தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

ix

களவியலில்

தொல்காப்பியனார் உணர்த்திய
வாழ்வியல் கூறுகள்

உலகில் உயிரினங்களில் மனித இனம் மட்டுமே பெற்ற தனிச் சிறப்பு அது பெற்றுள்ள மொழியேயாகும். கருத்தைப் பிறருக்கு அறிவிக்கவும், பிறர் கருத்தை அறியவும் மனிதன் மட்டுமே மொழியைப் பயன்படுத்துகிறான். பேசி அறிவித்து வந்தவன் கால வளர்ச்சியில் எழுதி அறிவிக்கவும் செய்தான்.

இவ் வுலகில் வழங்கி வருகின்ற மொழிகள் சுமார் தொள்ளாயிரத்துக்கு மேற்பட்டவை என்பர். அன்று முதல் இன்று வரையும் அழிந்தொழியாமல் அமைந்தவை எபிரேயம், கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், தமிழ் என்னும் ஐந்து மொழிகளேயாகும். இவை உயர் தனிச் செம்மொழிகள் (Classical Languages) எனப் பெறும். அவ்வைந்தனுள் தமிழ் ஒழிந்த மற்ற நான்கு மொழிகளும் பல நூற்றாண்டுகட்கு முன்னமேயே உலக வழக்கு அழிந்து ஒழிந்தன. ஆனால் தமிழ்மொழி ஒன்றுதான் உலக வழக்கிலும் நூல் வழக்கிலும் அழிந்து ஒழியாமல் நிலைபெற்று வரும் பெருஞ் சிறப்பினையுடைய மொழியாக விளங்கி வருகிறது. உலக மொழிகள் கண்டிராத வாழ்வியல் கூறுகளாகிய அகப்பொருள் இலக்கணத்தையும், புறப்பொருள் இலக்கணத்தையும் கொண்டு விளங்கி வருவதும் தமிழ்மொழி மட்டுமேயாகும்.

தொல்காப்பியர் இவ் வாழ்வியற் கூறுகளைத் தம் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின் மூன்றாம் பகுதியாகிய பொருளதிகாரத்தில் கூறியுள்ளார். அவர் தாம் கூறும் வாழ்வியற் கூறுகளில் ஒன்றாகிய அக வாழ்க்கையைப் பொருளதிகார அகத்திணையியல், களவியல், கற்பியல் என்ற மூன்று இயல்களில் கூறுகின்றார்.

ஒத்த குலமும் ஒத்த பண்புமுடைய காதலர்கள் ஒன்றுபட்டுத் தாமே தேர்ந்து மணந்து கொண்டு இல்லறம் நடத்தும் உலகியல் வாழ்வியல் கூறுகளைக் கூறுவது களவியலும் கற்பியலும் ஆகும். அவற்றுள் காதலர்கள் மணத்திற்கு முன்பு கண்டு கூடி இன்புற்று வாழும் களவொழுக்கத்தின் முறையைக் கூறும் இக் களவியல் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் மூன்றாவது இயலாக அமைகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 18:44:37(இந்திய நேரம்)