தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

1.3- சங்கம் மருவிய காலத்தில் சிவ வழிபாடு

  • 1.3 சங்கம் மருவிய காலத்தில் சிவ வழிபாடு


        சங்க காலத்திற்குப் பிறகு உள்ள காலத்தை இலக்கிய
    ஆராய்ச்சியாளர்கள் சங்கம் மருவிய காலம் என்றும் காப்பிய
    காலம் என்றும் குறிப்பிடுவர். கி.பி.2ஆம் நூற்றாண்டிலிருந்து
    கி.பி.6ஆம் நூற்றாண்டுவரை இந்தக் காலத்தைக் குறிப்பிடலாம்.
    இந்தக் காலக் கட்டத்தில் தமிழகத்தில் களப்பிரர் என்ற மரபினர்
    ஆட்சி புரிந்தனர். இக்காலக் கட்டத்தில் தமிழகத்து வரலாற்றில்
    அதிகமான செய்திகளைப் பெற முடியவில்லை. இருப்பினும்
    கி.பி.2ஆம் நூற்றாண்டில் தோன்றிய இரட்டைக் காப்பியங்களான
    சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அந்தக் காலத்து மக்களின்
    வாழ்வியல் முறைகளைத் தருகின்றன. சங்க கால மக்கள்
    ஐவகை நிலங்களில் ஐவகைத் தெய்வங்களை வணங்கி
    முதன்மைத் தெய்வங்களான சிவனையும், திருமாலையும்
    வணங்கிப் போற்றியும் வந்தனர். ஆனால் அடுத்து வந்த காப்பிய
    காலத்தில் வட ஆரியரின் தலையீட்டால் பல தெய்வ
    வழிபாடுகளும் நம்பிக்கைகளும் தோன்றின. மேலும் வைதிக
    சமயங்களுக்கு எதிராகச் சமணமும் பௌத்தமும் மிக வேகமாக
    நிலைத்துவளரத் தொடங்கின. பழந் தமிழகத்தில் சமண மதத்தை
    விசாக முனிவர் என்பவரும் அவர் வழித் தோன்றிய
    சீடர்களும் தீவிரமாகப் பரப்பினர். அதுபோல அசோகரின்
    சமயத் தூதுவர்கள் பௌத்த சமயத்தைத் தமிழகத்தில்
    பரப்பினார்கள்.    இரு     சமயங்களும்     வடநாட்டில்
    தோன்றியிருந்தாலும் தமிழகத்திலும் அவை போற்றப்பட்டு
    வந்தன. அந்த அடிப்படையில் தான் இந்தக் காலக்கட்டத்தில்
    சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தோன்றின. அந்த
    இரண்டு காப்பியங்களிலும் காணப்படுகின்ற சிவ வழிபாட்டுச்
    செய்திகள் சுருக்கித் தரப்படுகின்றன. இரு காப்பியங்களும்
    வேற்றுச் சமய நூல்களாக இருந்தாலும் அவற்றிலும் சிவ
    வழிபாட்டுச் செய்திகள் இடம் பெற்றுள்ளன என்பதை மறுக்க
    இயலாது.

    1.3.1 சிலப்பதிகாரத்தில் சிவ வழிபாடு

        இயற்கைத் தெய்வங்களான ஞாயிறு, திங்கள், மழை
    இவற்றைப் போற்றுகின்ற வாழ்த்துப் பகுதிகள் சிலப்பதிகாரத்தின்
    தொடக்கத்தில் இறை வாழ்த்துப் போல் அமைந்துள்ளன. மேலும்
    தமிழ்நாட்டில் நிலவிய சமயங்களையும் அவற்றை மக்கள் மதித்து
    ஒழுகிய திறத்தையும் சிலப்பதிகாரம் தெளிவாக விளக்குகிறது.
    சிலப்பதிகாரம் தன்னுடைய காதையில் ஒன்றான குன்றக்
    குரவையில் குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகவேளின்
    வழிபாட்டைக் கூறுகிறது. ஆய்ச்சியர் குரவையில் முல்லைநிலத்
    தெய்வமான திருமால் வழிபாடு கூறப் பெற்றுள்ளது. இந்திரவிழவூ
    ரெடுத்த காதை
    யில் மருதநிலத் தெய்வமான இந்திரன் வழிபாடு
    கூறப் பெற்றுள்ளது. கானல்வரியில் நெய்தல் நிலத் தெய்வமான
    வருணன் வழிபாடும், வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடும்
    கூறப் பெற்றுள்ளன.

        குன்றக் குரவையில் முருக வழிபாட்டினுடைய செய்திகள்
    அனைத்தும் சைவ சமய வழிபாட்டின் அடிப்படையிலேயே கூறப்
    பெற்றுள்ளன. மேலும் இக்காதையில் சிவபெருமான் ஆலமரத்தின்
    கீழ் அமர்ந்து முனிவர்களுக்கு அறம் உரைத்து அருளியதும்,
    சிவபெருமான் கயிலை மலையில் வீற்றிருப்பதும், மலையரசன்
    மகளாகிய உமையவளை மணந்ததும் குறிக்கப் பெற்றுள்ளன.
    ஊர்காண் காதையில், மதுரை நகரில் சிவபெருமானாம்
    திருஆலவாயான் திருக்கோயிலில் நான்மறை ஓசைகள் முழங்கின
    என்ற செய்தி குறிக்கப் பெறுகிறது. சிவபெருமானைப் “பிறவா
    யாக்கைப் பெரியோன்” என்றும், “நுதல்விழி நாட்டத்து இறைவன்”
    என்றும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. சிவ பெருமானைக்
    குறிக்கின்ற     பொழுதெல்லாம்     பிற     தெய்வங்களுக்கு
    முதன்மையானவனாகவே சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. எனவே
    சிலப்பதிகாரக் காலத்தில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட
    முதன்மை வழிபாடு சிவவழிபாடே என்பது பெறப்படுகிறது.

        பண்டைக் காலத்தில் அரசர்கள் போருக்குச் செல்லுகின்ற
    பொழுது சிவபெருமான் சூடிய வஞ்சிமாலையை அணிந்து
    செல்லும் வழக்கம் இருந்தது. இதைச் சிலப்பதிகார ‘வஞ்சிக்
    காண்டம்’ செங்குட்டுவன் மூலமாகக் குறிப்பிடுகிறது. வட ஆரியர்
    மீது போர் தொடுத்துச் செல்லும் செங்குட்டுவன்,

        நிலவுக் கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
        உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி
        மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
                (கால்கோள் காதை : 55-57)

    புறப்பட்டான் என்று சிலப்பதிகாரக் கால்கோள் காதை
    குறிப்பிடுகிறது. செங்குட்டுவன் நடத்திய போரில் தோற்றவர்கள்
    உடல் முழுவதும் முழுநீறு பூசிய சிவனடியார்கள் போலவே
    தங்களை மாற்றிக் கொண்டு ஓடினார்கள் என்று குறிப்பிடுகின்ற
    செய்தியால் சிலப்பதிகாரக் காலத்தில் திருநீறு பூசி, சிவனை
    வழிபடும் வழக்கம் இருந்தமை உறுதியாகிறது. இது போலச்
    சிவபெருமானுடைய கொடுகொட்டிக் கூத்தினைச் சிலப்பதிகாரம்
    கடலோடு காதையில்,

        உமையவள் ஒருதிற னாக ஓங்கிய
        இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும் (42 - 43)

    என்று குறிப்பிடுகிறது. எனவே இங்கு எடுத்துக் காட்டிய
    பகுதிகளால் சிவபெருமான், பிறவா யாக்கைப் பெரியோன்
    என்பதும், நெற்றிக்கண் உடையவன் என்பதும், உமையவளை ஒரு
    பாகத்தில் கொண்டவன் என்பதும், ஆலின்கீழ் அறமுரைத்தவன்
    என்பதும் தெரிய வருகின்றன. மேலும் சிவ வழிபாட்டில் திருநீறு
    பூசி வழிபடுவதும், போரில் வெற்றிபெறச் சிவபெருமானை
    வழிபடுவதும், விழாக்களில் சிவபெருமான் ஆடிய கூத்துக்களை
    ஆடுவதும் அறியப்படுகின்றன..

    1.3.2 மணிமேகலையில் சிவ வழிபாடு

        முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்துடன் வரலாற்று
    நிகழ்ச்சியாலும் காப்பியத் தலைவர்களின் உறவு முறையாலும்,
    நிகழ் இடத்தாலும் மிக நெருங்கிய தொடர்புடையது
    மணிமேகலைக் காப்பியம் ஆகும். சீத்தலைச் சாத்தனார்
    இக்காப்பியத்தை மணிமேகலைத் துறவு என்ற பெயரில்
    படைத்தார் என்பது ஒரு செய்தியாகும். மணிமேகலை பிறந்து
    வளர்ந்து துறவு அடைந்தது தமிழகம் என்பதால் தமிழகத்தில்
    நிலவிய பல்வேறு வகைத் தெய்வ வழிபாடுகள் சாத்தனாரால்
    குறிக்கப் பெற்றுள்ளன. இக்காப்பியத்தில் சிவபெருமான்,
    முருகன், திருமால், குமரி, கொற்றவை, இந்திரன்
    முதலிய
    தொன்மைத் தெய்வ வழிபாடுகளும், மணிமேகலா தெய்வம்,
    சதுக்கப் பூதம், சம்பாபதி, சிந்தாதேவி, தீவதிலகை, கந்திற்பாவை
    முதலிய பிற தெய்வ வழிபாடுகளும் இடம் பெற்றுள்ளன.
    இக்காப்பியத்தில் உள்ள சமயக் கணக்கர் திறம் கேட்ட
    காதையில் பல்வேறு சமயக் கணக்கர்கள் இடம் பெறுகின்றனர்.
    சைவம், வைணவம், ஆசிவகம், நிகண்டவாதம், சாங்கிய வாதம்
    ஆகிய சமயக் கணக்கர்கள் அக்காதையில் இடம் பெற்றுள்ளனர்.

        தமிழகத்தில் வழங்கிய தெய்வ வழிபாடுகளில் சிவ வழிபாடு
    தலைமையும் சிறப்பும் வாய்ந்தது என்பதை மணிமேகலை
    வலியுறுத்துகின்றது. தெய்வ வழிபாடுகளைக் கூறுகின்ற பகுதியில்
    முதலில் கூறப்பெறுவது சிவ வழிபாடே ஆகும்.

        நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
        பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக
                (மணிமேகலை,1 : 54-55)

    என்ற பகுதி இதனை வலியுறுத்தும். முருகனைப் பற்றி
    மணிமேகலை குறிக்கின்ற பொழுது, “ஆலமர் செல்வன் மகன்”
    என்று குறிப்பிடுகிறது. புத்தமதக் காப்பியத்தில் சிவ புராண
    நிகழ்வுகள் குறிக்கப் பெறுவது சிறப்புடையதாகும். முருகனுக்கு
    விழா எடுத்ததைக் குறிக்கின்ற பொழுது,

        ஆலமர் செல்வன் மகன்
        விழாக் கால்கோள் காண்மினோ
                (மணிமேகலை. 3 : 144-145)

    என்று குறிப்பிடப்படுகிறது. மணிமேகலையில் காணப்படும்
    சைவவாதி தன் சமயக் கொள்கைகளைச் சிறப்பாக எடுத்துக்
    காட்டுகிறான். அவன் கூற்றின் மூலமாகச் சிவவழிபாட்டுத்
    தத்துவங்கள் வெளிப்படுகின்றன. மணிமேகலை சைவவாதியைக்
    குறிப்பிடுகின்ற பொழுது, “இறைவன், ஈசன் என நின்ற
    சைவவாதி” எனக் குறிப்பிடுகின்றது. அச்சைவவாதியின் கூற்றில்
    வரும் சிவச் செய்திகள் வருமாறு :

    1. சிவபெருமான்அட்டமூர்த்தியாக விளங்குகிறான். (“இருசுடர்
      இயமானன் ஐம்பூதம் என்று எட்டுவகை”)
    2. சிவனையே முதலாக உடைத்து உலகம்.
    3. எல்லா உயிர்களுக்கும் இறைவன் சார்பாக உள்ளவன்.

    இவ்வாறு சிவபெருமானைப் பற்றிய செய்திகள் இடம்
    பெறுவதோடு பித்தன் ஒருவன் கொண்ட வேடம் சிவவேடமாகக்
    காட்சியளிக்கிறது என்று மணிமேகலை குறிப்பிட்டு மேனி
    முழுவதும் திருநீறு பூசினால் அது சிவ வேடமாகும் என்று
    கூறுகிறது.

    1.3.3 காரைக்காலம்மையார் நூல்களில் சிவ வழிபாடு

        சங்கம் மருவிய காலத்திற்குப் பிறகு களப்பிரர் ஆட்சி
    நடைபெற்றதால் சிவ வழிபாட்டில் குறிப்பிடத்தக்க செய்திகள்
    கிடைக்கப் பெறவில்லை. கிடைத்திருக்கும் செய்திகளில் கி.பி.4
    அல்லது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால்
    அம்மையாரின் பாடல்கள்தாம் சிவ வழிபாட்டைச் சிறப்பாகக்
    கூறுகின்ற சான்றாக விளங்குகின்றன. சமய இலக்கிய
    ஆய்வாளர்கள் திருமுறைப் பாடல்களில் காலத்தால் முந்தியவை
    காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் என்பதில் கருத்து
    வேறுபாடு கொள்வதில்லை. தொன்மை நிலையில் காரைக்கால்
    அம்மையாரின் பதிகங்கள் சிவபெருமான் பெருமைகளையும்,
    சிவனை வழிபடுவதால் கிடைக்கின்ற முக்திப் பேற்றினையும்
    குறிப்பிடுகின்றன     எனலாம்.     அவருடைய     நூல்கள்
    திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை
    மணிமாலை, அற்புதத் திருவந்தாதி
    என்ற சிற்றிலக்கியங்கள்
    ஆகும். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டும் 22
    பாடல்களையும், திருஇரட்டை மணிமாலை 20 பாடல்களையும்,
    அற்புதத் திருவந்தாதி 100 பாடல்களையும் கொண்டவையாகும்.
    காரைக்கால் அம்மையாரின் பாடல்களில்தான் சைவ சித்தாந்தக்
    கருத்துகள்     முதன்முதலாகப்     போற்றப் பெறுகின்றன.
    சிவபெருமானின் பெருமைகள் அனைத்தும் காரைக்கால்
    அம்மையாரின் பாடல்களில் இடம்பெற்றுள்ளன எனலாம்.
    அம்மையாரின் வழியில்தான் பிற திருமுறை ஆசிரியர்கள்
    சிவபெருமான் பெருமைகளை உரைத்திருக்கின்றனர் எனலாம்.

        உலகத்தை ஒடுக்கிய சிவபெருமான் உலகத்தை மீளத்
    தோற்றுவிக்கின்றான் என்ற சைவ சித்தாந்தத் தத்துவத்தை
    அற்புதத் திருவந்தாதியில் அம்மையார் குறிப்பிடுகின்றார்.
    (அற்புதத் திருவந்தாதி பாடல்-5) இறைவன் உயிர்க்கு உள்ளே
    இருந்து அறிவுறுத்தித் தன்னை அறிய வைக்கின்றவன்
    என்பதையும் அற்புதத் திருவந்தாதி குறிப்பிடுகின்றது.

        செம்மேனி அம்மான் சிவன் என்றும், உமையவளை
    இடப்பாகத்தே கொண்டவன் என்றும், கழுத்தில் நஞ்சை
    அடக்கியவன் என்றும், திங்களையும், பாம்பையும், கங்கையையும்
    தலையில் சூடியவன் என்றும் அம்மையார் சிவனின்
    பெருமைகளை எடுத்துக் கூறுகிறார். அவனைத் துதித்து வணங்கிக்
    கைத்தொண்டு செய்தால் முக்தியை அடையலாம் என்ற
    வழிபாட்டு முறைமையினையும் அம்மையார் சுட்டிக் காட்டுகிறார்.
    இறைவனுடைய திருவடியை வணங்கினால் செய்த வினைகள்
    நில்லா என்பதும் அம்மையாரின் கருத்தாகும். பிறந்த காலம்
    முதல் இறைவனை வணங்குகின்ற, வழிபடுகின்ற வழிபாடு
    அம்மையார் காட்டும் வழிபாடாகும். (அற்புதத் திருவந்தாதி
    பாடல் -1) ‘இறைவனைக் கைதொழுது வணங்கிக் காதலால்
    கண்டால் இறைவன் தோன்றுவான்’ என்கிறார் அவர். (அற்புதத்
    திருவந்தாதி. பாடல் -17)

        நாமாலை சூடியும் நம் ஈசன் பொன்னடிக்கே
        பூமாலை கொண்டு புனைந்தன்பாய்
            (அற்புதத் திருவந்தாதி. பாடல் - 87)

    என்று அம்மையார் குறிப்பிடுவதிலிருந்து இறைவனுக்குப் பூமாலை
    சூட்டிப் பாமாலையால் வணங்குகின்ற வழிபாடு கூறப்படுகிறது.
    இவ்வாறு காரைக்காலம்மையார பாடல்கள் மூலம்சிவபெருமானின்
    பெருமைகளையும், புராண வழிபாட்டுச் செய்திகளையும் அறிந்து
    கொள்ள முடிகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:21:03(இந்திய நேரம்)