தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.1-சமணம்

  • 1.1 சமணம்

    சமணர்
        சமணர் அல்லது ஸ்ரமணர் என்றால் துறவிகள் என்பது
    பொருள். துறவு நெறியை வற்புறுத்திக் கூறும் சமயம் சமணம்.

    1.1.1 சமணத்தின் பெயர்கள்

        சமண மதம், ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம்,
    அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் எனும் பெயர்களால்
    குறிப்பிடப்படுகிறது.

    ●  ஜைன மதம்

        சமண மதத்திற்கு மற்றொரு பெயர் ஜைன மதம்.
    ஜினரை
    க் கடவுளாக உடைய மதம் ஆதலால் ஜைன மதம்
    என்ற பெயர் பெற்றது. தீர்த்தங்கரர்களுக்கு ஜினர் என்னும்
    பெயர் உண்டு. ஜினர் என்றால் ஜெயித்தவர் அதாவது வென்றவர்
    என்று பொருள். ஜினர்கள், அறத்தாலும் அன்பாலும் அறிவாலும்
    பண்பாலும் நல்ல பழக்க வழக்கங்களாலும் உலகை வெற்றிக்
    கொண்டவர்கள் அதாவது உலகை ஜெயித்தவர்கள். இவர்களைக்
    கடவுளாகக் கொண்டு வழிபட்ட மதம் ஜைன மதம் என்று
    வழங்கலாயிற்று.

    ●  ஆருகத மதம்

        சமண சமயத்தின் மற்றொரு பெயர் ஆருகத மதம்
    என்பதாகும். சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்ற பெயர்
    உண்டு. அருகனை வணங்குவோர் ஆருகதர். சமண சமயத்தார்
    அருகனைக் கடவுளாக வணங்குவதால் சமண சமயம், ஆருகத
    மதம்
    என்று பெயர் பெற்றது.

    ●  நிகண்ட மதம்

         சமண சமயத்திற்கு நிகண்ட மதம் என்ற வேறொரு
    பெயரும் உண்டு. சமணக் கடவுள் பற்றற்றவர். எனவே அவர்
    நிர்க்கந்தர் அல்லது நிகண்டர் என அழைக்கப்பட்டார். இதன்
    பொருட்டுச் சமண சமயம் நிகண்ட மதம் என்ற பெயர் பெற்றது.

    ●  அநேகாந்தவாத மதம்

         உலகில் உள்ள மதங்களை ஏகாந்த வாதம்,
    அநேகாந்தவாதம் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
    சமணம் தவிர்த்த மற்ற அனைத்து மதங்களும் ஏகாந்தவாத
    மதங்கள்; சமணம் ஒன்றே அநேகாந்தவாத மதம். ஆகவே சமண
    மதம் அநேகாந்தவாத மதம் என்று அழைக்கப் பெற்றது.

    ●  ஸியாத்வாத மதம்

         ஸியாத்வாதம் என்றாலும் அநேகாந்தவாதம் என்றே
    பொருள் படும். எனவே, சமண சமயத்திற்கு ஸியாத்வாத மதம்
    என்று பெயர் உண்டாயிற்று.

        இவற்றுள் சமண மதம், ஜைன மதம் என்பனவே
    பெரும்பாலும் வழங்கப்படும் பெயர்களாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:35:14(இந்திய நேரம்)