Primary tabs
சுவைத்தது. இவள் மேனி மாந்தளிர்போலும்; இது கண்ணாலுணர்ந்து சுவைத்தது. இவள் கூந்தல் பூவின் நாற்றமுடையது; இது மூக்காலுணர்ந்து சுவைத்தது. இவள் மொழியாழிசைபோலும் இனிமையுடையது; இது செவியாலுணர்ந்து சுவைத்தது.
புறத்து நிகழும் மெய்ப்பாட்டை யுணருங் கருவிக்குதாரணம் பின்னர்க் காட்டுதும்.
இனித் தண்டியலங்காரசாரநூலார், ‘மெய்ப்பாடாவது, (ஒருபொருளை) நேராகக் கண்டதுபோலத் தோன்றுங் கருத்து’ என்றும், ‘இவை நாட்டியத்திலும் காப்பியத்திலும் செய்கைத் திறத்தினாலும் சொற்றிறத்தினாலும் தூண்டப்பட்ட வாசனையின் திண்மையால் தம்மவையேபோல அநுபவநிலையில் வந்து ஆநந்தமாகவே நிற்பன’ என்றும் கூறுவர்.
செய்கைத்திறம் என்றது அவிநயத்தை. அவிநயம் எட்டுச் சுவையோடுங் கூடலானே எட்டுவகையாம். அவற்றுள் வீரச்சுவை யவிநயமாவது:--
வீரச்சுவை யவிநயம் விளம்புங் காலை
முரிந்த புருவமுஞ் சிவந்த கண்ணும்
பிடித்த வாளுங் கடித்த வெயிறும்
மடிந்த வுதடுஞ் சுருட்டிய நுதலும்
திண்ணென வுற்ற சொல்லும் பகைவரை
யெண்ணல் செல்லா விகழ்ச்சியும் பிறவும்
நண்ணு மென்ப நன்குணர்ந் தோரே.”
என்பதாம்.
ஏனைச் சுவைக்குரிய அவிநயங்களையும் சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை நோக்கி அறிக. இவ்வபிநயத்தைப்பற்றிக் கம்பரும் ஒரு செய்யுளிற் கூறியுள்ளார். அது,
“கூற்றுறழ் நயனங்கள் சிவப்பக் கூனுத
லேற்றிவா ளெயிறுக ளதுக்கி யின்றளிர்
மாற்றருங் கரதல மறிக்கு மாதொரு
சீற்றமா மபிநயந் தெரிக்கின் றாரினே.”
(கம்பரா. பால. உண். 25)
என்பது. மாது மறிக்கும் என இயைக்க. இன் உவமவுருபு.
சொற்றிறமாவது: வன்சொல் மென்சொல் முதலியன. அவ்வச் சுவைக்கேற்ப வன்மையும் மென்மையுமான சொற்கள் தொடர்ந்திருப்பதே சுவைக்குக் காரணமாம். வன்மையு மென்