Primary tabs
சித்தாந்த பண்டிதர் கழகப் புலவர்
ப. இராமநாத பிள்ளை
அல்கா விழுப்பஞ்சேர் தொல்காப்பியம் , ஒல்காப்பெரும் புகழ்த் தமிழ் முனிவரர் தொல்காப்பியனாரால் செய்தருளப் பெற்றது . இஃது , எழுத்து , சொல் , பொருள் என்னும் மூன்றுறுப்பு அடங்கிய பிண்டம். இம்மூன்றினையும் தொன்மை நல்லிசைச் சான்றோர் எழுத்துப்பால் , சொற்பால் , பொருட்பால் என வழங்கி வந்ததாகத் தெரிகின்றது . இவ்வுண்மை இறையனார் களவியலுரையுள் ( 56 . திணையே கைகோள் ) ' தொல்காப்பியனார் ' பொருட்பால் உள்ளும் கண்டு கொள்க' என நக்கீரனார் உரைக்கும் நல்லுரையால் விளங்கும் . இது , திருவள்ளுவநாயனார் அருளிய தமிழ்ப்பொதுமறையாம், திருக்குறளுக்கு அமைந்துள்ள அறத்துப்பால் , பொருட்பால் , இன்பத்துப்பால் என்னும் பகுதிகளோடு ஒருங்கொத்துக் திகழ்வது காண்க . இப்பொழுது அதிகாரம் என வழங்கப்படுகின்றது .
சிறப்புஇந்நூல் இப்பொழுது உலகிடை நிலவும் எல்லாத் தொன்மை மொழிகட்கும் காலத்தாலும் , சீரமைப்பாலும் மிகமிக முந்திய தென்பது நடுநிலை அறிஞர் பல்லோர் கண்டு நவின்ற நன்முடிபாகும் . இது மொழியமைதியை வரம்புபடுத்தி வனப்புறச் செய்யும் கருவி நூலாகும் . அம்மட்டோடு அமையாது உறையும் நிலமும் . உதவும் பருவமும் , இயக்கும் இயவுளும் , உண்ணும் உணாவும் , உஞற்றும் உழைப்பும் , எண்ணும் இசையும் , எய்தும் நண்பும் பிறவும் இனிதாய் அமையும் பான்மையும், இவற்றால் ஒவ்வொருவருக்கும் உணர்ச்சியும் எழுச்சியும் விழுப்பமுற்று ஒழுக்கநெறி வாழும் அறப்பாங்கும், அவ்வறந்தலை நின்றார் மெலியாரை வலியார் நலியவொட்டாது புறந்தரும் போற்றருங் கடமையும் முறையே பொருட்பாலில் அகம் புறம் என்னும் இருபெருந் தலைப்பால் விளக்கியருளுகின்றனர். மேலும், களவு கற்பென்னும் ஒழுகலாறுகளால் காதலர்கள் திருவருளால் துணை கையேற்றலும், சேர்ந்து தொண்டியற்றலும் ஆகிய சான்றாண்மையை வலியுறுத்தும் அரும்பெருந் தமிழ்ப்பண்பாட்டியலும் தொல்லியல் வழாது நல்லறிவு நாளும்பெருகி நாடு நலமுறவிளக்கியருளினர். இவற்றை ஒருபுடை யொப்பாக உய்த்துணரின் ஆசிரியர் தாமே கூறும்,
" இன்பமும் பொருளும் அறனு மென்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற்
காமக் கூட்டம் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள்
துறையமை நல்லியாழ்த் துணைமையோ ரியல்பே"
-தொல்.பொருள்-12.
என்ற நூற்பாவின்கண் அமையப்பெற்ற முறைவைப்பின் விளக்கமெனக் கொள்ளலாம்.
மேலும் ஒன்றாய் வேறாய் உடனாய்ப் புணர்ந்து நின்று அறிவுள்ள உயிர்களையும் அறிவில் உலகங்களையும் ஆருயிர் இன்பின் பொருட்டு இயைந்து இயக்கும் இருந்தமிழ் முழுமுதல் கடவுள் ஒன்றேயாம் என்னும் உண்மையைத் தெள்ளத் தெளியத் தொன்மையே கண்டவர் நம் தமிழ்ச் சான்றோரே யாவர். அங்ஙனம் கண்ட மெய்ம்மையை மக்கள் எளிதாக உணர்ந்து கைக்கொண்டு ஒழுகி உய்யும் பொருட்டு இனிதாகப் பால்முறை விளக்கம் தந்தனர். அவ்விளக்கம் கருமை, செம்மை, இருமையின் இணைப்பு, பொன்மை எனத் திகழ்கின்றது. இவ்வுண்மை,
" மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே " .
- தொல் . பொருள் - 5
[ வேந்தன் - அம்மை அப்பராம் முதல்வன். ]
என வரும் ஆசிரியர் அருள்மொழியாற் காண்க.
இந்த முறையாக உலகிடை வாழும் மக்களின் விழுப்பே ரொழுக்கப் பண்பாட்டு முறையினை இலக்கண வகையான் ஆராய்ந்து இனிமையுற யாத்துப் பொருட்பால் - பொருளதிகாரம் எனப் பெயர் நிறீஇப் புகழ் பெற்று நின்று நிலவும் மொழியும் புலவரும் முறையே தமிழும் , தொல்காப்பியருமே ஆவர் . வேறு வடமொழி உள்ளிட்ட எம்மொழியிலும் இன்று காறும் தோன்றாத வியத்தகு சிறப்புப் பொருளதிகாரம் என்னும் பெருமுறை நம் எழிலார் தமிழ் ஒன்றுக்கே உரியதாகும் . மற்றைய மொழிகள் எல்லாம் இதனை - ஒழுகலாற்றை இலக்கிய வாயிலாக விளக்கிக் கொண்டிருக்கின்றன . நம் தமிழ் மொழியோ இலக்கண இலக்கியம் என்னும் இரண்டன் வாயிலாகவும் இசையுற விளக்கிக் கொண்டிருக்கின்றது .
மேலும் பொருளியல் , ஒழுகலாற்றுக்குரிய மனையறம் பேணுவார் உறவு முறையும் , அறிவு மாண்பும் உரையாடுந் திறனும் பிறவும் செவ்வையாக வகுக்கின்றது . அத்துடன ' சொல்லா மரபி னவற்றொடு கெழீஇ ' முதலியனவும் சொல்லி வழுவமைக்கின்றது . அதுவும் மக்களின் ஒழுகலாற்று மாண்பே வலியுறுத்துகின்றது .
'மெய்ப்பாட்டியல் ' கள்ளமில் உள்ளத்தியல்பைத் தெள்ளத் தெளியப் புறத்தார்க்குப் புலனாக்கும் குறிப்புணர்த்துவதாகும் . அம்முறையும் மக்கள் ஒழுகலாற்றின் வனப்பே யாகும் . அதனால் அஃது உளவியற்கை (psychology) யை உணர்த்தும் தொகை நூல் ஆகும் . இதன் விரிவாகப் பன்மொழி அறிவுத்திறன் வாய்ந்த ஆன்றோர் அறிவியன் முறையையுங் கூட்டிப் பல நூல்கள் இயற்றுவித்து அருந்தமிழ் அன்னையைத் தொன்மை போற் போற்றுதல்வேண்டும் . இவ்வகை இலக்கணச் சிறப்புக்கள் ஏனை மொழிகளுக்கு வாய்க்கவில்லை . மற்றைய மொழிகளின் இலக்கணங்கள் ' எழுத்து , சொல் , யாப்பு , அணி ' என நான்கு வகையாக நிகழ்கின்றன . நம் தண்தமிழ் மொழியொன்றே ' எழுத்து , சொல் , பொருள் ,யாப்பு, அணி ' என்னும் ஐவகை இலக்கணங்களை யுடையதாகத் திகழ்கின்றது .
பாகுபாடு
எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றதிகாரங்களும் தனித்தனி ஒன்பதொன்பது இயல்களை யுடைத்தாய்த் திகழ்கின்றன. எழுத்ததிகாரத்துச் சூத்திரங்கள் 483, சொல்லதிகாரச் சூத்திரங்கள் 462, பொருளதிகாரச் சூத்திரங்கள் 665, ஆக மொத்தமாக 1610 சூத்திரங்களைக் கொண்டது தொல்காப்பியமாகும்.
எழுத்ததிகாரத்து ஆராயப்படும் 'தமிழெழுத் தொலிகளின் சிறப்புக்களையும் செவ்விய அமைப்பையும் பற்றித் திருவாளர் பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் நுணுகி யாராய்ந்து அறுதியிட்டு மொழிந்தமை' வருமாறு:
1. கூட்டொலிகளைத் தனி எழுத்துக்களாக மற்றைய மொழிகள் எண்ணுவதுபோலத் தமிழ் தாள் தலை தெரியாது எண்ணுவதில்லை.
2. மற்றைய மொழிகள் போலாது கூட்டல் குறைத்தல் இயலாதவர்க்கு முயற்சியாலாகும் எழுத்தொலிகள் இவை யென்றும், முயற்சி வேற்றுமையாலாகக்கூடிய எண்ணிறந்த எழுத்தொலிகள் இவை என்றும் தமிழ் பாகுபடுத்தி யுணர்த்துகின்றது.
3. வாக்குறுப்புக்களின் கூட்டல் குறைத்தல் ஏலாத குறிப்பான முயற்சிகளால் ஒலிக்கக்கூடிய எல்லா எழுத்துக்களும் தமிழ்மொழியில் 'உயிர்கள்' என வழங்கும் பன்னிரண்டும் 'உடல்கள்' என வழங்கும் பதினெட்டுமே.
4. தமிழெழுத்துக்களினமைப்பைவிட எளியது நினைத்தற்கெட்டாதாயினும், அதுவே எல்லாமொழிகளுக்கும் பொதுவான அமைப்பாம்.
தமிழ் நெடுங்கணக்கின் வரிவடிவம் 'முத்தமிழ்' என்ற குழூஉக் குறியால் விளங்கும் பிரணவத்தின் வடிவத்தினின்றே எழுந்தன என்பதையும், இயற்கை நிலைமைகளை இனிது விளக்கும் தமிழ் எழுத்தொலிகளின் சிறந்த ஆற்றலையும், அவற்றின் மந்திரப் பொருளையும் திருவாளர் நாயக்கரவர்கள் தமது 'தமிழ் மறை விளக்கம்' என்ற நூலில் இனிது விளக்கியிருக்கின்றனர். அவற்றின் சுருக்கம் வருமாறு:
1. இயற்கையின் மூலவடிவமாயுள்ள கருவின் உருவமே தமிழில் ஓகாரம்; அஃதாவது மூலப்பிரணவம். இவ்வடிவே கடவுளுடைய அஞ்சற்கையும் அருளற்கையும் விளங்கும் திருவுருவமாகக் காணப்பட்டுள்ளது. இவ் வடிவினின்றே தமிழின் மற்றைய வடிவங்கள் கிளம்பியிருக்கின்றன.
2. எழுத்துக்களின் மந்திரப் பொருளும், மொழிபடு பொருளும் தமிழில் ஒன்றாக இருப்பது எதனினும் காணாக் காட்சி. 'தனிநிலை' 'உயிர்கள்' 'உடல்கள்' என்பன தமிழெழுத்துக்களின் பகுப்புப் பெயர்களாம்.
மேலும் இஞ்ஞான்றைப் பன்மொழிப் புலமைசான்ற திறலினோர், உலக மொழிகளின் ஒலி நுட்ப அமைதி இலக்கணங்களை நன்காய்ந்து ஆங்கிலத்தில் பல நூல்கள் வெளியிட்டுள்ளனர். அவற்றுள் அவர்கள் இஞ்ஞான்று பலவகைக் கருவிகளின் துணைகொண்டு செம்மையாக ஆராய்ந்து காணும் முடிபுகளுக்கு மிகவும் ஒத்து நனிமிகச் சிறப்பாக நாலாயிர ஐயாயிரம் யாண்டுகளுக்கு முன் தோன்றியுள்ள முழுமுதல் தனித்தமிழ்த் தொல்காப்பியத்தின்கண் காணப்படும் ஒலி நுட்ப அமைதி வியக்கத்தக்கதொன்றாகும் என்று வெளிப்படையாக நவின்றுள்ளனர்.
பழந்தமிழர்
ஆசிரியர் தொல்காப்பியனார் மிகப் பெருந் தமிழ்க் குடியினராவர். தமிழ்ப் பழங்குடிகளாகிய 'குறுக்கையர்', 'ஏயர்கோன்', 'காப்பியன்', 'சேக்கிழான்' என்பன போன்ற குடிப்பெயரே தொல்காப்பியனாருக்கு மாகும். அச்சொல் இயம் காப்பு என இருந்த நிலைமாறி வழங்கியிருக்குமென உய்த்துணரவும் கூடும். இல்முன் என்பது முன்றில் என வழங்குவது இதற்குக் காட்டாகலாம். இதை யொழித்து அப் பெருந்தமிழ் முனிவரரை வடவராக்க முயன்று கட்டிய கதைகள் வாய்மையுடையன வாகா. மேலும் சமதக்கினியார் மகனார் என்றும், பரசுராமரின் உடன் பிறந்தார் என்றும் கூறுவர். பரசுராமர் காலத்துக்கும் தொல்காப்பியனார் காலத்துக்கும் இடையிட்ட காலம் பல ஆயிரம் யாண்டுகளாகும். அதனாலும் அக்கதை பொருந்தாப் புனைவென்பதே தேற்றம்.
காலம்
ஆசிரியர் மறைமலையடிகளார் தம் அளப்பரிய நுண்மாண் நுழைபுலச் செம்மையால் மாற்றாரும் ஏற்குமாறு அகப்புறச் சான்றுகளால் அறுதியிட்டு 'மாணிக்கவாசகர் காலம்' என்னும் பெருநூலின்கண்ணும், 'பண்டைக்காலத் தமிழர் ஆரியர்' என்னும் அருநூலின்கண்ணும் வரையறுத்துள்ளார்கள். ஆண்டு விரிவாகக் கண்டுகொள்க. சுருக்கம் வருமாறு:
கி.மு. மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னே தொல்காப்பியனார் இருந்தார். எனவே, தலைச்சங்க காலத்தவரல்லால் இடைச்சங்க காலத்தவரல்லரென ஓர்ந்துகொள்க. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ஐயாயிரம் ஆண்டுகட்குமுன் தலைச்சங்க காலத்தில் இருந்தோன். (அவனைப்பற்றிக் காரிகிழார் பாடிய புறநானூற்று ஆறாம் பாட்டில்) ஞமன் என்னுஞ் சொல் ஆளப்பட்டுள்ளது. ஆசிரியர் தொல்காப்பியனார் 'ஆ, எ, ஓ' என்னும் மூவுயிர் ஞகாரத் துரிய' எனச் சூத்திரஞ் செய்துள்ளார். அதனால் அவர் காலத்து 'ஞமன்' என்னும் சொல் வழக்கத்தில் இல்லை என்பது தெளிவு. இதனாலும், வடமொழி ஐந்திர இலக்கணம் இயற்றிய இந்திரனுக்கும் வடமொழி இலக்கணப் பாணினியாருக்கும் இடையிட்டுத் தோன்றிய இலக்கணவாசிரியர் அறுபத்து நால்வராவர். இதனாலும் தொல்காப்பியர் காலம் ஐயாயிரத்துக்குமுன் என்பது வலியுறுத்தப்படும்.