தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழ்க்கீர்த்தனையாளர் மூவர்

  • 4.1 தமிழ்க் கீர்த்தனையாளர் மூவர்

        தமிழில் முதன் முதலாகக் கீர்த்தனை பாடியவர்கள் முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாபிள்ளை ஆகிய மூவராவர். இவர்கள் "ஆதிமும்மூர்த்திகள்" என்று அழைக்கப்படுவார்கள்.

        "சங்கீத     மும்மூர்த்திகள்" என்று அழைக்கப்படும் சியாமாசாஸ்திரி, தியாகைய்யர், முத்துசுவாமிதீட்சிதர் ஆகிய மூவருக்கும் ‘ஆதிமும்மூர்த்திகள்’ காலத்தால் முற்பட்டவர்கள்.

        தமிழில் முதன் முதலாகக் கீர்த்தனை பாடிய மூவரும் எந்தக் காலத்தில் வாழ்ந்தனர்? இவர்கள் வாழ்ந்த காலத்தைக் கீழ்வருமாறு குறிக்கலாம்.

    முத்துத்தாண்டவர்
    கி.பி. 1525 - 1625 க்கு இடைப்பட்ட காலத்தவர்
    அருணாசலக்கவிராயர்
    கி.பி. 1711 - 1779
    மாரிமுத்தாபிள்ளை
    கி.பி. 1712 - 1787

    இம்மூவரில் காலத்தால் மூத்தவர் முத்துத்தாண்டவர். அருணாசலக் கவிராயரும் மாரிமுத்தா பிள்ளையும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.

    4.1.1 முத்துத்தாண்டவர் அறிமுகம்

        முத்துத்தாண்டவர் இயற்றிய பிரபலமான ஒரு கீர்த்தனையின் பல்லவியை இப்பொழுது கேட்கலாம்.

    இராகம் : மாயாமாளவகௌள தாளம் : ஆதி

    பல்லவி

    ஆடிக் கொண்டாரந்த வேடிக்கை காணக்கண்
    ஆயிரம் வேண்டாமோ ?

        சிதம்பர நடராசரின் அற்புதத் திருநடனத்தைக் கண்குளிரக் காண ஆயிரம் கண்கள் போதுமோ? என்று     பாடுகிறார் முத்துத்தாண்டவர். இவர் சிதம்பர நடராசர் மீது அளவில்லாத பக்தி கொண்டு பல கீர்த்தனைகள் பாடினார். இவற்றைப் பாடுவதற்கான இவரது வாழ்க்கைப் பின்னணியை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

    4.1.2 வாழ்க்கைப் பின்னணி

        சோழ வள நாட்டில் ஒரு சிவத்தலம். அதன் பெயர் சீர்காழி, தேவாரம் பாடிய ஞானசம்பந்தர் அம்பிகையின் ஞானப்பால் உண்ட புண்ணியத் திருத்தலம் இது. இங்கு தான் முத்துத்தாண்டவர் பிறந்தார். இவர் கி.பி. 1525 க்கும் 1625 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார்.

        தாண்டவர் என்பது இவரது இளமைக்காலப் பெயர். இசை வளோளர் குலத்தவரான இவரது குடும்பத்தினர் சீர்காழிக் கோயிலில் நாகசுர இசை வாசிக்கும் தொண்டு செய்தனர்.

    • உடற்பிணியும் பசிப்பிணியும்

        தாண்டவர் இளமையில் தீராத நோய் ஒன்றினால் துன்பப்பட்டார். எனவே குலத்தொழிலை அவரால் செய்ய முடியவில்லை. இதனால் குடும்பத்தார் இவரை வெறுத்து ஒதுக்கினார்கள். மனம் வருந்திய தாண்டவர் நாள்தோறும் கோயிலுக்குச்     சென்றார்.      தோணியப்பரையும் திருநிலைநாயகியையும் வழிபட்டார். கோயிலையே தஞ்சமாகக் கொண்டு தனித்து வாழ்ந்தார். உண்ண உணவில்லாது பல நாட்கள் பட்டினியாய்க் கழித்தார்.

    4.1.3 தாண்டவர் முத்துத்தாண்டவரானார்

        ஒருநாள் மாலை தாண்டவருக்குத் தாங்க முடியாத பசி, உடல் சோர்வுற்றது. கோயில் வாகனங்களை வைக்கும் ஒதுக்குப்புறமான இடத்தில் படுத்துக் கொண்டார். தன்னை மறந்து ஆழ்ந்து உறங்கினார்.

        பொழுது விடிந்தது. கோயிற் பூசாரியும் மற்றையோரும் கோயிற் கதவுளைத் திறந்து உள்ளே வந்தனர். கையில் கிண்ணத்தோடு அம்பிகையின் சந்நிதியில் தாண்டவர் நிற்கக் கண்டனர். ஆச்சரியத்தோடு எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

        அன்னஅமுது அளித்த அம்பிகை சிதம்பரம் போகும்படி சொன்னதாகவும் கூறினார். தாண்டவர் கையிலிருந்த பொற் கிண்ணமும்     முத்துப்போல் ஒளி பரப்பிய அவரது முகப்பிரகாசமும் உண்மையை உணர்த்தியது. எல்லோரும் மகிழ்ச்சியோடு அவரை, "முத்துத்தாண்டவர்" என அழைத்தனர். அன்று முதல் தாண்டவர் முத்துத்தாண்டவரானார். சீர்காழி அவர் பிறப்பிடமாதலால் சீர்காழி முத்துத்தாண்டவர் என்றும் அழைத்தனர்.

    4.1.4 முதல் கீர்த்தனை

        அம்பிகையின் திருக்கட்டளைப்படி     முத்துத்தாண்டவர் சீர்காழியிலிருந்து சிதம்பரம் சென்றார். நடராசப் பெருமான் திருநடனம் புரியும் சிதம்பரக் கோயிலைக் கண்டார். கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. பக்தி மேலிடக் கோயில் வாசலில் நின்று தொழுதார். அப்பொழுது அங்கு குழுமியிருந்த சிவ அடியார்கள் கூட்டத்தில் "பூலோக கைலாசகிரி" என்ற சொற்றொடர் அவர் காதில் கேட்டது. அம்பிகையின் அன்புக் கட்டளையை நினைத்துக் கொண்டார். உடனே அதே சொற்றொடரில் தொடங்கிப் பாடினார். பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்ட அக்கீர்த்தனை பவப்பிரியா இராகத்திலும்     மிச்ரஜம்பை     தாளத்திலும் அமைந்தது. இக்கீர்த்தனையின் பல்லவி இதுவாகும்.

    இராகம் : அபினா             

    பல்லவி

    பூலோக கைலாசகிரி சிதம்பரம் அல்லால்
    புவனத்தில் வேறும் உண்டோ?

    முத்துத்தாண்டவர் இக்கீர்த்தனையை முழுமையாகப் பாடி முடித்தார். உடனே அதுநாள் வரை அவரை வாட்டிய கொடிய நோய் மறைந்தது. கோயிற் பஞ்சாட்சரப் படிமேல் ஐந்து பொற்காசுகள் தோன்றின. படிக்காசு     பெற்ற முத்துத்தாண்டவர் பரவசமுற்றார். (பொன்னம்பல மேடைக்கு ஏறஉதவும் படிக்கட்டுகள் பஞ்சாட்சரப்படி என்று அழைக்கப்படும்)

    • நாளுக்கொரு கீர்த்தனை

        முதற் கீர்த்தனை பாடிய நாள்முதல் முத்துத்தாண்டவர் நாள்தோறும் சிதம்பரம் சென்றார். பக்தியோடு இறைவனை வழிபட்டார். அடியார்கள் கூட்டத்திடையே கேட்கும் முதல் சொல்லை வைத்துப் புதிதாக ஒரு கீர்த்தனை பாடினார். இவ்வாறு நாளுக்கொரு கீர்த்தனையாகப் பல இராகங்களிலும் தாளங்களிலும் ஏராளமான கீர்த்தனைகள் பாடினார்.

    • கிடைக்கும் கீர்த்தனைகள்

        ஏறக்குறைய எண்பது ஆண்டுகள் இம் மண்ணுலகில் வாழ்ந்தார் முத்துத்தாண்டவர். நாளுக்கொன்றாகப் பலநூறு கீர்த்தனைகள் பாடினார். இவற்றில் 85 பாடல்கள் மட்டும் இன்று கிடைக்கின்றன. அறுபது பாடல்கள் இறைவனை நேரடியாகப் பாடும் கீர்த்தனைகள். இருபத்தைந்து பாடல்கள் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற கீர்த்தனை அமைப்பில் அகப்பொருள் சார்ந்து விளங்கும். இவை இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் வைத்துப்பாடும் காதல் சுவைப் பாடல்களாகும். கருநாடக இசையில் இத்தகைய பாடல் வகை "பதம்" என்று அழைக்கப்படும்.

    • தாண்டவக் கீர்த்தனைகள்

        முத்துத்தாண்டவர் கீர்த்தனைகளில் பெரும்பாலானவை நடராசப் பெருமானின் ஆடலை வியந்து பாடும் வகையில் இருக்கும். இதோ பாருங்கள்! அவர் ஆசை எப்படிப்பட்டதென்று.

    "ஆரார் ஆசைப்படார் ? நின் பாதத்திற்கு
    ஆரார் ஆசைப் படார்."

        இந்த ஆசையை வெகுவாக மனதில் வளர்த்துக் கொண்டார் முத்துத் தாண்டவர். அதைப் பூர்த்தி செய்யும் வகையில் தன் பாட்டில் இறைவனை ஆட வைத்தார். எப்படி ? பாடலில் நாட்டிய ஜதிக்கோர்வைகளை அமைத்தார். ஜதிக் கோர்வையின் இறுதியில் "என" என்னும் சொல்லைச் சேர்த்துப் பல்லவியோடு இணைத்தார். உள்ளத்திலும் உருவத்திலும் இறைவன் ஆடுகிறான் என்ற உணர்வைக்     கொடுத்தார். இங்குப் பாருங்கள்! அவரது ஒரு கீர்த்தனையின் சரணப்பகுதி நாட்டிய ஜதிக்கோர்வைகளால் அமைந்து பல்லவியோடு சேர்கிறது.

    சரணத்தின் கடைசிப் பகுதி

    ததண தஜெணுத ததள தஜெணுத
    தத்தங் கிணதோம் ததிங் கிணதோம் என

    பல்லவி

    ஆடிய வேடிக்கை பாரீர் - ஐயன்
    ஆடிய வேடிக்கை பாரீர்.

    இவ்வாறு அமையும் கீர்த்தனைகள் "தாண்டவக் கீர்த்தனைகள்" எனப்படும். சிலர் "சொற்கட்டுக் கீர்த்தனைகள்" என்றும் சொல்வர்.

        சிவத்தாண்டவத்தைச் சித்திரிக்க ஜதிக்கோர்வைகளை முத்துத்தாண்டவர் கையாண்ட இம்முறையைப் பிற்காலத் தமிழ்க் கீர்த்தனையாளர் பலர் பின்பற்றினர். கோபாலகிருஷ்ணபாரதியார், நீலகண்ட சிவன், சுத்தானந்த பாரதியார், பாபநாசம் சிவன் முதலானோர் தாண்டவக் கீர்த்தனைகள் பாடியுள்ளனர்.

    4.1.5 புகழ் பெற்றவை

        முத்துத்தாண்டவர் பாடல்களில் சில இன்றளவும் பிரபலமாக உள்ளன. இசைக் கச்சேரிகளிலும் நாட்டியக் கச்சேரிகளிலும் இவை பாடப் பெறுகின்றன. பிரபலமான சில பாடல் விவரங்களை இங்குக் காணலாம்.

     
    பாடல் தொடக்கம்
    இராகம்
    தாளம்
    1.
    ஆடிக்கொண்டார்
    மாயாமாளவகௌள
    ஆதி
    2.
    அருமருந்தொரு
    காம்போதி
    ரூபகம்
    3.
    மாயவித்தை செய்கிறானே
    கரகரப்பிரியா
    ஆதி
    4.
    ஆடிய வேடிக்கை பாரீர்
    சாருகேசி
    மிச்ரஜம்பை
    5.
    தெருவில் வரானோ
    கமாசு
    ஆதி
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:30:36(இந்திய நேரம்)