Primary tabs
-
3.6 சோதனை நாடகம்
வழக்கமான பொழுதுபோக்கு மிகை உணர்வுநிலை நகைச்சுவை ஆகியவற்றின் வணிகத்தன்மையான செயல்பாடுகளுக்கு எதிராக, நிகழ்த்துநர்-பார்வையாளர் நேரடியாகப் பரிவர்த்தனை செய்யும் வகையில் மக்களுக்கு உணர்த்த வேண்டிய கருத்துக்களையும் தீவிரமான வாழ்க்கை மதிப்புகளையும் கலாச்சார மதிப்புகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் உருவாக்கக்கூடிய சோதனை நாடக முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. வணிகப்பத்திரிகைகளுக்கு எதிராக உருவான சிறுபத்திரிகை முயற்சியை இதனுடன் ஒப்பிடலாம். இது மூன்றாம் அரங்கு என அழைக்கப்படுகிறது.
3.6.1 சோதனை நாடக எழுச்சிக்கான காரணங்கள்
பொதுவாக நாடகங்கள் தொடக்கம் உச்சம் வீழ்ச்சி முடிவு என்பதான நேர்கோட்டு வடிவில் அமைந்திருந்தன; சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் குறைநிறைகளை எடுத்துக்காட்டுவனவாகவும் இருந்தன. நேர்கோட்டு அமைப்பிலிருந்து மாறி ஒப்பனை, மேடையமைப்பு, நடிப்புமுறை, காட்சியமைப்பு, வசனம் என அனைத்திலும் மாற்றம் கொண்ட நாடகங்கள் சோதனை நாடகங்களாக உருவாக்கப்பட்டன. சமூக அரசியல் காரணங்களாலும் தத்துவார்த்தத் தேடல்களாலும் படைப்பாளன் மனநிலையில் ஏற்படும் கலகத்தன்மை சோதனை நாடகங்களை உருவாக்கியது எனலாம். மேலை நாட்டு மேடைக்கலையுடன் நாட்டுபுற நாடக மரபுகளும் இணைக்கப்பட்டன. பார்வையாளர்களுக்கும் நடிகர்களுக்குமான இடைவெளி குறைக்கப்பட்டது. பல அர்த்தங்களைத் தரும் வகையில் நாடகங்கள் நடத்தப்பட்டன. இன்றைய தலையாய பிரச்சினைகளுக்கு இந்நாடகங்களில் இடம் தரப்பட்டது.
3.6.2 சோதனை நாடக இயக்கங்கள்
மேடை அமைப்பு, ஒப்பனை முதலானவற்றின் ஆதிக்கத்தைப் புறந்தள்ளி நாட்டுப்புறவியல் ஈடுபாட்டுடனும் தேசிய இனம் பற்றிய பற்றுதலோடும் நாடக இயக்கங்கள் உருவாயின. பரிக்க்ஷா, கூத்துப்பட்டறை, வீதிநாடக இயக்கம், நிஜ நாடக இயக்கம் முதலான இயக்கங்கள் புதிய வகை நாடகங்களை நிகழ்த்தின. இதைத்தொடர்ந்து தேடல், அக்னி, முச்சந்தி, மௌனக்குரல், தலைக்கோல், அரூபம் முதலான பல குழுக்கள் உருவாகின. இவை நடத்திய நாடகங்கள் சோதனை நாடகங்களாக அமைந்தன. அரங்கத்தில் நடத்தாமல் எங்காவது கூடியிருக்கும் மக்கள் மத்தியில் திடீரென்று நடத்தப்படும் நாடகங்களை வீதி நாடகங்கள் அல்லது தெரு நாடகங்கள் என்கிறார்கள்.
மனித வாழ்க்கையிலுள்ள அபத்தங்களை வெளிப்படுத்துதல், சமகாலப் பிரச்சினைகளை அலசுதல், அரசியல் சமுதாயச் சீர்கேடுகளை எடுத்துக்காட்டுதல், தனிமனித உரிமைக்குக் குரல்கொடுத்தல், பழைய புராண நிகழ்வுகளில் சமகாலப் பிரச்சினையைக் காணல், இன்றைய வாழ்வின் துன்பங்கள் சிக்கல்கள் முதலானவற்றைப் புலப்படுத்துதல் என்பன இந்நாடகங்களின் அடிப்படைகளாகின. பெரும்பாலும் குறியீடுகளாலும் உருவகமாகவும் இக்கருத்துகள் புலப்படுத்தப்படுகின்றன.
3.6.3 சோதனை நாடகப் படைப்புகள்
இந்திரா பார்த்தசாரதி, சே.ராமானுஜம், ஞாநி,மு.ராமசாமி, அ.ராமசாமி, ஜெயந்தன், ஞானராஜசேகரன், ந.முத்துசாமி, பிரபஞ்சன், அம்பை, கே.ஏ.குணசேகரன், இன்குலாப், பிரமிள் முதலான பலர் குறிப்பிடத்தக்க நாடகங்களைப் படைத்தவர்கள். மழை, கொங்கைத்தீ, பிணம் தின்னும் சாத்திரங்கள், போர்வை போர்த்திய உடல்கள் (இந்திராபார்த்தசாரதி), பயங்கள் (அம்பை), நாற்காலிக்காரர் கட்டியங்காரன் சுவரொட்டிகள், காலம் காலமாக அப்பாவும் பிள்ளையும், நற்றுணையப்பன் (ந.முத்துசாமி), ஏன், பலூன், ஸ்ரீமான் பொது ஜனம் (ஞானி), முட்டை (பிரபஞ்சன்), சாட்சியின்மையைத் தோண்டியெடுத்தல் (நிஜந்தன்), மனுஷா மனுஷா (ஜெயந்தன்) வரிசை (கே.எஸ். ராஜேந்திரன்), ஊர்வலம் (கங்கைகொண்டான்), பலியாடுகள் (கே.ஏ.குணசேகரன்), காத்திருத்தல் (அசோக மித்திரன்), ஒளவை, குறிஞ்சிப்பாட்டு (இன்குலாப்), நட்சத்திரவாசி (பிரமிள்) முதலான நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
பாதல் சர்க்கார், சங்கரப்பிள்ளை, பிரக்ட், காம்யூ முதலான பிற மொழி நாடக ஆசிரியர்களின் படைப்புகளும் தமிழில் நிகழ்த்தப்பட்டன. பிறகொரு இந்திரஜித், துர்க்கிரக அவலம், ஆண்டிகனி, மீடியா, கலிலியோ, குட்டி இளவரசன், நிரபராதிகளின் காலம், கொடுங்கோலர்கள், காட்டுநாகம் முதலான பிறமொழிப் படைப்புகள் குறிப்பிடத்தக்கன
3.6.4 வீதி நாடக இயக்கம்
தமிழகத்தில் தெருக்கூத்துகள் வீதிகளில் நடைபெற்றதை நாம் அறிவோம். இன்றைக்கும் சில பகுதிகளில் கூத்துகள் நிகழ்த்தப்படுகின்றன. மேடைநாடகத்தின் வருகையால் கூத்துகள் ஒடுங்கிவிட்டன. சோதனை முயற்சிகளின் உச்சத்தால் நாடகங்கள் முற்றிலும் மேடையைப் புறக்கணித்து வீதியிலும் பொது இடங்களிலும் நடத்தப்பட்டன. இவற்றை வீதி நாடகங்கள் தெரு நாடகங்கள் என அழைத்தார்கள். தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வீதி நாடகக் குழுக்கள் உருவாகியுள்ளன. மக்களை நாடக அரங்குகளுக்கு வரவழைக்காமல் மக்களிடமே நாடகங்கள் சென்ற மாற்றம்தான் வீதி நாடகத்தின் விளைவு. சனநாயக அரசியல் இயக்கங்கள் வீதி நாடகத்தை வலுவான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. இடதுசாரிக் குழுக்கள் இளைஞர் அமைப்புகள், கலாச்சார அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், அறிவியல் இயக்கம் என்பவை பிரச்சார நோக்கத்துடன் வீதி நாடகங்களைப் படைத்து நடத்துகின்றனர். எழுத்தறிவின் தேவை, உழைப்பின் இன்றியமையாமை, அறிவியல் உணர்வு, பாராட்டு உணர்வு, அரசியல் விழிப்புணர்வு, அன்றாடப் பிரச்சினைகள் குறித்த தெளிவு ஆகியன பற்றிய நாடகங்களை இவர்கள் நடத்துகிறார்கள். பெரும்பாலும் இவை ஓரங்க நாடகங்களாகவே அமைகின்றன.
வீதி நாடகம் என்பது போர்ப்பண்பு மிக்க ஒரு கலை வடிவம். திட்டவட்டமான ஓர் அரசியல் மாற்றத்தை முன்வைப்பதாக வீதி நாடகம் அமைகிறது. இது மக்களுக்கானது என்பதால் மக்கள் நாடகமாகவும் இருக்கிறது. அகஸ்டோ, பாதல்சர்க்கார், சப்தர் ஆஸ்மி முதலானவர்களும் வீதி நாடகத்தின் தன்மைகளை உருவாக்கியவர்கள். ‘வீதி நாடக இயக்கம்’ என்றே ஒரு நாடகக் குழு இயங்குகிறது. செம்மலர்க்கலைக் குழுவினர், நெம்பு கோல் அமைப்பு, தன்னானே கலைக்குழு, தளவாட அரங்கம், ஆழி நாடகக் குழு எனப் பல நாடகக் குழுக்கள் வீதி நாடகங்களை நடத்தி வருகின்றன.
3.6.5 தலித் அரங்கு
1990களின் இடையில் தலித் அரங்கு எனும் முயற்சி உருவாகியுள்ளது. தலித் இன விடுதலைக்குப் போராடுபவர்கள் நடிகர்களாகவும் படைப்பவர்களாகவும் இருந்து இதனை வளர்க்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களின் இசை, இசைக்கருவிகள், ஆடல் பாடல் இவையெல்லாம் இணைந்ததாகத் ‘தலித் அரங்கு’ உருவாகியுள்ளது. ராசா ராணி ஆட்டம், பறை ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம் முதலான கலைவடிவங்களையும் தலித் அரங்கு பயன்படுத்திக் கொள்கிறது. தீண்டாமை, இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை, தாழ்த்தப்பட்டோர் உயர்வு முதலான கருத்துகள் இவற்றின் வாயிலாகப் புலப்படுத்தப்படுகின்றன. கே.ஏ. குணசேகரனின் சத்திய சோதனை, பலியாடுகள் முதலானவையும் ரவிக்குமாரின் ‘வார்த்தை மிருகம்’ ஜீவாவின் பிரதிகள் முதலானவையும் குறிப்பிடத்தக்க தலித் நாடகங்கள். ஆதிக்க வர்க்கத்தினரின் வாழ்வியல் முறைகளையும் பண்பாட்டு முறைகளையும் விமரிசிக்கும் நோக்கிலும் நையாண்டி செய்யும் தன்மையிலும் இவை அமைகின்றன. தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்குவது எவ்வளவு இழிவானது என்பதை எடுத்துககாட்டுவனவாகவும் இவை அமைகின்றன. வட்டார மொழியைக் கையாள்வதும் ஆடம்பரமேடை முறையை மாற்றி எளிமை அரங்காக அமைப்பதும் இவற்றின் போக்காக உள்ளது. உண்மைச் சம்பவங்களையும் வரலாறுகளையும் தலித் அரங்கு படைத்துக்காட்டுகிறது. ஒருவகையில் எதிர் அரங்காகவும் இது செயல்படுகிறது; கலக அரங்காகவும் செயல்படுகிறது.
3.6.6 பின் நவீனத்துவ அரங்கு
தமிழின் சோதனை நாடகங்கள் அரங்கக் கலையில் புதுமை செய்தன. இவற்றின் வடிவச்சீர்மையிலிருந்து மாறுபட்ட நாடகங்களும் உருவாக்கப் பட்டன. நவீன நாடகங்களின் போக்கை மறுக்கும் இது பின் நவீனத்துவ அரங்கு எனப்படுகிறது. இந்நாடகங்களின் வடிவத்தில் நேர்கோடற்ற தன்மை, நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியின்மை, இருண்மையான மொழிநிலை ஆகியன காணப்படுகின்றன. இவை பின் நவீனத்துவ வெளிப்பாட்டால் உருவானவை. இதுவரையான நாடகங்கள் மொழியின் வரையறுத்த அர்த்தங்களுடன் ஒற்றைத்தன்மையில் உருவாக்கப்பட்டவை; முதலாளித்துவ அதிகாரத்துவ சமூகத்தின் விளைச்சலாகவும் இருப்பவை. இவற்றின் மொழி உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக இருக்கிறது. ஆகவே உடலையே மொழியாக ஆக்கும் வகையில் மொழியின் ஆதிக்கத்தை குறைக்கும் நாடகப்பிரதிகளை பின்நவீனத்துவ அரங்கு படைக்கிறது. இவற்றில் மொழி கையாளப்பட்டாலும் அது பன்முக அர்த்தங்களைத் தரும் வகையில் பயன்படுத்தப்படும். இந்த அடிப்படையில் உடலுக்கு மிகுதியாக வாய்ப்பளித்துப் பின்னணிக்குரல்கள் சிலைடுகளின் துணையுடன் செய்திகளைப் புலப்படுத்துவதும் கூட்டு இயக்கங்கள் மூலமாகச் சொல்வதும் இந்நாடகங்களின் இயல்பாக உள்ளது. எம்.டி.முத்துகுமாரின் ‘சைபீரிய நாரைகள் இனி இங்கு வரப்போவதில்லை’, பிரேதா பிரேதனின் அமீபாக்களின் காதல், ஆதியிலே மாம்சம் இருந்தது, உயிர்ச்சூழல், நிலவு அறைக்குள் அடைப்பட்ட மூன்று மெடுலாக்கள், புதிர்வட்டப் பாதைகளின் நான்காம் பரிமாணம் முதலான நாடகங்கள் இத்தகைய தன்மையில் படைக்கப்பட்டுள்ளன. எஸ். ராமகிருஷ்ணனும் இப்புதிய போக்கில் நாடகங்களைப் படைத்திருக்கிறார்.