தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


xxxiv

அவர் பெயரைக் காரிகை ‘மயேச்சுரர்’’ என்றே வழங்குகின்றது. வேறு எவ்வகையாலும் குறிக்கவில்லை (14, 17, 27, 29, 30, 32, 37 உரை காண்க) ஆனால், விருத்தியுரை மயேச்சுரர்க்கு நல்லாசிரியர், பேராசிரியர் என்னும் சிறப்புப் பெயர்களைத் தந்து மகிழ்வதுடன், எதுகை மோனை கெழும முழுமுதல் இறைவன் சிறப்புக்களையெல்லாம் அடைமொழியாக்கி அவன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், நல்லாசிரியர் என்று பல இடங்களில் கூறுகின்றது.

ஒரே ஆசிரியரால் இரண்டு உரைகளும் இயற்றப் பெற்றிருக்குமாயின் ஒரு புலவரை இவ்வாறு வேறுபடக் கூறார் என்க.

யாப்பருங்கல விருத்திக்குப் பின்னர் எழுந்ததே காரிகையுரை என்பதை முன்னரே கண்டோம். ஆங்கே காட்டப்பெற்ற பதினோரிடங்களுள் ஒன்றிலேனும் தாம் எழுதிய உரை என்பதை அவர் சுட்டினார் அல்லர். அவருரையாயின் ‘‘யாம் உரைத்தாம்’’ என்றோ, ‘‘யாம் கூறிய உரையான் உணர்க’’ என்றோ, ‘‘ஆண்டுக் கூறினோம்’’ என்றோ குறித்திருப்பர். அவ்வாறு குறிப்பதே பன்னூல் உரை கண்டார் உரையிடைக் காண்பதாம்.

சிந்தாமணிக்கு உரைகண்ட ஆசிரியர் நச்சினார்க்கினியரே தொல்காப்பியத்திற்கும் உரைகண்டார். அவர் ‘‘அகன்று பொருள் கிடப்பினும்’’ என்னும் நூற்பா உரையில் (தொல். செய். 210) ‘‘இனிப்பல செய்யுட்கள் வருமாறு சிந்தாமணியுள் யாங்கூறியஉரைகள் பலவற்றானும் உணர்க’’ மட்டும் எச்சமும் என்னும் நூற்பா உரையில் (தொல். செய். 211) ‘‘மாட்டும் எச்சமும்’’ இன்றி உடனிலையாய் அமைந்தன பலவும் சிந்தாமணியுள் யாங்கூறிய உரையான் உணர்க’’ என்றும், சிந்தாமணி 72 ஆம் செய்யுளில், ‘‘ஈங்குத் தன்மையை உணர்த்துதல் ‘செலவினும் வரவினும்’ என்னும் சூத்திரத்திற் கூறினாம்’’ என்றும், 892 ஆம் செய்யுளில், ‘‘ஆசிரியர் நண்டுந்தும்பியும் என்று தும்பியைப் பின்வைத்தது மேல்வருஞ் சூத்திரத்தில் ‘மாவும் மாக்களும் ஐயறி வென்ப’ என்ற ஐயறிவு இதற்கும் ஏறுதற்கென்றுணர்க. இதனை ‘வாராததனால் வந்தது முடித்தல்’’ என்னும் தந்திர உத்தியாற் கொள்க வென்று ஆண்டுக் கூறிப்போந்தாம்’’ என்றும் கூறுவனவற்றால் அறிக.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 19:28:25(இந்திய நேரம்)