தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பதிப்புரை

பதிப்புரை

ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியத் தமிழ் முனிவரனார் செய்தருளிய தமிழ்த் தொன்மை முழுமுதல் நூல் தொல்காப்பியமாகும். அது மொழியமைதிக் கருவி நூலாகிய இலக்கணத்தோடு மட்டும் அமையாது உலக வரலாற்று நூல், ஒழுகலாற்றுப் பண்பாட்டு நூல், தெய்வந்தெளிநூல், உளவியல்பு நூல் முதலிய பல நூலின் பயனார் கருத்துக்களடங்கிய பொருளதிகாரத்தைத் தன்னகத்துக் கொண்டுள்ள வாழ்க்கைப் பெருநூலாகவும் திகழ்கின்றது.

இஃது எழுத்து, சொல் , பொருள் என்னும் மூன்று பகுதிகளையுடையது. ஒவ்வொன்றும் ஒன்பதொன்பது இயல்களையுடையது. மொத்தம் ஆயிரத்து அறுநூற்றுப் பத்துச் சூத்திரங்கள் உள்ளன. தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதல் உரைகண்ட நல்லிசைச் சான்றோர் இளம்பூரண அடிகளாராவர். இறுதியில் முழுமைக்கும் உரைகண்டவர் ஆசிரியர் நச்சினார்க்கினியராவர். பேராசிரியர் ஒருவரும் இவ்வாறே நூன்முழுமைக்கும் உரைகண்டனரென்ப. இப்பொழுது வெளிவந்துள்ள பேராசிரியர் உரை பொருளதிகாரத்துள் 'மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் இறுதிப் பகுதி நான்கற்குமட்டுமே காணப்படுகின்றன.

சொல்லதிகாரத்துக்குச் சேனாவரையர், கல்லாடர், தெய்வச்சிலையார் என்னும் மூவரும் தனித்தனி உரை வரைந்துள்ளனர். அவற்றுள் சேனாவரையர் உரையே சிறந்தோங்கி எல்லாரானும் மிக்குப் பயிலப்படுகின்றது. தெய்வச்சிலையார் உரையும் வெளி வந்துள்ளது.

தொல்காப்பிய முழுமையும் அரிதின் முயன்று யாழ்ப்பாணம் திரு.சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் கி.பி.1892இல் வெளியிட்டனர். பின் பவானந்தம் பிள்ளையவர்கள் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரையுடன் வெளியிட்டனர். இதுபோல் 1934இல் திரிசிரபுரம் S.கனகசபாபதி பிள்ளையவர்கள் வெளியிட்டனர். 1927 இல் காவேரிப்பாக்கம் திரு. நமச்சிவாய முதலியாரவர்கள் தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தமிழ் வித்துவான் புன்னாலைக்கட்டுவன், திரு சி.கணேசையர் அவர்கள் உரை விளக்கக் குறிப்புகளுடன் 1937இல் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியமும், 1938இல் அது போன்று சொல்லதிகாரம் சேனாவரையமும், 1943இல் அது போன்றே பொருளதிகாரம் பின் நான்கியல்களுக்குப் பேராசிரியமும், 1948இல் அதுபோன்றே பொருளதிகாரம் முன் ஐந்தியல்களுக்கு நச்சினார்க்கினியமும் வெளிவந்துள்ளன.

நம் கழகத்துவழித் தொல் எழுத்து நச்சினார்க்கினியமும், சொல் சேனாவரையமும் அரிய பெரிய ஆராய்ச்சிப் பல்வகைக் குறிப்புகளுடன் வெளிவந்துள்ளன. பின் தொல் பொருளதிகாரம் இளம்பூரணவடிகள் உரையுடன் வெளிவந்துள்ளது. இப்பொழுது எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரையுடன் வெளிவருகின்றது. இவ்வுரையோடு ஏறத்தாழ எண்பத்தேழு ஆண்டுகளுக்குமுன் (1898) பூவிருந்தவல்லி, திரு. சு.கன்னியப்ப முதலியாரவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதன்கண் உரை பொழிப்புரையாகக் காணப்படுகின்றது. அதன்பின் திரு. வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள் இப்பொழிப்புரையைத் தழுவிப் பதவுரையாக்கி வெளியிட்டுள்ளார்கள்.

இப்பொழுது கழகத்துவழி இது வெளிவருகின்றது. இதனைக் கற்பாரும் கற்பிப்பாரும் தெளிவோடுணர்தற் பொருட்டு இளம்பூரண அடிகளுடன் நச்சினார்க்கினியர் மாறுபடுவது, மிக்க விளக்கந்தருவது ஆகிய பகுதிகளை அவ்வச் சூத்திரங்களின் அடிக்குறிப்பிலமைத்தும், புலவர் ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் இருவர் உரைக்கும் தரும் விளக்கங்களையும் தம் மதிநுட்பத்தால் கண்ட புதுக்கருத்துக்களையும் அங்ஙனமே அடிக்குறிப்பாகச் சேர்த்துள்ளோம். சிறந்த பாடவேறுபாடுகள் ஆங்காங்கே காட்டப்பட்டுள்ளன. திரு . சு கன்னியப்ப முதலியாரவர்கள் பதிப்பின் ஒப்புநோக்கால் செப்பம் அமைந்தனவும் பல. விரைவில் தொல் . சொல் இளம்பூரண அடிகள் உரையும் கழக வாயிலாக வெளியிடக் கருதியுள்ளோம். அதுவும் வெளிவரின் தொல்காப்பியம் முழுமைக்கும் இளம்பூரண அடிகள் உரை கழக வெளியீடாக அமையும். இவ் வெளியீட்டில் சிறந்த அருஞ்சொற்பொருள் வரிசையும் சேர்த்துள்ளோம். இளம்பூரண அடிகள் உரை, திட்பநுட்பம் செறிந்தது ; சுருக்க விளக்கமிக்கது ; தெளிவு நிறைந்தது ! யாவரும் மிகுதியும் போற்றற் குரியது.

இதனை ஆசிரியர், மாணவர், பெருமக்கள் அனைவரும் வாங்கிக் கற்பித்தும் கற்றும் போற்றியும் ஆதரிப்பார்களாக.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-08-2017 18:54:49(இந்திய நேரம்)