தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பேரிசாத்தனார்


பேரிசாத்தனார்

25. குறிஞ்சி
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்
5
வள மலை நாடன் நெருநல் நம்மொடு
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ,
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது
அல்லல் அன்று அது-காதல் அம் தோழி!-
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
10
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி
கண்டும், கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!
தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது.- பேரி சாத்தனார்

37. பாலை
பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை,
உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று
இவளொடும் செலினோ நன்றே; குவளை
5
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ,
கலை ஒழி பிணையின் கலங்கி, மாறி
அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம்
ஆகுவது அன்று, இவள் அவலம்-நாகத்து
அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு,
10
ஆர்கலி நல் ஏறு திரிதரும்
கார் செய் மாலை வரூஉம் போழ்தே.
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் தோழி சொல்லியது.-பேரி சாத்தனார்

67. நெய்தல்
சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம்
மால் வரை மறைய, துறை புலம்பின்றே;
இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு
வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய
5
கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே;
கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித்
துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை,
எல் இமிழ் பனிக் கடல், மல்கு சுடர்க் கொளீஇ,
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால்,
10
தங்கின் எவனோதெய்ய-பொங்கு பிசிர்
முழவு இசைப் புணரி எழுதரும்
உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே?
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.-பேரி சாத்தனார்

104. குறிஞ்சி
பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே,
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக்
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த
5
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்
யானே அன்றியும் உளர்கொல்-பானாள்,
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர,
10
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர்
போக்கு அற விலங்கிய சாரல்,
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே?
தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.-பேரி சாத்தனார்

199. நெய்தல்
ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு,
நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி,
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து,
5
உளெனே-வாழி, தோழி! வளை நீர்க்
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர்
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி,
வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர்,
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய,
10
பைபய இமைக்கும் துறைவன்
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே!
வன்புறை எதிரழிந்தது.-பேரி சாத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:28:41(இந்திய நேரம்)