தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கபிலர்


கபிலர்

1. குறிஞ்சி
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே'
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
5
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.-கபிலர்

13. குறிஞ்சி
எழாஅஆகலின், எழில் நலம் தொலைய
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!-
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக் கண்,
5
நல்ல பெருந் தோளோயே! கொல்லன்
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியாமன்னோ;
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே.
இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.- கபிலர்

32. குறிஞ்சி
'மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன்' என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;
5
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி,
அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு
அரிய-வாழி, தோழி!-பெரியோர்
நாடி நட்பின் அல்லது,
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே.
தலைவிக்குக் குறை நயப்புக் கூறியது.- கபிலர்

59. முல்லை
உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து,
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி,
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து,
5
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும்
வன் புலக் காட்டு நாட்டதுவே-அன்பு கலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
10
பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே.
வினைமுற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.- கபிலர்

65. குறிஞ்சி
அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!-
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக்
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ,
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து,
5
புலியொடு பொருத புண் கூர் யானை
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர்
விற் சுழிப்பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடி இடி கரையும்
பெரு மலை நாடனை 'வரூஉம்' என்றோளே.
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது.-கபிலர்

77. குறிஞ்சி
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர்
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்றுமன்னே-நெஞ்சே!-செவ் வேர்ச்
5
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின்
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
10
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல்,
திதலை அல்குல், குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே.
பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது.-கபிலர்

217. குறிஞ்சி
இசை பட வாழ்பவர் செல்வம் போலக்
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம்,
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி,
5
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன்
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து
ஊடல் உறுவேன்-தோழி!-நீடு
புலம்பு சேண் அகல நீக்கி,
புலவி உணர்த்தல் வன்மையானே.
தலைமகள் வாயில் மறுத்தது.-கபிலர்.

222. குறிஞ்சி
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்
கை புனை சிறு நெறி வாங்கி, பையென,
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று,
5
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்
செலவுடன் விடுகோ-தோழி!-பலவுடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்,
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது,
பெருங் களிறு பிளிறும் சோலை அவர்
10
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே?
தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-கபிலர்

225. குறிஞ்சி
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப,
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
5
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை
இரந்தோர் உளர்கொல்-தோழி!-திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர,
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?
வன்புறை எதிர் அழிந்தது; பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.-கபிலர்

253. குறிஞ்சி
புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும்,
பள்ளி யானையின் வெய்ய உயிரினை,
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து
எனவ கேளாய், நினையினை, நீ நனி:
5
உள்ளினும் பனிக்கும்-ஒள் இழைக் குறுமகள்,
பேர் இசை உருமொடு மாரி முற்றிய,
பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி,
பலவு உறு குன்றம் போல,
பெருங் கவின் எய்திய அருங் காப்பினளே.
செறிப்பு அறிவிறீஇ வரைவு கடாயது.-கபிலர்

267. நெய்தல்
'நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி,
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல்
5
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்-
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்,
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து' என,
வாரேன்மன் யான், வந்தனென் தெய்ய;
சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப,
10
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல்,
'இவை மகன்' என்னா அளவை,
வய மான் தோன்றல் வந்து நின்றனனே.
தோழி காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது;வரைவு கடாயதூஉம் ஆம்.-கபிலர்

291. நெய்தல்
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு
குப்பை வெண் மணல் ஏறி, அரைசர்
ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்,
5
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும்,
கண்டாங்கு உரையாய்; கொண்மோ-பாண!-
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து,
எல்லித் தரீஇய இன நிரைப்
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே?
வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, நெருங்கிச் சொல்லி யது.- கபிலர்

309. குறிஞ்சி
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,
'யான் செய்தன்று இவள் துயர்' என, அன்பின்
ஆழல்; வாழி!-தோழி!-'வாழைக்
5
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும்,
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று' என,
கூறுவைமன்னோ, நீயே;
தேறுவன்மன் யான், அவருடை நட்பே.
'வரைவு நீட ஆற்றாள்' எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.-கபிலர்

320. மருதம்
'விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;
எவன் குறித்தனள்கொல்?' என்றி ஆயின்-
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்
5
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்,
காரி புக்க நேரார் புலம்போல்,
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி
எழில் மா மேனி மகளிர்
10
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே.
பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப, நெருங்கிச் சொல்லியது.-கபிலர்

336. குறிஞ்சி
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன்,
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,
5
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி,
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்-அரவின்
ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி,
10
இரை தேர் எண்கினம் அகழும்
வரை சேர் சிறு நெறி வாராதீமே!
ஆறு பார்த்துற்றுச்சொல்லியது.-கபிலர்

353. குறிஞ்சி
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள,
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை,
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
5
கல் கெழு குறவர் காதல் மடமகள்
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும்,
வான் தோய் வெற்ப! சான்றோய்அல்லை-எம்
காமம் கனிவதுஆயினும், யாமத்து
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை
10
வெஞ் சின உருமின் உரறும்
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே.
தோழி ஆற்றது அருமை அஞ்சி, தான் ஆற்றாளாய்ச் சொல்லியது.- கபிலர்

359. குறிஞ்சி
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா
அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக,
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது
5
உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின்,
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை
வாடலகொல்லோ தாமே-அவன் மலைப்
போருடை வருடையும் பாயா,
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே?
தோழி தழையேற்றுக் கொண்டு நின்று தலைமகன் குறிப்பின் ஓடியது-கபிலர்

361. முல்லை
சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி
தானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்;
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா,
படு மழை பொழிந்த தண் நறும் புறவில்,
5
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப,
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த்
தந்தன நெடுந்தகை தேரே; என்றும்
அரும் படர் அகல நீக்கி,
விருந்து அயர் விருப்பினள், திருந்துஇழையோளே.
வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது.-மதுரைப் பேராலவாயர்

373. குறிஞ்சி
முன்றிற் பலவின் படு சுளை மரீஇ,
புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி,
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
5
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி,
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப்
பா அமை இதணம் ஏறி, பாசினம்
வணர் குரற் சிறு தினை கடிய,
புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே?
செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்

376. குறிஞ்சி
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை,
வரையோன் வண்மை போல, பல உடன்
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்!
5
குல்லை, குளவி, கூதளம், குவளை,
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன்,
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும்
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய
நன்கு அவற்கு அறிய உரைமின்; பிற்றை
10
அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி,
வறும் புனம் காவல் விடாமை
அறிந்தனிர்அல்லிரோ, அறன் இல் யாயே?
தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:19:06(இந்திய நேரம்)