Primary tabs
-
6.2 காவடியாட்டம்
கரகாட்டத்தைப் போலக் காவடியாட்டம் நாட்டுப்புற ஆட்டக் கலையாகும். இது முருக வழிபாட்டிற்குரிய கலையாகத் திகழ்கிறது. எடை மிகுந்த பொருள்களைத் தண்டின் இரு முனைகளிலும் சமமாகக் கட்டி இறைவனை வேண்டி ஆடிப் பாடி ஆடுவது காவடியாட்டம் ஆகும்.
சங்க இலக்கிய நூற்களில் ஒன்றான புறநானூற்றில் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் போது தங்களுடைய பொருள்களை ஒரு தண்டின் இரு முனைகளிலும் கட்டிச் சென்றனர் என்ற குறிப்புக் காணப்படுகிறது. ஒளவையார் தமது உடைமைகளை இது போன்று தண்டில் கட்டிச் சென்றார் என்று புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது.
காவினெம் கலனே (புறம். 206)
புறநானூற்றின் பாடலில் இடம் பெறும் “கா அல்லது காவுதல்” என்னும் சொல் இரு முனைகளிலும் எடைகளைக் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு தண்டினைத் தோளில் வைத்துச் சுமத்தல் என்னும் பொருளில் வந்துள்ளது. காவுத் தண்டு அல்லது காவுதடி என்னும் சொற்கள் காவடியின் தண்டு அல்லது காவடித்தண்டு என்றாயிருக்கலாம் என்று தமிழ்க் கலைக் களஞ்சியம் குறிப்பிடுகிறது. இச்சொல்லே பின்னர்க் காவடி என்று சுருக்கமாக வழங்கப்படுகிறது.
காவடியாட்டம் இரு முறைகளில் ஆடப்படுகிறது.
- பக்திக் காவடியாட்டம்
- ஆட்டக் காவடியாட்டம்
முருகனை வழிபடும் பக்தர்கள் தாங்கள் முருகனுக்குப் படைக்கும் பொருள்களைத் தோளில் சுமந்து, முருகனை நினைத்துப் பாடி ஆடி நேர்த்திக் கடனைச் செலுத்துவது பக்திக் காவடி எனப்படும். புராணத்தில் காவடி சுமப்பதைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. முருகனின் அடியவனாகக் கருதப்படும் இடும்பன் முருகனை வழிபடத் தன் தோளில் இரு பக்கமும் இருமலைகளைக் கட்டிச் சுமந்து வந்தான் என்று கூறப்படுகிறது. அதே போல் முருகனை வழிபடும் பக்தர்கள் பங்குனித் திருநாளில் தங்கள் காணிக்கைகளைத் தோளில் சுமந்து காவடிச் சிந்து பாடல்களைப் பாடிக் கொண்டு “அரோகரா” என்று சொல்லிய வண்ணம் சுமந்து செல்வர்.
முருகனை வழிபட வரும் அடியவர்கள் ஒரு தண்டின் இரு முனைகளின் பக்கத்திற்கு ஒன்றாகப் பூக்களால் இரண்டு மூங்கிற் கூடைகளைக் கட்டித் தொங்க விட்டுச் சுமந்து கொண்டு வரும் காவடி “பூக்காவடி” அல்லது “பூங்காவடி” என்று அழைக்கப்படுகிறது. அதே போல் பால் நிரம்பிய இருகுடங்களைக் கட்டி வருவது “பால்காவடி” என்றும், உணவு தானியங்களை அல்லது சமைத்த உணவைக் கட்டிச் சுமந்து செல்வது “அன்னக் காவடி” என்றும் அழைக்கப்படுகின்றன.
இவ்வழிபாட்டு முறை கழுகு மலையிலும், பழனி, திருப்பரங்குன்றம், சுவாமி மலை, திருத்தணி, திருச்செந்தூர் முதலிய அறுபடை வீடுகளிலும் காணப்படுகிறது.
- ஆட்டக் காவடி
முருகனின் வழிபாட்டுச் சடங்காகக் கருதப்பட்ட இக்காவடியாட்டம் பொதுமக்கள் கண்டு களிக்கும் ஆட்டக் கலையாகவும் விளங்குகிறது. ஒரு தண்டின் இரு முனைகளிலும் இரு பலகைகளைப் பொருத்தி அந்தப் பலகைகளின் மேற்புறத்தை மூங்கில் பட்டைகளால் இணைத்து அதன்மேல் பட்டுத் துணியை இணைத்துக் கட்டுகின்றனர். இருமுனைகளிலும் மயிலிறகு செருகப்பட்டு தோளில் வைத்து, காவடி ஆடப்படுகிறது இக்காவடியாட்டம் கோவில் திருவிழாக்களில் முக்கியமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டில் தலை சிறந்த நாட்டுப்புறக்கலை வடிவமாகத் திகழ்ந்து வருகிறது.
நாட்டுப்புறக் கலையான காவடியாட்டம் தனியாக ஆடப் பெறுவதில்லை. கரகம், பொய்க்கால் குதிரையுடன் சேர்ந்து ஆடப்படுகிறது. காவடியாட்டக் கலைஞர் ஒரு காவடியைத் தம் உடலின் தலை, நெற்றி, காது, கண், மூக்கு, முதுகு, கழுத்து, முன்புறக்கைகள், வயிறு போன்ற பல்வேறு உடல் உறுப்புகளில் நிறுத்தி முன்னும் பின்னும் ஆட்டுகின்றனர். மேலும் முதுகில் காவடியை இருத்தி அடவுகளைச் செய்து கொண்டே, காவடியைத் தலைக்குக் கொண்டு வருவர். மேலும் தலையில் காவடி வந்தவுடன் கையால் பிடிக்காமல் காவடியைச் சுழற்றுவர். இவ்வாறே நெற்றி, கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளும் வைத்துச் சுழலவிடுவர். இவை அனைத்தும் அடவுகளோடு சேர்ந்து ஆடப்படும்.
காவடி ஆட்டத்தின் போது ஐந்து வித முறைகள் பின்பற்றப்படுகின்றன.
- காவடியை ஏதேனும் உறுப்பில் வைத்து மேலும், கீழும்
ஆட்டுதல்.
- ஓர் உறுப்பின் மேல் காவடியை வைத்து, கைகளால்
பிடிக்காமல் மேலும், கீழும் அசைத்து, கால்களில் வட்டமாக
அடவுகளை ஆடுதல்.
- காவடியைக் கையைத் தவிர்த்து ஏனைய உறுப்புகளின் மீது
இருத்தி ஆடுதல்.
- காவடியைக் கையில் பிடித்துக் கொண்டு ஆடுதல்.
- காவடியை ஓரிடத்தில் வைத்து விட்டு, தனியாக அடவுகளைச் செய்தல் என்ற ஐந்து முறைகள் இக்காவடியாட்டத்தின்போது பின்பற்றப்படுகின்றன.
காவடியாட்டத்தில் கரகாட்டத்தைப் போலவே பல வியப்பூட்டும் செயல்கள் செய்யப்படுகின்றன. பல பேர்கள் தாங்கி நிற்கும் ஏணியின் ஒவ்வொரு இடை மூங்கிலுக்கும் இடையில் புகுந்து உயரத்தை அடைந்தவுடன் இரு ஏணிக்கால்களிலும் உடலைக் கிடத்தி முதுகு, வயிற்றுப் பகுதியில் காவடியை வைத்துச் சுழல விடுவர். மேலும் இரு ஏணிக்கால்களிலும் கால்களை வைத்துத் தலையில் கரகத்தைச் சுழல விடுவர். அவ்வாறு சுழலும் போது ஒரு காலை மட்டும் தூக்கி நிற்பர். பிறகு ஏறியது போல, மீண்டும் இடையில் புகுந்து, பழைய நிலைக்கு வருவர்.
6.2.3 இசைக்கருவிகள்கரகாட்டத்தைப் போல, காவடியாட்டத்திற்கும் நையாண்டி மேளமே பக்க இசையாக இசைக்கப்படுகிறது. இது இரண்டு நாகசுரம், இரண்டு தவில், ஒரு ஒத்து, இரண்டு பம்பை, ஒரு கிடுகிட்டி, ஒரு உறுமி, ஒரு தமுக்கு போன்ற இசைக் கருவிகளைக் கொண்டு விளங்குகிறது. காவடியாட்டத்தில் காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, கிளிக் கண்ணி, மகுடி போன்ற பல மெட்டுக்களுடன் கூடிய நாட்டுப்புற இசைப் பாடல்கள் இடம் பெறுகின்றன.
நையாண்டி மேள இசைக்கு ஏற்பக் காவடியாட்டம் நிகழ்த்தப்படுகிறது. நையாண்டி மேள இசைக்கு ஆட முடியாத இடத்தில், காவடியை அசைத்துத் தாளத்திற்கு ஏற்ப அமைப்பர். இவ்வாறு காவடியாட்டம் ஒரு வழிபாட்டுக் கலையிலிருந்து மாறி அனைவரும் சுவைக்கும் ஓர் ஆட்டக் கலையாகவும் விளங்கி வருகிறது.
1.மாதவி ஆடிய 11 வகை ஆடல்களில் குடக்கூத்துடன் தொடர்புடைய கூத்து எது?2.கரகமுறை எத்தனை வகைப்படும்?3.கரகாட்டக் கலை நடை பெற்று வரும் இடங்களில் மூன்றினைக் குறிப்பிடுக.4.காவடியாட்டம் எந்தத்தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளது?5.காவடியாட்டத்தில் நடைபெறும் இசைப்பாடல்கள் சிலவற்றைக் கூறுக.6.கரகாட்டக் கலையில் இடம் பெறும் இசைக்கருவிகள் பற்றி உரைக்க.7.கரகம் பற்றிப் புறநானூறு குறிப்பிடுவது யாது?8.காவடியாட்டம் ஆடும் முறையில் ஒன்று கூறுக.9.காவடி என்ற சொல்லின் பிறப்பு நிலை கூறுக.10.காவடியாட்டத்தின் இருவகைகளைக் கூறுக.