தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.2 தற்கால நாடக வளர்ச்சி

  • 3.2 தற்கால நாடக வளர்ச்சி

    நாடக மேடை அமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள் நாவல் கதைகளைக் கொண்டு உருவாகிய நாடகங்கள், தேசியம், திராவிடம் முதலான இயக்கங்கள் தங்கள் கொள்கைப் பரப்பிற்காக உருவாக்கிய நாடகங்கள், அதன் பின்னர் ஏற்பட்ட நாடக முயற்சிகள் ஆகியன குறித்து இப்பகுதியில் காண்போம்.

    3.2.1 நாடக மேடை அமைப்பில் வளர்ச்சி

    தொழில் முறை நாடக வளர்ச்சியால் நாடக மேடையை ஆடம்பரத்துடன் அமைக்கும் நிலையும் தோன்றியது.

    • கன்னையா

    திரு கன்னையா தமது ‘ஸ்ரீ கிருஷ்ண விநோத சபா’ மூலம் சம்பூரண ராமாயணம் தசாவதாரம், கிருஷ்ணலீலா முதலான பல புராண நாடகங்களைப் பின்திரை அமைப்பு, உடைகள், மேடைப் பொருட்கள் முதலானவற்றில் கவனம் செலுத்தி நிகழ்த்தினார். மேடையில் காட்சிக்கு ஏற்றவாறு குதிரை, தேர், காளை முதலானவற்றைக் கொண்டு வந்துவிடுவார். பத்துலாரி அளவு அரங்கப்பொருட்களை     இவர் வைத்திருந்தார். காட்சிச் சிறப்பிற்காகவே இவரது நாடகங்கள் விரும்பிப் பார்க்கப்பட்டன. இவரது தசாவதாரம் நாடகம் 1008 நாட்கள் நடைபெற்றது ஒரு சாதனை எனலாம்.

    • நவாப் ராஜமாணிக்கம்

    நவாப் ராஜமாணிக்கம் தமது ‘பாலவிநோத சங்கீத சபா’வின் மூலம் பிரம்மாண்டமான தந்திரக்காட்சிகளை உருவாக்கிக் காட்டினார். நதி பிளந்து வழிவிடுவது, மழை பெய்வது, பூட்டு தானே திறந்து கொள்வது எனப் பல தந்திரக் காட்சிகளைக் காட்டினார்.     அத்துடன் நேரக்கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றைக் கலைஞர்களிடம் வலியுறுத்தினார். இவரது குழுவிலுள்ள நாடகக் கலைஞர்களுக்கு இசை, நடனம் முதலானவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது. இவருடைய தசாவதாரம், இராமாயணம், ஐயப்பன், ஏசுநாதர் முதலான நாடகங்கள்ஆயிரம் முறைக்கு மேல் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன. இவருடைய இராமாயணம் நடந்த இடத்திற்கு ‘இராமாயணம் ஸ்டாப்’ என்றே பேருந்து நிறுத்தப் பெயர் இருந்தது.

    இந்தத் தொழில்முறை பயில்முறை நாடகக் குழுக்களால் புராண இதிகாசக் கதைகள், மேலை நாட்டுநாடகங்கள், சமஸ்கிருத நாடகங்கள் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு, தழுவல் என நாடகங்கள் நடத்தப்பட்டன.

    3.2.2 மொழி பெயர்ப்புகள்

    19 ஆம் நூற்றாண்டின் நாடக வளர்ச்சியில் பிறமொழி நாடகங்களைத் தமிழாக்கம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஷேக்ஸ்பியரின் பல நாடகங்கள் தமிழாக்கப்பட்டன. ‘Merchant of venice’ என்பதை வேணுகோபாலாச்சாரியார் மொழிபெயர்த்தார். இவரே நாடக மொழிபெயர்ப்பு முன்னோடி எனலாம். ‘Two Gentle men of Verona’ என்பதை இராமசாமி அய்யங்கார் ‘கருணாசாகரன்’ என்று தமிழாக்கம் செய்தார். Midsummer Night’s Dream என்ற நாடகத்தை நாராயணசாமிப் பிள்ளை ‘வேனிற்காலத்து நள்ளிருட் கனவு’ என்றுமொழி பெயர்த்தார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை 1891இல் லிட்டன் பிரபுவின் ‘Secret way’ என்ற கதைப்பாடலைக் கொண்டு மனோன்மணீயம் நாடகத்தை ஆக்கினார். மோலியரின் ‘லே அவர்’ என்ற பிரஞ்சு நாடகத்தை அய்யாசாமி முதலியார் ‘உலோபி’ என்ற பெயரில் மொழிபெயர்த்தார். லெட்சுமணசாமிப் பிள்ளை, சோபக்லீசின் ‘பிலோக்டிட்டஸ்’ நாடகத்தை லீல நாடகம் என்று தமிழாக்கினார். சங்கரதாஸ் சுவாமிகள், பரிதிமாற் கலைஞர், சம்பந்த முதலியார் முதலானோரும் மொழிபெயர்ப்பு நாடகங்களை படைத்திருக்கின்றனர்.

    3.2.3 நாவல்கள் நாடகமாதல்

    சுதந்திரப் போராட்ட அலைவீச்சால் சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் மறுமலர்ச்சிச் சிந்தனைகள் முதலானவை உருவாயின. பல நாவல்களும் நாடகங்களும் இந்த அடிப்படையில் உருவாயின. சமூக நாவல்கள் பெற்ற வரவேற்பினால் நாவல்கள் பல     நாடகமாக்கப்பட்டன.     ஜே.ஆர். ரங்கராஜு வின் இராஜேந்திரா, சந்திர காந்தா, ஆனந்த கிருஷ்ணன், ராஜாம்பாள் முதலான நாவல்களை கந்தசாமி முதலியார் நாடகங்களாக்கினார். வரதட்சணைக் கொடுமை, பண்டாரங்களின் போலித்தனம், குழந்தை மணத்தின் கொடுமை முதலான செய்திகளை இந்நாடகங்கள் புலப்படுத்தின. சாமிநாத சர்மா தாகூரின் நாவலை ‘ஜீவ பாலன்’ என நாடகமாக்கினார். இது விலங்குகளைப் பலியிடுவதைச் சாடுகிற நாடகம்.

    3.2.4 தேசிய இயக்க நாடக முயற்சிகள்

    இருபதாம்     நூற்றாண்டின்     தொடக்கத்தில் வ.உ.சி. சுப்பிரமணிய சிவா முதலானவர்களின் முயற்சியால் விடுதலை எழுச்சி உருவாயிற்று. முதல் தேசிய நாடகம் என்பது 1894 இல் க.கோபாலாச்சாரி எழுதிய ‘ஸ்ரீ ஆரிய சபா’ என்பதாகும். காங்கிரஸ் அமைப்பின் நோக்கம், பணி, கோரிக்கைகள் ஆகியவற்றை உரையாடல் மூலம் இந்நாடகம் விளக்கியது. ஐந்து அங்கமாகவும் ஒவ்வோர் அங்கத்திலும் இரண்டு களங்களுமாக நாடகம் உருவாக்கப்பட்டது.

    ஹோம் ரூல் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் முதலானவற்றின் கருத்துகளைப் பரப்ப நாடகங்கள் பல எழுதப்பட்டன.     பாரதியாரின்     விடுதலைப் பாடல்கள் நாடகங்களில்     பாடப்பட்டன. விடுதலைப் பாடல்கள் எழுதுவோராக மதுரகவி பாஸ்கரதாஸ், உடுமலை முத்துசாமிக் கவிராயர் முதலானோர் உருவாயினர். ரவுலட் சட்ட எதிர்ப்பு, ஜாலியன் வாலாபாக் படுகொலைக் கண்டனம், ஒத்துழையாமை இயக்கத்தை வாழ்த்தல் என விடுதலைக் கருத்துகள் பாடல்களில் பரப்பப்பட்டன. எஸ்.எஸ். விசுவநாததாஸ், எஸ்.ஜி.கிட்டப்பா முதலானோர் விடுதலைப் பாடல்களை நாடக மேடைகளில் பாடினர். புராண நாடகமாயினும் பாத்திரங்கள் தேசியப் பாடல்களைப் பாடுவது மரபாயிற்று. இடைவேளைகளிலும் நடிகர்கள்     தோன்றி     இப்பாடல்களைப் பாடினார்கள். பின்பாட்டுக்காரர்களும் இவற்றைப் பாடினார்கள்.

    தேசியச் சின்னங்களான காந்தி குல்லாய், சர்க்கா, மூவர்ணம் முதலானவற்றையும் நாடகத்தில் இடம்பெறச் செய்தார்கள். விடுதலைப் போராட்ட முழக்கங்களும் பயன்படுத்தப்பட்டன. நடிகர் சங்கம் ஏற்பட்ட பின் நடிகர்கள் நேரடியாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கதர் ஆடை அணிந்தனர். தேசியத்தலைவர்களுக்கும் நடிகர்களுக்கும் நெருங்கிய தொடர்பு நிலவியது.     தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர், டி.கே.எஸ். சகோதரர்கள் முதலானவர்கள் தேசிய நாடகத் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

    3.2.5 திராவிட இயக்க நாடக முயற்சிகள்

    தேசிய இயக்கத்தின் பின்னர்த் தோன்றிய திராவிட இயக்கம் தனது கருத்துகளைப் பரப்ப நாடகங்களைப் பயன்படுத்திக் கொண்டது. சமூகச்சீர்திருத்தம், மூட நம்பிக்கை எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, இதிகாச எதிர்ப்பு, தனித்திராவிட நாடு, பெண்கல்வி, பெண் முன்னேற்றம், கைம்மை மறுமணம், சீர்திருத்த மணம், தமிழ்வளர்ச்சி, கலை வளர்ச்சி எனப் பல உள்ளடக்கங்களைத் திராவிட இயக்கத்தினர் தம் நாடகங்களில் இடம்பெறச் செய்தனர். இவர்கள் புராண வரலாற்றுக் கதைகளையும்     கருத்துப் பரப்பலுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். ஆரியப் பண்பாட்டை மறுத்துத் தமிழ் பண்பாட்டை நிறுவும் முயற்சிகள் இவர்களது நாடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன.

    பாரதிதாசன், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ப.கண்ணன், ஏ.கே.வேலன், தில்லை வில்லாளன், சி.பி. சிற்றரசு, இரா,செழியன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி,     முரசொலிமாறன், எஸ்.எஸ்.தென்னரசு, இராதா மணாளன், திருவாரூர் தங்கராசு முதலானோர் திராவிட இயக்கக் கொள்கைகளைப் புலப்படுத்தி நாடகங்களை     எழுதினர். இந்த நாடகங்கள் பொது மேடைகளிலும் கட்சி மாநாடுகளிலும் நடத்தப்பட்டன. திராவிட இயக்கத் தலைவர்களில் பலர் இந்நாடகங்களில் நடித்தனர். இந்நாடகங்களில் சில திரைப்படங்களாகவும் ஆயின. திராவிட இன மேன்மையும் ஆரிய எதிர்ப்பும் தமிழ்ப்பற்றும் பாரதிதாசனின் நாடகங்களில் வலியுறுத்தப்பட்டன. ஆரிய எதிர்ப்பும் மூடநம்பிக்கை எதிர்ப்பும் தமிழ்ப்பற்றும் அரசியல் பிச்சாரமும் திராவிட இயக்க நாடகங்களின் மையங்கள் எனலாம்.

    3.2.6 தேசிய திராவிட இயக்க நாடகங்களுக்குப் பிந்தைய வளர்ச்சி

    தேசிய நாடகங்களின் தேவை விடுதலைக்குப் பின் அற்றுவிட்டது. திராவிட இயக்கம் தேர்தலில் ஈடுபட்டு வெற்றி கண்டு ஆட்சி அமைத்தவுடன் திராவிட இயக்க நாடகங்களின் தேவையும் அற்றது. இச்சூழலில் தொழில் ரீதியாகவும் பயில்முறையாகவும் அமைந்த நாடகக்குழுக்கள் மேடை நாடகங்களை வளர்த்தன. கல்வி நிறுவனங்களில் நாடகம் பாடமாக     ஆக்கப்பட்டமையால் படிக்கும் நாடகங்கள் எழுதப்பட்டன. மனோன்மணீயம் நாடகம்     பாடமாக ஆக்கப்பட்டதால் அதே பாணியில் பல கவிதை நாடகங்கள் படைக்கப்பட்டன. வானொலி தொடங்கியவுடன் வானொலி நாடகம்     என்னும் கேட்கும் நாடகம் உருவாயிற்று. தொலைக்காட்சி தொடங்கியவுடன் சிறு நாடகங்களாகவும் தொடர் நாடகங்களாகவும் தொலைக்காட்சி நாடகங்கள் உருவாயின. மேடை நாடகங்களில் நகைச்சுவை நாடகங்களும் பொழுதுபோக்கு நாடகங்களுமே வரவேற்புப்பெற்றன.

    சபா நாடக முயற்சிகளுக்கு எதிர்நிலையில் பல நாடக இயக்கங்கள் உருவாகியிருக்கின்றன. அரசியல் ரீதியாகவும் சமூகவியல் ரீதியாகவும் இன்று பல புதிய நாடக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை சோதனை நாடகங்களாகவும் வீதி நாடகங்களாகவும் அமைந்துள்ளன. தெருக்கூத்துப் பாணியில் நாடகங்களை வளர்க்கும் முயற்சிகளும் உள்ளன.

    தேசிய நாடகப்பள்ளி உருவாக்கப்பட்டிருக்கிறது. நாடகப் போட்டிகள், கலை இரவுகள், பிரச்சாரங்கள் என நாடகங்கள் நடத்தப்படுகின்றன. பல்கலைக்கழகங்களில் நாடகக் கல்வி தரப்படுகிறது. நாடக இலக்கண நூல்கள் உருவாகியுள்ளன. நாடக ஆய்வுகள் பெருகுகின்றன. சிற்றிதழ்கள் நாடக முயற்சிகளை உருவாக்குகின்றன.

    • மூவகை வளர்ச்சி

    இன்று தமிழ் நாடகங்கள் மூவகைச் செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. எழுத்தாக இல்லாமல் வழிவழியாகக் கேள்வி ஞான முறையில் ஆட்டம் பாட்டம் இசை உரையாடல் ஆகியவற்றின் துணையுடன் சமூக நிகழ்த்து கலையாகத் தெருக்கூத்து செயல்படுகிறது. ஆங்கிலேய ஆதிக்கத்தின் காரணமாகவும் நடுத்தர வர்க்கத்தின் எழுச்சியின் காரணமாகவும் உருவாகித் தொழில் முறையாகவும் பயில் முறையாகவும் நடத்தப்படும்     மேடை நாடகங்கள் செயல்படுகின்றன. கருத்துப்பரிமாற்றத் தொடர்பு என்பதை மையப்படுத்திச் சிந்தனையாளர்களின் உருவாக்கத்தில் நிகழ்த்து கலையாகச் சோதனை நாடகங்களும், வீதி நாடகங்களும் செயல்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:40:15(இந்திய நேரம்)