தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருமேனிகள் வெளிப்படுத்தும் செய்திகள்

  • 3.3 திருமேனிகள் வெளிப்படுத்தும் செய்திகள்

         செப்புத் திருமேனிகள் அழகின் உருவங்களாகவும், புராணக் கதைகளை வெளிப்படுத்துவனவாகவும் உள்ளன. மேலும், அவை வரலாற்றுப் பின்னணியும், தத்துவ விளக்கமும் கொண்டுள்ளன. உதாரணமாக நடராசர் படிமத்தைக் கூறலாம். இது சிவபெருமானின் ஐந்து தொழில்களைக் குறிப்பதாகக் கொள்வர்.

         அதாவது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகும். உயிர்களின் நன்மைக்காக இறைவன் உலகத்தைப் படைத்து, காத்து, அழிக்கிறான். இவ்வாறு செய்வது அருள் காரணமாக, உயிர் பக்குவப்பட்டு வரும் வரை உண்மையை மறைத்து வைக்கிறான். இறுதியில் அருளைப் பொழிந்து உயிரை உய்விக்கிறான். இவ்வாறு சைவ சித்தாந்தம் விளக்குகிறது.

         நடராசரின் கைகளில் உடுக்கையும்     தீப்பிழம்பும் உள்ளன. உடுக்கை படைத்தலையும், தீ அழித்தலையும் குறிப்பிடுகின்றன. கீழ்வலதுகை ‘அஞ்ச வேண்டாம் (அபயம்)’ என்பதைக் காட்டுகிறது. இதுவே காத்தலைக் குறிப்பிடுகிறது. காலின் கீழுள்ள முயலகன் ஆணவத்துக்கும், அவன் மீது ஊன்றிய கால் மறைத்தலுக்கும் அடையாளம். தூக்கிய திருவடி அருளல் என்பதைக் குறிக்கிறது.

         விஷ்ணுவின் கைகளில் உள்ள சங்கு முதலியவையும் குறியீடுகளே. சங்கு நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாசம் ஆகிய ஐம்பூதங்களைக் குறிப்பதாகக் கருதுவர்; சக்கரம் பிரபஞ்சம் அனைத்தையும் குறிப்பதாகும். அவர் கையிலிருக்கும் கதை பிரபஞ்ச ஞானத்தைக் குறிப்பிடுகிறது. பத்மம் (தாமரை) உற்பத்தியாகி வளர்ச்சியடையும் உலகைக் குறிக்கின்றது. இராமாவதாரம் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இதனால்தான் சைவ சமயத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்த சோழர்கள் கூட இராமர் குழுச் செப்புத் திருமேனிகளை வார்த்தனர். இச்செப்புத் திருமேனிகள் கோயில்களில் உற்சவ மூர்த்திகளாகவும், திருவிழாக் காலங்களில் வீதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் இறையுருவங்களாகவும் பயன்படுத்தப்பட்டன.

    1.
    எந்த மன்னரின் ஆட்சிக் காலத்தில் இராமர் குழுச் சிற்பங்கள் முக்கியத்துவம் பெற்றன?
    2.
    முதலாம் இராசராசனின் காலத்துச் செப்புத் திருமேனிகளின் சிறப்புக் கூறு என்ன?
    3.
    சோழர் காலத்தினைச் சேர்ந்த பௌத்தத் திருமேனிகள் யாவை?
    4.
    சோழர் காலத்துத் திரிபுராந்தகர் செப்புத் திருமேனிகள் எங்கெங்கு உள்ளன?
    5.
    கால்மாறி ஆடிய நடராசர் செப்புத் திருமேனி பற்றிக் கூறுக.
    6.
    பாண்டியர் காலத்துச் சந்திரசேகரர் செப்புப் படிமங்கள் எங்கெங்கு உள்ளன?
    7.
    விசயநகர - நாயக்கர் காலத்தில் வடிக்கப்பட்ட முக்கியமான படிமங்கள் யாவை?
    8.
    நடராசர் செப்புத் திருமேனி வெளிப்படுத்தும் செய்தி யாது?
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:19:26(இந்திய நேரம்)