தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மலை உறை குறவன்


மலை உறை குறவன்

201.குறிஞ்சி
'மலை உறை குறவன் காதல் மட மகள்,
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்
உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும்,
5
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வெள் அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
10
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.
கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.-பரணர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:18:19(இந்திய நேரம்)