6.5 தற்கால இசைக் கலைஞர்கள்
தற்காலத்தில் இசைக் கலைஞர்கள் மக்களால் பெரிதும்
பாராட்டப் பெறும் சிறப்புடையவராக வாழ்கின்றனர். இசை
ஆர்வலர்கள் இவர்களைப் பெரிதும் மதித்துப் போற்றி
வருகின்றனர். தமிழ்நாடு அரசும் மைய அரசும் மிகச்
சிறப்பான விருதுகளை வழங்கி வருகின்றன.
இசைக் கலைஞர்கள் பல புதிய முறைகளைக்
கையாண்டு இசையை வளர்த்து வருகின்றனர். இத்தகு
இசைக் கலைஞர்களை, வாய்ப்பாட்டுக் கலைஞர்கள்,
இறையருள் பாடகர், திரைப்படப் பாடகர், வில்லுப்பாட்டுக்
கலைஞர், வயலினிசைக் கலைஞர், மிருதங்கக் கலைஞர்,
வீணைக் கலைஞர், குழலிசைக் கலைஞர், கோட்டுவாத்தியக்
கலைஞர், முகர்சிங் கலைஞர், கடம் கலைஞர், சலதரங்கக்
கலைஞர், கஞ்சிராக் கலைஞர், ஆர்மோனியக் கலைஞர்,
கொன்னக்கோல் கலைஞர், நாகசுரக் கலைஞர், தவில்
கலைஞர்,கிளாரினெட் கலைஞர், நாட்டுப்புற இசைக் கலைஞர்
என்று வகைப்படுத்தலாம்.
வாய்ப்பாட்டுக்
கலைஞர்களை மிடற்றிசைக் கலைஞர்
என்பர். காஞ்சிபுரம் நாயனா , பிடாரம் கிருட்டிணப்பா,
பல்லவி சுப்பையா பாகவதர், தஞ்சாவூர் பொன்னையா
,மதுரை மணி்யய்யர், அரியக்குடி இராமானுச அய்யங்கார்,
சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை , எம்.எம்.தண்டபாணி தேசிகர்,
திருப்பாம்புரம் ந.சிவசுப்பிரமணிய பிள்ளை, திருவாரூர்
நமச்சிவாயம், எஸ்.ஜி.கிட்டப்பா, எம்.டி.இராமநாதன் போன்ற
மிகச் சிறந்த விற்பனர்கள் வாழ்ந்துள்ளனர்.
இவர்களைப் போல் எம்.எசு.
சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி, திருமதிகள்
இராதா ஜெயலட்சுமி, சரோஜா-லலிதா,
சேலம் செயலட்சுமி, சௌமியா போன்ற
பெண்மணிகள் மிகச் சிறந்த இசைக் கலைஞர்கள் ஆவர்.
தெய்வத்
தமிழ் பாடும் இறையருள் பாடகர்கள் பலர்
உள்ளனர். பித்துக்குளி முருகதாஸ், தருமபுரம் சுவாமிநாதன்,
குருவாயூர் பொன்னம்மாள், எம்.ஆர்.விசயா ,
திருத்தணி
சுவாமிநாதன், சீர்காழி திருஞானசம்பந்தம்,
மழையூர்
சதாசிவம், தஞ்சை ஞானமணி போன்றோர் இறையருள்
பாடகர்களாக விளங்குகின்றனர்.
திரை தந்த இசைக்
கலைஞர்கள் பலர் மக்களிடம்
பெரும் செல்வாக்குப் பெற்றவர்களாக விளங்குகின்றனர்.
எம்.கே.தியாகராச பாகவதர், பி.யு.சின்னப்பா, பி.சுசீலா,
டி.எம்.சௌந்தரராசன், சிதம்பரம் செயராமன், சீர்காழி கோவிந்தராசன்,
எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈசுவரி,
எசு.பி.பாலசுப்பிரமணியன் போன்றோர் விளங்குகின்றனர்.
தொன்மையான
கருவியான குழல்
கருவி
இசைத்துப் பெருமைப் பெற்ற பலர் உள்ளனர்.
பல்லடம்
சஞ்சீவிராவ், மாலி என்கிற மகாலிங்கம்,
என்.இரமணி,
டி.ஆர்,நவநீதம், வேதாரண்யம் கனகாம்புசம், சிக்கில் நீலா
குஞ்சுமணி, சோழபுரம்
சுப்பையா, பிரபஞ்சம்
சீதாராம் போன்றோர் உள்ளனர்.
அரிய நரம்பிசைக்
கருவிகளுள் கோட்டு
வாத்தியமும் ஒன்றாகும். இது வீணையிலிருந்து தோன்றிய
கருவியாகும்.
துரையப்ப பாகவதர், ஏ.நாராயணய்யர், சாவித்திரி
அம்மாள், திருவிடைமருதூர் சகாராமராவ், பூதலூர்
கிருட்டிண மூர்த்தி சாத்திரிகள் போன்றோர் சிறந்த
கலைஞர்களாக விளங்கினர். கோட்டு வாத்தியத்தில் துரித
காலத்தில் இசைப்பது கடினமாகும். இக்கலைஞர்கள்
இவற்றில் சிறந்து விளங்கினர்.
முகர்சிங்
ஓர் அற்புதமான கருவியாகும். இதனைச்
சிறந்த இலயக் கருவியாகக் கையாள்வர். இசைக்குழுவில்
அதிகமாகப் பயன்படுத்தப் பட்டும் வருகிறது. மன்னார்குடி
நடேச , ஆர்.வி.பக்கிரிசாமி, புதுக்கோட்டை எசு.மகாதேவன்,
குத்தாலம் வெங்கடேசன் போன்றோர் உள்ளனர்.
மண்குடத்தால்
ஆன கடம்
என்ற இலய இசைக்
கருவி இசைப்பவர்கள் அன்றும் இன்றும் உள்ளனர்.ஆலங்குடி
இராமச்சந்திரன், உமையாள்புரம் விசுவநாதய்யர்,
டி.எச்.விநாயகராம் போன்றோர் இக்கருவியால் பெயர்
பெற்றவர்கள் ஆவர்.
கஞ்சிரா
ஒரு தோற்கருவி. இலயக்
கருவி.
உடுமலைப்பேட்டை ஜி.மாரிமுத்தாபிள்ளை, கஞ்சிரா
அரிஹரன், வி.நாகராசன், திருச்சி தாயுமானவன் போன்றோர்
சிறந்த கலைஞர்கள் ஆவர்.
ஆர்மோனியம்
என்ற இசைக்கருவி நாடகக்
குழுவிலும், தெருக்கூத்திலும், இசைக் குழுவிலும் முக்கியமான
இசைக்கருவியாக விளங்குகிறது. ஆர்மோனியம் வாசிப்பதில்
முறையாகக் கற்றோரும், கேள்வி ஞானத்தால் பயின்றோரும்
உள்ளனர். முறையாகக் கற்றோரால் இக்கருவியிசை
மேம்பட்டது. சுப்பிரமணிய தீட்சிதர், தேவுடு அய்யர்,
பல்லடம் வெங்கடரமண ராவ் போன்றோர் சிறந்த இசைக்
கலைஞர்களாக விளங்கினர்.
மத்தளச் சொற்கட்டுக்களை
வாயால் சொல்லி
முழங்குவதனைக் கொன்னக்கோல் என்பர். திருச்சி வானொலி
நிலையத்தில் பணிபுரிந்த மிருதங்க இசைக்
கலைஞர்
தாயுமானவன். இவர் இவ்விசையில் தலைசிறந்த கலைஞராக
உள்ளார். இவர் திருக்கோகர்ணம் இசைவழி
வந்தவர்.
மன்னார்குடி பக்கிரியா பிள்ளை தலைசிறந்த கலைஞராக
விளங்கினார். தேவாரக் காலத்தில்
முழவுச் சொல்
முழங்குதலை வாய்முரி என்றனர்.
வில்லிசையின்
மூலம் மக்களை மகிழ்விப்பதோடு
மக்களுக்கு நல்ல அறிவுரைகளையும்,
கதைகளையும்
உரைக்கும் வகையில் கிராமியம் தந்த நல்ல கலைவடிவமாக
விளங்குவது வில்லுப்பாட்டாகும். தோவாளை சுந்தரம் பிள்ளை,
கோலப்ப பிள்ளை, பொட்டல் பொன்னுமுத்து நாடார், சாத்தூர்
பிச்சை குட்டி, சேவல்குளம் சி.தங்கையா, சுப்பு ஆறுமுகம்,
குலதெய்வம் இராசகோபால் போன்றோர் இக்கலை காத்த
செம்மல்களாக உள்ளனர்.
மேலைநாட்டு
நரம்பிசைக் கருவியாக விளங்கும்
வயலின் கருவியைக் கருநாடக இசைக் குழுவில் பக்க இசைக்
கருவியாகப் பயன்படுத்தினார்கள். இக்கருவியால் இசைப்
பயிரை வளர்த்த கலைஞர்கள் பலர் உள்ளனர். துவாரம்
வெங்கடசாமி , மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யர்,
திருக்கோடிகாவல் கிருட்டிணய்யர், திருவாலங்காடு
சுந்தரேசய்யர், மயிலாடுதுறை கோவிந்தராசு , மைசூர்
சௌடய்யா, கும்பகோணம் இராசமாணிக்கம் , லால்குடி
செயராமன், குன்னக்குடி வைத்தியநாதன், டி.என்.கிருட்டிணன்,
செல்வி கன்னியாகுமரி போன்றோரால் வயலின் இசை
மேம்பட்டது, மேம்பட்டும் வருகிறது.
மிருதுவான
அங்கமுடைய காரணத்தால் மிருதங்கம்
என்று பெயர் பெற்ற தோற் கருவியைப் பழங்காலத்தில்
தண்ணுமை என்பர். இது, இசைக்
குழுவில் இலயக்
கருவியாக விளங்கி வருகிறது.
இக்கருவியால் இசை
மழை பொழிந்து பெருமை பெற்ற இசைக் கலைஞர்களும்,
பெருமை பெற்று வரும் இசைக் கலைஞர்களும் உள்ளனர். இராமநாதபுரம் முருகபூபதி, பழனி சுப்பிரமணிய அய்யர்
உமையாள்புரம் சிவராமன், மைலாட்டூர் சாமி்யய்யர்,
திருக்கோகர்ணம் அரங்கநாயகி அம்மாள், பாலக்காடு மணி
அய்யர், பாலக்காடு ரகு, தஞ்சை உபேந்திரன்,
தஞ்சை
டி.கே.மூர்த்தி, வேலூர் இராமபத்திரன்
போன்றோர்
அவர்களில் சிலர்.
இசைக் கருவிகளின்
இராணியாக விளங்கும் வீணை
இசையை வளர்த்த கலைஞர்கள் பலர் உள்ளனர். வீணை
தனம்மாள், காரைக்குடி சாம்பசிவய்யர், தஞ்சை கோமதி
சங்கரய்யர், தஞ்சை கே.பி.சிவானந்தம், சாரதா சிவானந்தம்,
சிட்டி பாபு, எஸ்.பாலசந்தர், காயத்திரி, அரங்கநாயகி
இராசகோபாலன், இராசேசுவரி பத்மநாபன்,
சி.என்.தண்டபாணி, பிச்சுமணிய்யர் முதலியவர்கள் இதில்
சிறப்புப் பெற்றவர்கள்.
பல்வேறு அளவுள்ள பீங்கான்
கோப்பைகளில் நீரால்
நிரப்பிச் சுரங்களைக் குறிக்கும் வகையில் வைத்துக்
கொண்டு இருகரங்களிலும் குச்சிகளைக் கொண்டு கொட்டி
இசையை எழுப்புவர். இதனைச் சலதரங்கம் என்பர்.
சலம் = நீர் என்ற பொருள் தரும் வடசொல். தரங்கம் =
நீரலைகளின் அதிர்வு. நீர் நிரம்பியுள்ள பீங்கான்களின்
மூலம் ஓசையை உண்டாக்கல். மதுரை டி.சீனிவாசையங்கார்,
காமகோடிபாய் போன்றோர் சிறந்த கலைஞர்களாக விளங்கினர்.
நாட்டுப்புற
மக்கள் தந்த நல்ல இசை வடிவங்களான
ஏற்றப் பாடல், கரகப்பாட்டு, தெம்மாங்குப் பாட்டு,
கும்மிப்
பாடல், தெருக்கூத்துப் பாடல்கள், கோலாட்டப்
பாட்டு,
காவடியாட்டப் பாட்டு போன்றவற்றைப் பாடிப் புகழ் கண்ட
கலைஞர்கள் விசயலட்சுமி நவநீதகிருட்டிணன், கொல்லங்குடி
கருப்பாயி போன்றோர் உளர்.
- நாகசுரக்
கலைஞர், தவில் கலைஞர்
நாகசுரக் கலைஞர்கள்
பற்றியும் தவில் கலைஞர்கள்
பற்றியும் மங்கல இசை என்ற
பாடப் பகுதியில்
கூறப்பட்டுள்ளது.
கிளாரினெட்
ஒரு மேனாட்டு இசைக் கருவியாகும்.
நாகசுரக் கருவி அமைப்பில் அமைந்தும், துளைகள்
பொத்தான்களால் மூடியும் இருக்கும். இது ஒரு
துளைக்கருவி. ஐரோப்பாவில் சலூமியா என்னும் ஒரு
வகைக் குழலினின்றும் இக்கருவி தோன்றியது. இக்கருவி
தமிழகத்தில் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களின்
கையாளுமையால் செவ்வியல் கருவியாகப்
பயன்படுத்தப்படுகிறது. ஏ.கே.சி.நடராசன், ந.இராதாகிருட்டினன்
ஏ.கே.சி.வேணுகோபால், பி.ஆர்.மணி போன்றோர் இக்கருவி
இசையை மேம்படுத்திய வல்லுநர்கள் ஆவர்.
இவ்வாறு பல்வேறு வகையான இசைக் கருவிகளைக்
கையாண்ட இசைக் கலைஞர்களும், குரலிசைக்
கலைஞர்களும் இசை மேதைகளாக விளங்கி உள்ளனர்.
வாழையடி வாழையென வரும் திருக்கூட்ட மரபினோர்போல்
இக்கலைஞர்கள் உள்ளனர். குருகுலமுறையில் கற்று குருவின்
மரபினைப் பின்பற்றி, மேலும் புத்தம் புதுநிலைகளைக்
கையாண்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் மேதைகளாக
விளங்கி வருகின்றனர்.