தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.1 கரகாட்டம்

  • 6.1 கரகாட்டம்

        கரகாட்டம் தமிழ் நாட்டின் தலை சிறந்த நாட்டுப்புற நடனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. கரகம் என்ற சொல் நூல்களில் இடம் பெறுகிறது. தொல்காப்பியத்தில்,

        நூலே கரகம் முக்கோல் மனையே
         (தொல், பொருள், இளம், நூற்பா, 615)

    என்னும் நூற்பாவில் கரகம் என்னும் சொல் துறவிகள் வைத்திருக்கும் நான்கு பொருள்களில் ஒன்றாகிய கமண்டலத்தைக் குறிக்கிறது. எட்டுத்தொகை நூற்களில் ஒன்றாகிய புறநானூற்றில்,

        நீரற வறியாக் கரகத்து (புறம். 1)

    என வருகிறது. இதற்குக் “குண்டிகை” என்று உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர். குண்டிகை என்பது கரகம் போல, வாய்ப்புறம் குவிந்த ஒரு கலத்தையே குறிக்கிறது.

        சிலப்பதிகாரத்தில்     மாதவி ஆடிய பதினொரு ஆடல்களில் “குடக்கூத்து” என்னும் ஒருவகை ஆடல் கரக ஆடலை ஒத்துக் காணப்படுகிறது. மேலும் பெரியாழ்வார் திருமொழியிலும் இவ்வகை ஆடல் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது.

        மண், செம்பு, பித்தளை போன்றவைகளால் வாய்ப்புறம் குவிந்தும், அடிப்புறம் பெருத்தும் காணப்படும் குடம் “கரகம்” எனப்படும். நீர், அரிசி, மணல் போன்றவைகளால் நிரப்பப்பட்டு வாய்ப்புறத்தை மூடி அலங்கரிக்கப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கைகளால் பிடிக்காமல், நையாண்டி மேள இசைக்கு ஏற்ப ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும்.

        தொன்மையான இந்தக் கரகாட்டக் கலையைக் குறித்துப் பல கதைகளும், நம்பிக்கைகளும் நிலவி வருகிறன. இக்கலை மாரியம்மனின் வழிபாட்டுக் கலையாக இருந்து வருகிறது. இத்தகைய தொன்மை மிக்க இக்கலை தற்காலத்தில் பாமர மக்களின் ஆட்டக்கலையாக மாறியது.

    6.1.1 கரகமெடுத்தல்

        மாரியம்மன் எனப்படும் பெண் தெய்வத்திற்கான வழிபாட்டில் கரகமெடுத்தல் என்னும் சடங்கு நிகழ்ச்சி தொன்றுதொட்டு நிலவி வருகிறது. தூய்மையான மண் கலத்தில் மஞ்சள் நீர், பால், அரிசி போன்ற பொருள்களை நிரப்பி வேப்பிலை, மாவிலை முதலிய தழைகளைச் செருகி அதன் வாய்ப் பகுதியில் ஒரு தேங்காயைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்து இக்குடத்தைத் தலையில் சுமந்து சென்று அம்மனை வழிபடுவர். கரகக் குடத்தில் நிரப்பப்படும் பொருள்கள் அவரவர்களின் வேண்டுதலையொட்டி அமையும். புனிதப் பொருள்கள் நிரப்புதல் என்ற செயலால் அம்மனே குடத்தில் வந்து பொருந்தி இருப்பதாகப் பாவித்துக் கொண்டு, அதனைத் தலையில் சுமந்து சென்று வழிபடுதல் என்னும் தெய்வச் சடங்கே கரகமெடுத்தல் என்றழைக்கப்படுகிறது. பூங்கரகம் எடுப்பதாக வேண்டிக் கொண்டவர்கள் புதுமட் குடத்தின் மேல் சுண்ணாம்பு நீராலும், செம்மண்ணாலும் அழகான கோலங்கள் வரைந்து அதில் மஞ்சள் நீர் ஊற்றிப் பானையைச் சுற்றிப் பல நிறப் பூக்களால் அலங்கரித்து, அக்குடத்தைத் தலையில் சுமந்து சென்று அம்மனை வழிபடுதல் பூங்கரகம் எடுத்தல் எனப்படும்.

        இருவகைக் கரகமுறை வழக்கில் உள்ளது.

    • சக்திக் கரகம்
    • ஆட்டக்கரகம்

    • சக்திக்கரகம்

        கோவில் திருவிழாவின் பொழுது, பூசாரி கரகத்தை அலங்கரித்துத் தன் தலையில் சுமந்து வருதல் சக்திக் கரகம் எனப்படும். பூசாரி கரகத்தைச் சுமந்து கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்ப ஆடி வருவார்.

    • ஆட்டக்கரகம்

        நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு செம்புக் கரகத்தைத் தலையில் வைத்துக் கைகளால் குடத்தைப் பிடிக்காமல் நையாண்டி மேள இசைக்கு ஏற்ப உடலை வளைத்தும், குனிந்தும், நிமிர்ந்தும் ஓடியும் நடை போட்டும் ஆடுகையில், தலையிலுள்ள கரகம் கீழே சாய்ந்து விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளப்படுகிறது.

        பொதுமக்கள் அவையில் கரகம் ஆடும் பொழுதும் ஆடுபவர்கள் மாரியம்மனை வணங்கியபடி தலையில் கரகத்தை எடுத்து வைத்து ஆடுவர். தலையில் ஒரு கரகத்தை மட்டும் வைத்து ஆடாமல் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு கரகங்களை அடுக்கி வைத்து அவைகளைத் தலையில் வைத்துக் கைகளால் பிடிக்காமல் ஆடுவர்.

        இந்நடனத்தில் புதுப்புது உத்தி முறைகளைப் பயன்படுத்தி ஆடி வருகின்றனர். கரகத்தைத் தலையில் வைத்துக் கொண்டு விறுவிறுப்பான அடவுகளைச் செய்வர். அவ்வாறு ஆடினாலும் தலையிலிருந்து கீழே விழாமல் சமன் செய்து கொண்டு ஆடுகின்றனர். கரகம் ஆடுபவர் எப்படி உடலை வளைத்து ஆடினாலும், அந்தக் கரகம் கீழே விழாதவாறு ஆடுவர்.

        முதலில் ஆண்களே மிகுதியாக இக்கரகாட்டக் கலையை நிகழ்த்தி வந்தனர். தற்பொழுது பெண்கள் மிகுதியாகப் பங்கேற்று ஆடுகின்றனர். பல்வேறு விதமான அடவுகளை ஆடுவது மட்டுமல்லாமல், கரகம் தலையில் சுமந்து இருக்கும் பொழுது கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு நீண்ட கத்தியால் மற்றொருவர் மார்பில் வைக்கப்பட்ட வாழைக்காயை வெட்டுதல், தேங்காய் உடைத்தல், கண் இமைகளை மூடிக் கொண்டு ஊசிநூல் கோத்தல் முதலிய சிறுசிறு சாகச வேலைகளையும் செய்து காட்டுவர்.

    6.1.2 அமைத்தலும் ஒப்பனையும்

        கரகம் எவ்வாறு அமைக்கப்படுகிறது, கரகம் ஆடுபவர் எத்தகைய ஒப்பனை செய்து கொள்கின்றனர் என்பவற்றை இனி பார்ப்போம்.

    • அமையும் முறை

        கரகத்தின் அடிப்பாகத்தைச் சமனாகத் தட்டி அரிசி அல்லது மணலைக் கரகச் செம்பில் நிரப்புகின்றனர். கரகத்தின் மேற்புறம் தேங்காய் செருகி வைப்பது போல, கட்டையைச் செருகி வைப்பர். செம்பையும், கட்டையையும் நன்றாகப் பிணைத்துக் கட்டுவர். கட்டையின் மேல் சிறு துளையிட்டு மூங்கிலைச் செருகி அதன் மேல் ஒரு கிளிப் பொம்மையைச் செருகி இருப்பர். கரகத்தைத் தலையில் சுமந்து சுழன்று ஆடும்பொழுது கிளி பறப்பது போல அழகாக இருக்கும். கரகத்தின் மேல் பொருத்தப்பட்ட மரக்கட்டையைச் சுற்றிப் பல வண்ண வண்ணக் காகிதப் பூக்களும், மணிகளும் கொண்டு அலங்கார வேலை செய்யப் பட்டிருக்கும். கரகச் செம்பின் வாய்ப் புறத்தில் பொருத்தப்பட்ட கட்டையின் கூர் முனையில் “பேரிங்கு” எனப்படும் சுழலும் இயந்திரத்தைப் பொருத்தி, அவர்கள் சுழலும் போது கிளி நன்றாகச் சுழலும்படி அமைத்து ஆடுகின்றனர். கரகச் செம்பின் மேல் கண்ணாடிகளாலும், மரப் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட கரகக் கூடுகள் பொருத்தப்பட்டுக் கரகச் செம்பு அழகுடைய பொருளாக மாற்றப்படுகிறது.

        தஞ்சை, சென்னை, சேலம், மதுரை போன்ற இடங்களில் கரகாட்டக் கலை நடைபெற்று வருகிறது. மதுரைப் பகுதியில் பழமை மாறாமல் கரகாட்டம் ஆடப்பட்டு வருகிறது. தஞ்சை, சென்னை, சேலம் போன்ற பகுதிகளில் கரகத்தைத் தலையில் சுமந்து கொண்டு, ஏணிமேல் ஏறுதல் போன்ற பல நவீன முறைகளைக் கையாண்டு வருகின்றனர்.

    • ஒப்பனை முறை

        கரகாட்டம் ஆடுபவர் முகத்திற்கு நன்கு பளபளப்பான முறையில் ஒப்பனையைச் செய்து கொள்கின்றனர். பெண்கள் உடலோடு     ஒட்டி ஆடைகளை அணிகின்றனர். இந்த ஆடைகளைப் பளபளப்பான நிறத்தில் அணிந்து கொள்கின்றனர். காலில் பரத நாட்டியக் கலைஞர்களைப் போலச் சலங்கை அணிந்து ஆடுகின்றனர்.

    6.1.3 இசைக்கருவிகள்

        கரகாட்டத்திற்கு நையாண்டி மேளம் பக்க இசையாக நிகழ்த்தப்படுகிறது. நையாண்டி மேளத்தில் இரு நாகசுரம், இரு தவில்களும் முதன்மை இசைக்கருவியாகவும், பம்பை, உறுமி, கிடுகிட்டி, கோந்தளம் போன்ற இசைக் கருவிகள் பக்க இசையாகவும் பயன்படுகின்றன. இப்பக்க இசையில் நாகசுரக் கலைஞர்கள் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து கொண்டும் ஆட்டக் கலைஞர்களுடன் இணைந்து ஆடியும் நிகழ்த்துவதால் இந்தப் பக்க இசை (பக்க வாத்தியம்) நையாண்டி மேளம் என்று அழைக்கப்படுகிறது. தொன்மைமிகு குடக் கூத்து இன்று கரகாட்டமாக ஆடப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:45:54(இந்திய நேரம்)