தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


நெய்தல்

8. குறிஞ்சி
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!
5
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி-
10
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே!
இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன்சொல்லியது.

27. நெய்தல்
நீயும் யானும், நெருநல், பூவின்
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்
கழி சூழ் கானல் ஆடியது அன்றி,
5
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின்,
பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே-நன்றும்
எவன் குறித்தனள் கொல், அன்னை?-கயந்தோறு
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம்
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி,
10
கண் போல் பூத்தமை கண்டு, 'நுண் பல
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ, சென்று' எனக் கூறாதோளே.
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-குடவாயிற் கீரத்தனார்

78. நெய்தல்
கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,
5
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை,
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்;
கேட்டிசின்-வாழி, தோழி!-தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்,
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
10
வலவன் கோல் உற அறியா,
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!
வரைவு மலிந்தது.-கீரங்கீரனார்

113. பாலை
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய்
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்
பெருங் காடு இறந்தும், எய்த வந்தனவால்-
5
'அருஞ் செயல் பொருட் பிணி முன்னி, யாமே
சேறும், மடந்தை!' என்றலின், தான் தன்
நெய்தல் உண்கண் பைதல் கூர,
பின் இருங் கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து,
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்
10
இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும்
ஆம்பல்அம் குழலின் ஏங்கி,
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே!
இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது.-இளங்கீரனார்

117. நெய்தல்
பெருங் கடல் முழங்க, கானல் மலர,
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர,
வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர,
5
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்
கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க,
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னர் உன்னார் கழியின், பல் நாள்
வாழலென்-வாழி, தோழி!-என்கண்
10
பிணி பிறிதாகக் கூறுவர்;
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே.
வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது; சிறைப்புறமும்ஆம்.-குன்றியனார்

138. நெய்தல்
உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை
மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை,
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும்
5
தண்ணம் துறைவன், முன் நாள், நம்மொடு
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ,
கண் அறிவுடைமை அல்லது, நுண் வினை
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்
10
முழங்கு திரை இன் சீர் தூங்கும்
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே.
'அலர் ஆயிற்று' என ஆற்றாளாய தலைமகட்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-அம்மூவனார்

155. நெய்தல்
'ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்,
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய்,
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்!
யாரையோ? நிற் தொழுதனெம் வினவுதும்:
5
கண்டோர் தண்டா நலத்தை-தெண் திரைப்
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ?
இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ?
சொல், இனி, மடந்தை!' என்றனென்: அதன் எதிர்
முள் எயிற்று முறுவல் திறந்தன;
10
பல் இதழ் உண்கணும் பரந்தவால், பனியே.
இரண்டாம் கூட்டத்துத்தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது; உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைவன் சொற்றதூஉம் ஆம்.-பராயனார்

187. நெய்தல்
நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக,
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய,
பல் பூங் கானலும் அல்கின்றன்றே;
இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி,
5
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய,
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு
யாங்கு ஆவதுகொல் தானே-தேம் பட
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்,
மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு
10
இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே?
தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கி, தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.-ஒளவையார்

190. குறிஞ்சி
நோ, இனி; வாழிய-நெஞ்சே! மேவார்
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த்
திதலை எஃகின் சேந்தன் தந்தை,
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,
5
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும்
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய,
வலை மான் மழைக் கண், குறுமகள்
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே!
பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது; அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்; இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.

195. நெய்தல்
அருளாயாகலோ, கொடிதே!-இருங் கழிக்
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி,
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்
மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே-
5
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி,
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென,
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலைத் தோற்றம் போல,
ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே.
களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.

239. நெய்தல்
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
5
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின்,
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை
10
வார் கோல் எல் வளை உடைய வாங்கி,
முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர்
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே?
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.-குன்றியனார்

283. நெய்தல்
ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!-
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய,
5
இன்னை ஆகுதல் தகுமோ-ஓங்கு திரை
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி,
ஏமுற விளங்கிய சுடரினும்,
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே?
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று, 'வேறுபடாது ஆற்றினாய்' என்று சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
287. நெய்தல்
'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த;
நல் எயிலுடையோர் உடையம்' என்னும்
பெருந் தகை மறவன் போல-கொடுங் கழிப்
5
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன்,
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,
காமம் பெருமையின், வந்த ஞான்றை-
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும்,
10
'தேர் மணித் தெள் இசைகொல்?' என,
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே.
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.-உலோச்சனார்

372. நெய்தல்
அழிதக்கன்றே-தோழி!-கழி சேர்பு
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்,
வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு,
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென,
5
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு
அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி,
அன்னை தந்த அலங்கல் வான் கோடு
உலைந்தாங்கு நோதல் அஞ்சி, 'அடைந்ததற்கு
10
இனையல் என்னும்' என்ப-மனை இருந்து,
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலிக் கழி நல் ஊரே.
மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்ற வேண்டி, உலகியல் மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது.-உலோச்சனார்

382. நெய்தல்
கானல் மாலைக் கழி நீர் மல்க,
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த,
ஆனாது அலைக்கும் கடலே; மீன் அருந்தி,
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
5
துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி,
ஆர் உயிர் அழிவதுஆயினும்-நேரிழை!-
கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்பு நீர்த்
தண்ணம் துறைவன் நாண,
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே.
ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாளாகி நின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினாட்குத் தலைமகள் சொல்லியது.- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:29:33(இந்திய நேரம்)