Primary tabs
-
3.1 செப்புத் திருமேனிகள்
உலோகப் படிமங்கள் அல்லது செப்புத் திருமேனிகள் இரண்டு விதமான முறைகளில் வார்க்கப் படுகின்றன. இவற்றில் ஒன்று கனமாகப் படிவங்களைக் கொடுப்பது (solid cast). மற்றொன்று கனப் பொள்ளலாக அதாவது உட்புறம் வெறுமையாய்க் கூடுபோன்று (hollow cast) வடிவமைப்பினைத் தருவது ஆகும்.
3.1.1 இலக்கியங்களில் செப்புத் திருமேனிகள்சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் இக்கலை பற்றிய செய்திகளைக் காணலாம். சேரலாதன் என்னும் சே மன்னன் முசிறியை வென்று அங்கிருந்த பொன்செய் பாவையை வைரத்தோடு கவர்ந்தான் என்று அகநானூறு (127) கூறுகிறது. நன்னன் என்பான் தன் காவல் மரத்தில் இருந்த மாங்கனி ஒன்று ஆற்றில் விழுந்து மிதந்து செல்ல, அதனை ஒரு பெண் எடுத்து உண்ண அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்தான். அப்பெண்ணின் தந்தை தனது மகளது எடைக்குச் சமமான எடை கொண்ட பொன் செய் பாவையைக் கொடுக்கிறேன் என்றான். நன்னன் அதைக் களோது அப்பெண்ணைக் கொலை புரிந்ததைக் குறுந்தொகைப் பாடல் ஒன்று(292) குறிப்பிடுகிறது.