Primary tabs
-
1.0. பாட முன்னுரை
தமிழகத்தில் தோன்றி வளர்ந்த சமயங்களுள் தொன்மையும் முதன்மையும் பெற்று விளங்குவது சைவ சமயம் ஆகும். இச்சமயத்தின் தெய்வம் சிவன் என்ற பெயரால் போற்றி வணங்கப் பெறுகிறது. இத்திருப்பெயர் செம்மை என்னும் தமிழ்ச் சொல்லின் அடியாகப் பிறந்த பெயராகும். திருநாவுக்கரசர், "சிவன் எனும் நாமம் தனக்கே உரிய செம்மேனி அம்மான்" எனக் குறிப்பிடுகிறார். சிவனை வழிபடுவதால் சைவம் என்று சமயத்திற்குப் பெயர் வழங்கிற்று.
பழந்தமிழர் தெய்வ நம்பிக்கையுடையவராக வாழ்ந்தனர். அந்நம்பிக்கை வழி தெய்வத்தைப் போற்றுவதும், தெய்வத்திற்கு வழிபாடு செய்வதும் காலங்காலமாக நடைபெற்று வருகின்றன. இவ்வழிபாடு அச்சத்தின் அடிப்படையில் தோன்றியது என்பது முடிவாகும். அதாவது தொன்மைக் காலத்து மக்கள் கடல்கோள், புயல், நிலநடுக்கம் முதலான இயற்கை இடையூறுகளையும், புலி முதலிய விலங்குகளால் ஏற்படும் இடர்களையும் எண்ணி அஞ்சினர். இடையூறுகளைப் போக்கத் தம்மைக் காட்டிலும் மலோன பொருளின் துணையை நாடினர். அந்த மலோன துணைதான் தெய்வம் என வழங்கலாயிற்று. அத்தெய்வத்தை நம்பி அச்சத்திலிருந்து தாங்கள் மீள வழிபாடுகளை மக்கள் செய்தனர். வழிபாடு செய்யும் பொழுது வழிபடப் பெறுகின்ற தெய்வங்களுக்கு அடையாளங்களாகத் திருவுருவங்களைக் கொண்டனர். திருக்கோயில்களை ஏற்படுத்தினர். எனவே தெய்வ நம்பிக்கையும் வழிபாடும் தமிழ் மக்களிடையே பழங்காலத்திலேயே ஏற்பட்டு இன்றுவரை விரிந்தும், பரந்தும் வழங்கியிருக்கின்றன. இந்நிலையில் சிவ வழிபாட்டின் தொன்மையான வரலாற்றினை இப்பாடத்தின் மூலம் அறிய உள்ளோம்.