Primary tabs
உ
முகவுரை
திருச்சிற்றம்பலம்
என்னையப் பாவஞ்ச லென்பவ ரின்றிநின் றெய்த்தலைந்தேன்
மின்னையொப் பாய்விட் டிடுதிகண் டாயுவ மிக்கின்மெய்யே
உன்னையொப் பாய்மன்னு முத்தர கோசமங் கைக்கரசே
அன்னையொப் பாயெனக் கத்தனொப் பாயென் னரும்பொருளே.
(திருவாசகம்)
திருச்சிற்றம்பலம்
தமிழ் இலக்கணம் ஐந்தனுட் பொருளின் பகுதியாகிய அகம் புறம் என்னும் இரண்டிற் புறப்பொருளுக்கு இலக்கியமாகிய வெண்பாக்களின் வரிசை(மாலை)யை யுடையதாகலின் இந்நூல் புறப்பொருள் வெண்பாமாலை என்று பெயர்பெற்றது.
மேற்கூறிய பொருளின் பகுதியாகிய அகம் புறமென்னும் இரண்டனுள்,
அகமாவது : ஒத்த அன்பினராகிய தலைவனும் தலைவியும் தம்முட் கூடுகின்ற காலத்துப் பிறந்து அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவராலும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய் எப்பொழுதும் உள்ளத்துணர்வாலேயே அனுபவிக்கப்படும் இன்பம் ; இன்பம்பற்றி அகத்தே நிகழும் ஒழுக்கத்தை அகமென்றது ஆகுபெயர் ; அகம் - உள்.
புறமாவது : மேற்கூறிய ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லாராலும் அனுபவித்து உணரப்பட்டு இஃது இவ்வாறு இருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுவதாய் அறனும் பொருளு மென்னும் இயல்பினை யுடையதாய்ப் புறத்தே நிகழும் ஒழுக்கம் ; அறனும் பொருளும் பற்றிப் புறத்தே நிகழும் ஒழுக்கத்தைப் புறமென்றது ஆகுபெயர் ; புறம் - வெளி.
இந்நூல் புறத்தின் இலக்கணமாகியசூத்திரங்களையும், அவற்றின் இலக்கியமாகிய வெண்பாக்களையும் , அவ்வெண்பாக்களின் கருத்தைத் தனித்தனியே புலப்படுத்தி ஒவ்வொன்றன் முன்னும்நிற்பனவாகிய கொளு(கருத்து)க்களையும் உடையது. கைக்கிளைப் படலத்தில் உள்ள இலக்கியச் செய்யுட்கள்மருட்பாக்களே. ஒழிபிலுள்ள வெண்பாக்களுக்கு முன்பு மட்டும் கொளுக்கள் காணப்படவில்லை. 'யாவை? நிரையென முற்றாக்கிச் சூத்திரத்திற் கேற்பப் பொருளுரைப்பாரு முளர்' என்று இந்நூலுரையாசிரியரும், 'ஒலிகடல்வையகத்து, நலிவுகண்டுநயப்பவிந்