கலிவெண்பாவின் இலக்கணம் இரண்டு நூல்களிலும் சொல்லப்
பெற்றுளது.
‘‘தன்தளை ஓசை தழீஇநின் றீற்றடி
ஊவெண்பா இயலது கலிவெண் பாவே’’
என்பது யாப்பருங்கலம். இதற்கு உரை கூறிய
விருத்தி,
‘‘வெண்கலிப்பா எனினும் கலிவெண்பா எனினும்
ஒக்கும்’’ என்கின்றது.மேலும், ‘‘கலிவெண்பாவே
என்ற ஏகார விதப்பினால், வெள்ளோசையினால்
வருவதனைக்கலிவெண்பா என்றும், பிறவாற்றால்
வருவனவற்றை வெண்கலிப்பா என்றும் வேறுபடுத்துச்
சொல்வாரும் உளர் எனக் கொள்க’’ என்கின்றது.
இதனால் விருத்தியுரையாசிரியர் அவர் கூறியவாறு,
வெண்கலிப்பா எனினும், கலிவெண்பா எனினும் ஒக்கும்
என்னும் கொள்கையுடையவர் என்பதும், அவ்வாறு கருதாமல்
இரண்டற்கும் வேறுபாடு உண்டெனக் கருதுவாரும்
இருந்தனர் என்பதும் புலப்படும். இவ்வகையில் காரிகை
உரையை நோக்க அவர், ‘வேறுபடுத்துச் சொல்வாரும் உளர்’
என்பவருள் ஒருவராகத் தோன்றுகின்றார்.
‘‘வான்தளை தட்டு இசைதனதாகியும் வெண்பா இயைந்தும்
வசையறு சிந்தடியால் இறுமாய்விடின் வெண்கலியே’’
என்னும் காரிகைப் பகுதிக்குக்
‘‘கலித்தளைத் தட்டுக் கலியோசை
தழுவியும், வெண்டளை தட்டு வெள்ளோசை தழுவியும்
வந்து ஈற்றடி முச்சீரான் இறுமெனின் அது
வெண்கலிப்பா என்றும் கலிவெண்பா என்றும் பெயரிட்டு
வழங்கப்படும்’’ என்று உரை கூறி,
‘‘வாளார்ந்த மழைத்தடங்கண்’’ என்னும்பாடலைச்சான்று
காட்டி, இது தன் தளையானும் துள்ளலோசையானும் வந்து
ஈற்றடி முச்சீராய் வெண்பாப்போல முடிந்தமையின்
வெண்கலிப்பா’’ என்றும், ‘‘சுடர்த்தொடீஇ கேளாய்’’
என்னும் பாடலைக் காட்டி, ‘‘இது வெள்ளோசை தழுவி
வெண்டளை தட்டுச் சிந்தடியால் இற்று ஒருபொருள்
மேல் வந்தமையால் கலிவெண்பா’’ என்றும்
கூறியுள்ளார்.