Primary tabs
மெய்ப்பாட்டியலுக்கு உரைகூறிய உரைகாரர் சொல்லிய சில முறைக்கும் வடமொழி நூல்களிற் சிலர் கூறிய முறைக்கும் சில வேறுபாடுகள் காணப்படலின் அவற்றை உணர்ந்துகொள்ளற்பொருட்டு வடமொழிநூல்களிற் கூறும் மெய்ப்பாடுபற்றிய விதிகளை இங்கே எடுத்துக்காட்டினாம். வடநூல்களுள்ளும் வேறுபாடுகள் காணப்படலின் அவ் வேறுபாடுகளையும் ஆராய்ந்துணர்ந்துகொள்க.
தொல்காப்பியர் கூறிய ‘உடமை யின்புறன் முதலிய’ துணை மெய்ப்பாடுகள் முப்பத்திரண்டாவன:--உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்றுதல், கனவு, முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என்பன. இவை தனித்தும் நிகழும்.
இப்பொது மெய்ப்பாடுகளையன்றி அகத்திணையுள் களவின்கண் நிகழும் மெய்ப்பாடுகளையுங் கூறுவான் தொடங்கிய ஆசிரியர் தொல்காப்பியர், முதலில் ஒத்த கிழவனுங் கிழத்தியும் எதிர்ப்பட்ட வழிப் பெரும்பாலுந் தலைவிபால் நிகழும் மெய்ப்பாடு கூறுவான்றொடங்கிப், புணர்ச்சிக்குமுன் அவள்கண் நிகழும் மெய்ப்பாடுகளை மூன்றுபகுதியாகவும், பின் நிகழும் மெய்ப்பாடுகளை மூன்று பகுதியாகவும் பிரித்துக் கூறினார். இது பேராசிரியர் கருத்து. புணர்ச்சிக்குமுன் ஒன்றன்பின்னொன்றாக நிகழும் மூன்றுவகை மெய்ப்பாடுகளுள் முதற்கண் நிகழும் மெய்ப்பாடுகளாவன:--
“புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநய மறைத்தல் சிதைவு பிறர்க்கின்மை.”
என்னும் நான்குமாம்.
இரண்டாவது நிகழும் மெய்ப்பாடுகளாவன:--
“கூழை விரித்தல் காதொன்று களைதல்
ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தல்.”
என்னும் நான்குமாம்.
மூன்றாவது நிகழும் மெய்ப்பாடுகளாவன:--
“அல்கு றைவரல் அணிந்தவை திருத்தல்
இல்வலி யுறுத்தல் இருகையு மெடுத்தல்.”
என்னும் நான்குமாம்.