தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முகவுரை

 
 

ஸ்ரீ :

முகவுரை

அலங்காரமென்பது அணி, அழகு, வனப்பு என்னும் பெயர்களை யுடையதாய்த் தன் முதற்பொருளைக்காண்போரை யுவப்புடையராக்கு மியல்புடைமையே. அது “உருவின்மிக்கதோருடம்பதுபெறுதலுமரிதே” என்று சிறப்பிக்குமாறு இருதிணைப்பொருள்களிலும் ஏற்றபெற்றியமைவதுபோலவே அப்பொருள்களையுணர்த்தும் சொற்றொடர்த்தொகுதிகளிலு மமையத்தகுவதாம். அவ்வமைதியே இங்கு அலங்காரமென்று எடுத்துக்கொள்ளப்பட்டது. சொற்றொடர்கள் உலகநடை செய்யுணடையென இருவகைப்படும். அவற்றுட் செய்யுணடையானது, பாஷையைச் சிறப்பிக்கவல்லதாய்ச் சுருங்கிய திரிசொற்களால் விரிந்தபொருளை வெளியிடுகின்றமையாற் பயில்வார்க்குமனத்தளர்ச்சிவாராது கிளர்ச்சியும் அகமகிழ்ச்சியுமுண்டாக்கவேண்டி அலங்காரங்கள் அந்நடைக்கு மிகச் சிறந்தனவாகக்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆதலால் அலங்காரமுடைய பாடல்களே கற்றோராலும் மற்றோராலும் புகழப்படுகின்றன; அஃதில் லாதபாடல்களே யெல்லாராலும் இகழப்படுகின்றன.

இங்ஙனமிருப்பதுபற்றியே “பலசொல்லாற்பொருட்கிடனாகவுணர் வினின், வல்லோ ரணிபெறச்செய்வனசெய்யுள்” எனச் செய்யுட்கின்றியமையாத சொற்பொருள்யாப்போடொப்பவே, அலங்காரங்களும் வேண்டுமென்று நியமிக்கப்பட்டிருக்கின்றன. அவை குணம்பற்றியும் பொருள் பற்றியும் சொற்பற்றியும் பலதிறமாகப் பகுக்கப்பட்டுத் தொன்று தொட்டே பழைய தமிழிலக்கியங்களுள்ளும் மிகப் பயிலப்பெற்றுள்ளன. இங்ஙனம் கண்கூடாகக் காணப்படும் அலங்காரங்களை இலக்கணவகையாலுணர்த்தும் நூற்பகுதி ஆதியில், தமிழிலில்லையென்றும், பிற்காலத்தில் வடமொழியிலிருந்து வந்தேறியதென்றுஞ் சிலர் சொல்லுகிறார்கள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 19:56:55(இந்திய நேரம்)