Primary tabs
இயக்குநர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
சென்னை-113.
முன்னுரை
‘என்றிவள் பிறந்தவள் என்றுலகறியா’ தமிழ்த்தாயின் பெருமையை எடுத்தியம்பும் முதல் நூல் தொல்காப்பியம் ஆகும். எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமின்றி வாழ்வியலுக்கும் இலக்கணம் கூறும் நூல் தொல்காப்பியம். அந்நூலின் சிறப்பை விளக்கும் முகத்தான் பேராசிரியர் ஆ. சிவலிங்கனார் அவர்களைக் கொண்டு தொல்காப்பியத் திட்டப் பணியை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டது.
சிறப்புப்பாயிர உரை விளக்கத்துடன் எழுத்ததிகாரம் ஒன்பது இயல்களுக்கும், சொல்லதிகாரம் ஒன்பது இயல்களுக்கும் அவர் எழுதிய விளக்க உரைகள் முன்னரே வெளிவந்துள்ளன.
தொல்காப்பியம் - பொருளதிகாரம் தொடர்பான பொருளியல் உரைத் தொகுப்பும் 1994ல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து பேராசிரியர் ஆ. சிவலிங்கனார் தொகுத்த தொல்காப்பியம்-களவியல் உரைவளம் என்னும் நூல் தற்போது வெளிவருகிறது.
தொல்காப்பியத்திற்கு உரை வகுத்த பழம்பெரும் உரையாசிரியர்களான இளம்பூரணர். நச்சினார்க்கினியர் மற்றும் பேராசிரியர் வெள்ளை வாரனார் முதலியோர்களுடைய உரைகளையும், தொல்காப்பியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய ஆங்கில மொழி பெயர்ப்பையும் தக்க இடத்தில் தொகுப்பாசிரியர் மேற்கோள் காட்டுவதுடன் முற்கால இலக்கணம், பிற்கால இலக்கணம் முதலியவற்றை ஆங்காங்கே பொருந்தக்காட்டி தனது குறிப்புரையையும் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூலின் கையெழுத்துப் படிகளைச் செம்மையான முறையில் மூல நூல்களோடு ஒப்பிட்டுப் பார்த்து திருத்தம் செய்தும் நூலின் முற்பகுதியில் அமைந்துள்ள சுருக்க விளக்கம், சூத்திர நுவல் பொருள் களவியலில் தொல்காப்பியர் உணர்த்திய வாழ்வியல் கூறுகள் ஆகியவற்றையும், நூலின் பிற்பகுதியில் அமைந்துள்ள சூத்திர முதற் குறிப்பு அகராதியையும் தொகுத்தெழுதிய முனைவர் ஆர்.ஆளவந்தார் அவர்களுக்கும், இந்நூலைக் கவினுற அச்சிட்டுத் தந்த பாவை அச்சகத்தார்க்கும் நன்றி உரியது.
தொல்காப்பிய உரைவளத் திட்டத்தில் 24ஆவதாக இந்நூல் வெளிவருகிறது.