தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பதிப்பாளர் குறிப்பு


பதிப்பாளர் குறிப்பு
 
சொல்லும் பொருளும் எனஎங்கும் தோய்பரஞ் சோதிதனைக்
கல்லும் கரையக் கரைவார்க் கமுதைக் கடிவினைநோய்
வெல்லும் பரமனைச் சுந்தர முர்த்தி விநாயகனை
அல்லும் பகலும் நினைவார்க்குத் துன்பம் அகன்றிடுமே.
 
(ஐயரவர்கள் பாடல்)

சங்க இலக்கியங்கள் இன்று தமிழுலகில் பீடுநடை போடுகின்றன என்றால், அதற்கு முதற் காரண கர்த்தா டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் தான். அநந்வயாலங்காரத்திற்கு எடுத்துக்காட்டாகப் பதிப்புத்துறையில் ஏன்? எல்லாத் துறைகளிலுமே ஐயரவர்களுக்கு உவமை கூறவேண்டுமென்றால் ஐயரவர்களைத்தான் கூறவேண்டும்.

ஐயரவர்கள் அரும்பாடுபட்டுக் கறையானுக்கு உணவாகாமலும் ஆடிப்பெருக்குச் சமயத்தில் ஆற்றில் போகாமலும் பாதுகாத்துப் பல சங்க இலக்கியங்களையும், ஐம்பெரும் காப்பியங்களில் மூன்றையும், பல பிரபந்தங்களையும், அச்சு வாகனம் ஏற்றி என்றும் அழியாவண்ணம் நிலைபெறச் செய்தார்கள்.

அவர்பெயரால் பெசன்ட் நகரில் இயங்கிவரும் நூல்நிலையம் அவர் சேகரித்துவைத்துள்ள நூல்களையும், அவர் பதிப்பித்துள்ள நூல்களையும் தமிழுலகத்திற்கு அளித்துவருகின்றது. நவநீதப்பாட்டியல் என்னும் இலக்கண நூலை ஐயரவர்கள் குமாரர் திரு. கலியாணசுந்தரையர் 1944 ஆண்டு பழைய உரைகளுடன் வெளியிட்டார்கள். 1961 ஆண்டு இரண்டாம் பதிப்பாக இந்நூலை நூல்நிலையம் வெளியிட்டது.மூன்றாம் பதிப்பாக 1994 ஆண்டுத்தமிழ் அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க வெளியிடப்படுகின்றது.

இந்நூலைப் பதிப்பிக்க வேண்டுமென்ற பேரவா கொண்டிருந்தவரும், ஸ்ரீ ஐயரவர்களின் பேரருமான திரு. க. சுப்பிரமணிய ஐயரவர்களின் நினைவுக்கு இப்பதிப்பை மிகுந்த அன்புடன் அர்ப்பணம் செய்கிறேன்.

பெசன்ட் நகர் - 90
15-5-1994
 
வித்துவான் சு. பாலசாரநாதன்
ஆராய்ச்சித்துறை
டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 18:58:40(இந்திய நேரம்)