்பி. இது
அந்நூலின் சிறப்புப் பாயிரம் வெளிப்படுத்தும் சிறப்புச் செய்தியாகும்.


6.1.2 நம்பியகப்பொருள்

நாடகப் பாங்குடைய புனைந்துரை, நடைமுறைக்கேற்ற உலகியல்
எனும் இரு நெறிகளிலும் அகப்பொருள் இலக்கணச் செய்திகளை
அகத்திணை இயல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல்
என்னும் ஐந்து இயல்களில், நம்பியகப் பொருள் தொகை வகைப்படுத்தி
வழங்குகின்றது. மேற்கண்ட இயல் அமைப்புகளே ஆற்றொழுக்கான
முறையில் அகவாழ்வின் படிநிலைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையன.

அகத்திற்கான சூழலும் அறிமுகச் செய்திகளும் முதல் இயலான
அகத்திணையியலில் விளக்கப்படுகின்றன. உரிய சூழலில் மலரும்
காதல் களவியல் ஆகிறது. களவு கற்பாக மாறுவதற்கான காரணமும்
அதையொட்டி நிகழும் கரணமும் வரைவியலில் விளக்கப்படுகின்றன.
வரைவுக்குப் பின் தலைமக்கள் உயரிய நெறிகளைக் கற்பித்துக்கொண்டு
மேற்கொள்ளும் இல்லற மாண்புகள் கற்பியல் ஆகிறது. இவை
அனைத்திலும் விடுபட்ட குறிப்பிடத்தக்க செய்திகளும் கூடுதலான
விளக்கங்களும்     ஒழிபியல்     என்னும்     இறுதி     இயலில்
உணர்த்தப்படுகின்றன. இவ்வாறு முறையான வாழ்வியலை, உரிய
முறைவைப்போடு உணர்த்திச் செல்லும் இலக்கணப் போக்கினை
நம்பியகப் பொருளில் காணமுடிகிறது.

நூற் பொருள்

தமிழ்மொழியில் இலக்கண வகைப்பாடு கண்டவர்கள் பொருள்
இலக்கணம் என்பதை மூன்றாவது கூறாக அமைத்துள்ளனர்.
இலக்கணத்தில் பொருள் என்பது ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய
அகராதிப் பொருள் (Meaning) என்பதற்கும் மலோக, இலக்கிய நூலின்
பாடுபொருள் (Content) என்னும் உயர் கருத்துடையது. இதனை நாம்
முன்னரே உணர்ந்தோம். இவ்வாறு,     இலக்கியங்களில் பாடப்படும்
பொருள் எது? அது எவ்வாறு அமைய வேண்டும் என்பதைத் தெளிவாக
வரையறுத்த பெருமை தமிழிலக்கணப் புலவர்களுக்கு உண்டு.

இலக்கியம் என்பது மக்களிடம் இருந்து - மக்களுக்காக என்று
குறிப்பிடத்தக்கவாறு, பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வியல் பிழிவாக
அமைகிறது. அதன்வழி, வாழும் வழிகளையும் வழங்குகிறது. இது
கருதியே “பொருளதிகாரம் வாழ்க்கைக்கு வழங்கப்பட்ட இலக்கணம்.
இவ்வாறு வாழ்விலக்கணம் வகுத்த     பெருமை தமிழர்க்கே உரிய
தனித்தன்மை” என்னும் புகழ் மொழி நின்று நிலவி வருகிறது.

நாடகமும் உலகியலும்

அகப்பாடல் நாடக வழக்கு - உலக வழக்கு என்னும் இரண்டையும்
அடியொற்றியது என்பது முதல் நூல் ஆசிரியர் தொல்காப்பியரின்
விளக்கம். அவ்வாறே புனைந்துரை - உலகியல் என்னும் இரண்டு
முறைகளில் அகப்பொருள்     சொல்லப்படும் என்று நாற்கவிராச
நம்பியும் குறிப்பிட்டிருப்பது சிந்தனைக்குரிய செய்தியாகும்.

நாடகமாகவும் புனைந்துரையாகவும் சொல்லப்பட்டவற்றுள் ஏற்ற
செய்திகளை ஏற்றுப் பின்பற்றுவதும், உலகியலாக உரைக்கப்பட்டவற்றை
முழுமையாக ஏற்பதும் இயலக்கூடியவையே.

அகப்பொருள்

பாடுபொருள் அகம், புறம் என இரண்டாயினும் அகமே பெரிதும்
பாடப்பட்ட தன்மையினைச் சங்க இலக்கியத் தொகுப்பு புலப்படுத்துகிறது.
அவ்வாறே, பொருள் இலக்கண நூல்கள் பலவும் அகப்பொருளை
முதன்மைப்படுத்தி மொழிகின்றன.

சங்க இலக்கியத் தொகுப்பில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டு அகம்
சார்ந்தது. அது தமிழ்நெறி அறியாத ஆரிய மன்னன் பிரகத்தன்
என்பானுக்குத் தமிழ் அறிவித்தலுக்காகப் பாடப்பெற்றது என்பர். ஆகவே
தமிழறிவித்தல் என்பதற்கு அகப்பொருளின் சிறப்பை அறிவித்தல்
என்பது பொருள்.

இறையனார் அகப்பொருள் உரையில் ‘இந்நூல் தமிழ் நுதலிற்று’
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே அகப்பொருள் இலக்கண நூல்
ஒன்றுக்குத் தமிழ் நெறி விளக்கம் என்றே பெயர் அமைந்துள்ளது.
அறுவகை இலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர் ‘புனிதத் தமிழனுக்கு
ஆவியாவது அகப்பொருள்’ என்று கூறியுள்ளார். இவையாவும் அகமே
தமிழ்
என்பதைப் புலப்படுத்துவன.

தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி என்ற நூலின் ஆசிரியர் ஏ.வி.
சுப்பிரமணிய ஐயர் தமிழில் உள்ள பொருள் இலக்கணத்தைப் போல
ஒரு பகுதி வடமொழி இலக்கண நூல்களில் இருப்பதாகத் தெரியவில்லை
என்று     கருத்துரைத்துள்ளார். சிவஞான முனிவர் தமது சூத்திர
விருத்தி
யில் அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடு     தமிழில்
மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் தமிழிலக்கண     மரபினை வடமொழியுடன்
ஒப்பிட்டதும் அகப்பொருள்     பற்றிய     தனித்தன்மையை
வெளிப்படுத்தியிருப்பதும் உணரவேண்டிய உண்மைகளாகும்.

சிறப்புப் பெயரீடுகள்

அகத்துறை சார்ந்த திணைகள் ஏழு. அவற்றை மூன்று கூறுகளாக்கி
மொழிவது இலக்கண மரபு. அன்பின் ஐந்திணை, கைக்கிளை,
பெருந்திணை என்பனவே அவை.

இவ்வாறு ஏழு திணைகளுக்குமாக அகப்பொருள் இலக்கணத்தார்
அமைத்த பெயரீடுகள் சிறப்புத் தன்மை வாழ்ந்தவை.

ஐந்திணைகளுக்கு மட்டுமே ‘அன்பு     ‘இன்பம்’     என்னும்
அடைமொழிகள் சேர்த்து

ஐந்திணை உடையது அன்புடைக் காமம்

             - (நம்பி -1, அகத்திணை இயல் -4)

அளவில் இன்பத்து ஐந்திணை - (நம்பி. அகத்திணை இயல் 26)

என்பனவாக வழங்கி     இருப்பதும், (கைக்கிளை, பெருந்திணை
ஆகியவற்றில்) கை, பெரு என்னும் அடைமொழிகள் மற்ற இரு
திணைகளுக்குமான தன்மைகளைப் புலப்படுத்தி நிற்பதும் எண்ணிப்
பார்த்தற்கு உரியவை.

கை என்பது ஒரு     பக்கத்து அன்பை உணர்த்த வந்த
அடைமொழியாகும். பொருந்தாத இணைவு பற்றிய திணையைப்
பொருந்தாத் திணை என்று கூறாமல், பெருந்திணை என்று கூறியிருப்பது
அதுவே பெரும்பகுதியாய் - அதிக அளவினதாய் அமைந்திருப்பதை
வெளிப்படுத்துகிறது.

அன்பின் ஐந்திணை என்பதே சிறப்பானது. எனினும் அன்பு முன்
மொழியப்பட்டு ஏற்கப்படும் நிலை அமையும் வரை, எல்லாக் காதல்
முன்மொழிவுகளும் ஒரு பக்கத்து அன்பாகவே அமையும். எனவே,
கைக்கிளை என்பதை ஐந்திணையின் முந்தைய படிநிலை அல்லது
காதலின் முதல் படிநிலை என்றும் கருதலாம்.

முப்பொருளின் அமைப்பு

அகப்பொருள் என்பது     பாடுபொருள். அது உரிப்பொருளாய்
உணர்த்தப்படும். எனினும், அதற்குப் பின்புலமாய்     அமைவது
முதற்பொருள். உரிப்பொருளை     நிகழ்த்துவோர், துணைநிற்போர்
எனப் பலரும், பிற     உயிரினங்களும் கருப்பொருளாய் விளக்கம்
பெறுகின்றன.

அகப் பொருள் இலக்கணத்தார் முதற் பொருளை நிலம், பொழுது
என இரண்டு பிரிவாக்கினர். மேலும் நுணுகி நோக்கிப் பொழுது
என்பதைப் பெரும்பொழுது, சிறுபொழுது என வகைப்படுத்தினர்.
பின்னும் தெளிந்த நோக்காக ஓர் ஆண்டின் உட்பிரிவுகளைப் பெரும்
பொழுது என்றும், ஒரு நாளின் உட்பிரிவுகளைச் சிறுபொழுது என்றும்
வகைப்படுத்தினர்.

தொல்காப்பியத்தில் கருப்பொருள் என்பது தெய்வம், உணவு,
விலங்கு, பறவை, பறை, யாழ், தொழில் என்னும் ஏழு வகையாக
மட்டுமே அமைந்திருக்கிறது. நம்பியகப் பொருள் ஆசிரியர் அதனை
இரு மடங்காக்கித் தெய்வம், உயர்ந்தோர், அல்லோர், பறவை,
விலங்கு, ஊர், நீர், மலர், மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில்
எனக் குறிப்பிட்டிருப்பது கருப்பொருள் பற்றிய சிந்தனை வளர்ச்சியாகக்
கருதத்தக்கது.


6.1.3 இயற்கைப் புணர்ச்சி

தகுதி வாய்ந்த தலைமகனும் தலைமகளும் எதிர்ப்படுதல் இயற்கையாய்
நிகழ்ந்து, அவர்களுக்குள் அரும்பும் அன்பு மேலிட்டு அது காதலாய்
மலரும். அதன்பின் இருவரும் உள்ளத்தால் ஒன்றுபடுவர். அதுவே
இயற்கைப் புணர்ச்சி எனப்படும். இவ்வாறு தொடர்புடைய இருவருக்கும்
முன்னேற்பாடு - திட்டமிடுதல் ஏதும் இன்றி நிகழ்வது என்பதனால்
இதனை இயற்கைப் புணர்ச்சி என்று கூறினர். எனினும் அத்தகு
புணர்ச்சிக்குத் தொன்மைத் தமிழ் நூலான தொல்காப்பியத்தில்
ஒரு பின்னணி சொல்லப்படுகிறது. அதுவே பாலது ஆணை என்பதாகும்.
பால் என்பதற்கு தெய்வம், ஊழ், விதி என விளக்கங்கள் கூறுவர்.
அது, ஒன்று படுத்துதல் - வேறுபடுத்துதல் என்னும் இரண்டில் ஒன்றை
இயற்றும் இயல்புடையது. தலைமக்கள் வாழ்வில் பாலது ஆணை
ஒன்றுபடுத்துவதாக அமைகிறது.

நம்பியகப் பொருள் ஆசிரியர் இயற்கைப் புணர்ச்சியை இரண்டு
நிலைகளில் விளக்குகிறார். முதலாவதாக, தெய்வத்தால் நிகழும்
இயற்கைப் புணர்ச்சி முயற்சி இன்றி முடிவது என்றும், அடுத்து
தலைவியால் எய்தப்படும் இயற்கைப் புணர்ச்சியானது முயற்சியால்
முடிவதாகும்     என்றும்     ஒரு     வளர்நிலைச்     சிந்தனையை
முன்மொழிந்துள்ளார்.


6.1.4 தலைமக்களின் பண்புகள்

பாலது ஆணையால் தகுதி வாய்ந்த தலைமகனும் தலைமகளும்
எதிர்ப்படுதல் இயற்கைப் புணர்ச்சி என்று கண்டோம். அத்தகு
தலைமக்களிடையே அமைய வேண்டிய தகுதிப் பண்புகளை ஒரு
நூற்பாவில் நாற்கவிராச நம்பி சுட்டிக்காட்டுகிறார்.

பொருவிறந் தோற்குப் பெருமையும் உரனும்

நல்நுதற்கு அச்சமும் நாணும் மடனும்

மன்னிய குணங்கள்     - (அகத்திணை இயல்-35)

என்பது நூற்பா.

இதற்கு உரை வகுத்தவர்கள் வழங்கும் விளக்கத்தை அறிவது
தலைமக்களின் சிறப்புப் பண்புகளை உணர்வதாக அமையும்.

பெருமை

-
பழியும் பாவமும் அஞ்சுதல்.

உரன்

-
அறிவு ; தக்கது அறிதல்.

அச்சம்

-
காணாதது ஒன்று கண்டால் பெண்டிர் இடத்து நிகழ்வது.

நாணம்

-
பெண்டிர்க்கு இயல்பாகிய குணம்.

மடம்

-
பேதைமை.


6.1.5 இரு வகைக் கைக்கிளை

கைக்கிளை என்பது ஒரு பக்கத்து அன்பென்பதை முன்னரே
உணர்ந்தோம். ஒரு பக்கம் என்பது பெரும்பாலும் தலைவன் பக்கத்து
அன்பாகவே அமைகிறது. காதலை முதலில் முன்மொழியும் நிலை
தலைவனுடையதாகக் காட்டப்படுகிறது. அதையும் அகப்பொருட்
கைக்கிளை, அகப்புறக் கைக்கிளை என இரண்டாக வகைப்படுத்தினர்.
இவ்விரு வகைப்பாடு அமைந்ததற்கான நுட்ப     வேறுபாட்டை,
அவ்விரண்டையும் விளக்கும் இடங்களில் நாற்கவிராச நம்பி
வெளிப்படுத்தியுள்ளார்.

அகப்பொருட்     கைக்கிளையில் காமம் நுகர்தற்கு அமைந்த, ஏற்ற
பருவமுடைய     தலைவியிடம் தன்     காதலைத் தலைவன்
வெளிப்படுத்துவான். ஆனால், அகப்புறக் கைக்கிளையிலோ அவ்வாறு
காமம் நுகர்தற்கான பருவம் எய்தாத இளமைத் தன்மையுடைய
பெண்ணிடம் தலைவன் தன் காதலை வெளிப்படுத்துவான் என்பதே
நம்பி குறிப்பிடும் நுட்ப வேறுபாடாகும்.


6.1.6 உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும்

தலைமக்களின் காதல், தொடக்கத்தில் அவரவர் உயர் பண்புகள்
காரணமாக உள்ளத்தளவில் அமையும். அது உடனடியாக மெய்யுறு
புணர்ச்சி ஆகாது. மெய்யுறு புணர்ச்சி நிகழ்வதற்கு முன் இருவரும்
மேற்கொண்ட காதல் பயணத்தின் பாதையில் பத்து வகையான
செயல்பாடுகள் படிப்படியாக நிகழும் என்பதை நாற்கவிராச நம்பி
குறிப்பிட்டுச் சொல்கிறார். அதையும் மிகச் சுருக்கமாக ‘காட்சி முதலாகச்
சாக்காடு ஈறாகக் காட்டிய பத்து’ (அகத்திணை இயல்-36) என்று
தொகுத்துச் சுட்டுகிறார். காட்சியில் தொடங்கிய காதல், சாக்காடு என்னும்
இறுதி நிலைக்கு வரும்போது மெய்யுறு புணர்ச்சி அமையும் என்பது
கருத்து. (பத்துப் படி நிலைகளின் விளக்கத்தை அகத்திணை இயலில்
கண்டோம்.)


6.1.7 தோழியின் முதன்மை

அகப்பொருள் இலக்கணத்தில் முதன்மைக்குரிய மாந்தர்களாகத்
திகழ்பவர் மூவரே. தலைவன், தலைவி, தோழி என்போரே அம்மூவர்.
இவர்களில் பாடுபொருளின் முதன்மை மாந்தராய் முதல் இருவரும்
அமைவதை நாம் அறிவோம். தலைமக்களுக்கு அடுத்த தலைமைச் சிறப்பு
தோழிக்கே வழங்கப்பட்டுள்ளது. இம் முதன்மையை ஒரு நூற்பாவில்
(அகத்திணை இயல்-110) நாற்கவிராச நம்பி இனிது விளக்கியுள்ளார்.

இந்நூற்பா, ‘தோழி - செவிலியின் மகள் ; நன்மை, தீமையை
ஆராயும் அறிவுடையவள் ; தலைவிக்கு நீங்காத நற்றுணை ; அவளது
வருத்தத்தைத் தீர்க்கும் அன்புத் துணை’ என்னும் செய்திகளை
வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு தோழி முதன்மை பெற்றுத் திகழ்வதற்குக் காரணமே அவள்
தலைமக்களின் காதலை வளர்த்தெடுத்து, அதற்கு நிகழும் இடையூறுகளை
எல்லாம் அறுத்தெறிந்து, அக்காதலைக் கற்பாக்குவதற்கான நேர்மையான
காரணங்கள் இருப்பதை உரிய நேரத்தில் உரியவாறு எடுத்துரைத்து,
அறத்தை நிலை நிறுத்தும் பணியாற்றுவதே என்பதை அகப்பொருள்
இலக்கணத்தைக் கற்பார் இனிது உணர்வர்.

தலைவனின் காதலை உணர்ந்தாலும் கூடப் பல சூழ்நிலைகளில்
அவனுக்கு உதவி புரிவதற்கு உடன்படாமல் மறுத்து நிற்கும் தன்மையைத்
தோழியிடம் காணமுடிகிறது. அவ்வாறு முதற்கண் உடன்படாமல்
மறுத்துரைப்பது ஒரு வகையில் தலைவனின் உள்ள உறுதியைத் தோழி
உணரும் வாய்ப்பாக அமைகிறது.

முதலில் மறுத்தாலும் பிறகு அவன் குறையை ஏற்று இருவரையும்
சேர்த்து வைத்தல், தலைவியின் இடர்ப்பாட்டைத் தலைவனுக்கும்,
தலைவனின் அன்பைத் தலைவிக்கும் கூறி ஆற்றுவித்தல், இருவருக்குமே
சில உலகியல் நீதிகளை உணர்த்துதல் என்று அவர்களின் காதல்
வளர்ச்சிக்கு உடனிருப்பதும் தோழியே.

களவுக் காதல் அவ்வாறே நீடிப்பதை ஒரு போதும் உடன்படாத
தோழி வரைவு கடாதல் என்னும் செயல் மூலம் திருமணத்தை
வற்புறுத்துகிறாள். இருவரது திருமணத்திற்குத் தலைவியின் பெற்றோர்
இசையாத போது உடன் போக்கு நிகழ்த்தத் திட்டம் வகுத்தும்
செயல்படுத்துகிறாள். இவ்வாறு தலைமக்களின் களவு, கற்பாக
மலருவதற்கு வழிகாண்பவள் தோழியே.

களவைக் கற்பாக்கும் உயரிய பணியாகத் தோழியின் அறத்தொடு
நிற்றல்
என்னும் செயலும் குறிப்பிடத்தக்கது. செவிலித்தாய் தோழியிடம்
தலைவியின் மாற்றத்திற்கான காரணம் வினவுகிறபோது, அந்த
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு காதலை வெளிப்படுத்துகிற
இடத்தில் தோழியின் திறமை வெளிப்படுகிறது.

தலைவியின் காதலை ஏற்று, பெற்றோர் திருமணத்திற்கு இசைந்த
போதும், திருமணத்தின் பிறகு கற்பு வாழ்வில் தலைவி செம்மையுற
வாழ்வதைக் காணும்போதும் தோழி அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.
தலைவனும், தமக்கு ஏற்பட்ட இல்லறம் என்னும் நல்லற வாழ்விற்குக்
காரணமாக அமைந்தவள் தோழியே என்பதை வெளிப்படுத்துகிறான்.


6.1.8 பிரிவு - சில சிறப்புச் செய்திகள்

நம்பியகப் பொருள் நூலில் வெவ்வேறு இடங்களில் இடம் பெறும்
பிரிவு பற்றிய செய்திகளை ஒப்பிட்டுக் காணும்போது சில சிறப்புச்
செய்திகளை உணர முடிகிறது. அவையாவன :

1.

அகப்பொருள் இலக்கணத்தில் பிரிவு என்பது குறிப்பிடத்தக்க
ஒரு கூறாகும். அது களவு, கற்பு என்னும் இருவகைப்பட்ட
வாழ்க்கை நிலையிலும் நிகழும். களவில் திருமணத்திற்கான
பொருளீட்டுதல் காரணமாகத் தலைவன் பிரிவு மேற்கொள்வது உண்டு.

2.

திருமணத்திற்குப் பிறகு மேற்கொள்ளும் கற்பு வாழ்க்கையில்
ஓதல், பகை, தூது, துணை,     பொருள் தேடுதல் என்னும்
ஐவகைப்     பட்ட     காரணங்களால்     தலைவன் பிரிவு
மேற்கொள்கிறான்.     இவற்றுள் ஓதல் எனப்படும் கல்விக்கு
மட்டும் மூன்று ஆண்டுகள் பிரிந்து     செல்வது ஏற்கப்படுகிறது.
இதன் வழி அக்காலத் தலைமக்கள் திருமணம்     புரிந்து
கொண்ட     பிறகும் கற்றல் என்னும் செயல்பாட்டில் ஈடுபட்ட
தன்மை புரிகிறது.

3.

தலைவன் பிரிவு     மேற்கொள்ளவே விரும்பாமல் தயங்கி
நிற்றலும், பிரிவை மேற்கொண்டு இடை வழியில் திரும்பி
வருதலும், பிரிந்து சென்ற     பிறகு பாசறையில் இருக்கும்போது
தலைவியை நினைத்துப் புலம்புதலும் கூறப்பட்டுள்ளன.


6.1.9 அகப்பொருள் மரபுகள்

நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப் பொருள் நூல் முழுமையும்
உற்று நோக்கும்போது அகப்பொருள் சார்ந்த பல்வேறு மரபுகளைக்
கோட்பாடுகளாக     கண்டு     உணர     முடிகிறது. அவற்றுள்
முதன்மைக்குரியவற்றை இனிக் காண்போம்.

(1)

அகப்பொருள் பாடல்களில்     இடம் பெறும் தலைவனது
இயற்பெயரைக் குறிப்பிடுதல் கூடாது.

(2)

பூத்தருதல், புனலிடைக்காத்தல், களிற்றிடமிருந்து காத்தல் என்னும்
சூழல்கள் வாய்க்கும்போது தலைவியிடம் தலைவன் தன் காதலை
வெளிப்படுத்துவான். இவையே களவுக்கான காரணங்களாக
அமைகின்றன.

(3)

தலைவியின்     உடல்     மற்றும் உள்ள     நலிவுக்கான
காரணங்களைக்     கண்டறிய முயலும்     பெற்றோர் வேலன்
என்பானை அழைத்து     வெறியாடுதல் என்னும் நிகழ்ச்சியை
நடத்துவர்.

(4)

தலைவன் தனக்குரிய     தலைவியை     மணந்துகொள்வதற்கான
சூழல் வாய்க்காதபோது மடலேறுதல்     என்னும் செயலை
மேற்கொள்வான்.     பனை     ஓலைகளால் செய்யப்பட்ட குதிரை
வடிவத்தை ஊர் நடுவே கொண்டு     வந்து நிறுத்தித் தனது
காதலைப் புலப்படுத்தி     அதன் மீது ஏறுவேன் என்று
தலைவன் கூறுவது அல்லது செய்வது மடலேறுதல் ஆகும்.

(5)

தலைவன்     தலைவியை     மணந்து கொள்வதற்கு முன்பு
ஆற்றலை     வெளிப்படுத்தும் செயல்பாடாக விடைதழாஅல்
என்னும் நிகழ்ச்சி நடைபெறும். இதை ஏறு தழுவுதல் என்று கூறுவர்.
ஆற்றல் மிகுந்த காளையை அடக்கி வீரத்தை வெளிப்படுத்தித்
தலைவியை மணந்து கொள்வது ஒரு வகை மரபாக அக்காலத்தில்
நிலவியது.

(6)

அகத்துறை     மாந்தர்களில் கூத்தர், பாங்கர், அறிவர்
ஆகியோர் அறிவுரை சொல்வதற்கு உரியவர்கள்.

(7)

கற்பியலில் இல்லறத்     தலைவி - தலைவனோடு சேர்ந்து
வாழும்     புணர்ச்சிக்கு     ஏற்புடையவளாகத் திகழ்கிறாள்
என்பதை     வெளிப்படுத்துவதற்கு     நெய்யாடுதல், வெள்ளணி
அணிவித்தல்,     செவ்வணி     அணிவித்தல்     முதலான
நிகழ்ச்சிகளை     அக்காலத்தில்     நடத்தி     உள்ளனர்.
ஒவ்வொன்றும் ஒரு     கால கட்டத்தில் தலைவியின் குறிப்பை
வெளிப்படுத்துவதற்கான குறியீடாக அமைந்துள்ளது.

(8)

தலைவி பூப்பெய்திய பின் பன்னிரண்டு     நாட்கள் தலைவன்
அவளைப் பிரியாது வாழ வேண்டும் என்னும்     குறிப்பை
வெளிப்படுத்தும் நாற்கவிராச நம்பி,     அது     மகப்பேறு
வாய்ப்பதற்கான     காலம்     என்னும் அறிவியல் சார்ந்த
குறிப்பையும் புலப்படுத்தியுள்ளார். இதுவே நலவியல் சார்ந்த
குறிப்பாகவும் அமைகிறது.

(9)

தமிழ்     இலக்கண மரபுப் படி துறவு என்பது மக்கெளாடு
மகிழ்ந்து     மனையறம் காத்து மிக்க காமவேட்கை தீர்ந்த
பிறகே மேற்கொள்ளப்படுவதாகும்.     தலைவன் தலைவியோடு
சேர்ந்தே     அத்துறவை மேற்கொள்ளலாம் என்பதையும்
இலக்கண நூலார் வலியுறுத்தியுள்ளனர்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.

அகமே தமிழ் என்பதற்குச் சான்று தருக.

2.

கருப்பொருள் எண்ணிக்கை வளர்ச்சியை விளக்குக.

3.

அகப்பொருள் மரபுகள் நான்கினை எழுதுக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:21:29(இந்திய நேரம்)