தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

31-40

31-40

31
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
கடன் அன்று என்னும் கொல்லோ நம் ஊர்
முடம் முதிர் மருதத்துப் பெருந் துறை
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே?
முன் ஒரு நாள் தன்னோடு புதுப்புனல் ஆடுழி, 'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்' என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன் பின்பும் பரத்தையரோடு புனலாடத் தொடங்குகின்றான் என்பது கேட்ட தலைமகள், அவன் உழையர் கேட்ப, தோழிக்குச் சொல்லியது.

32
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு, எழு நாள்
அழுப என்ப, அவன் பெண்டிர்
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே.
வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2

33
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூம் பெருந் துறை,
பெண்டிரொடு ஆடும் என்ப தன்
தண் தார் அகலம் தலைத்தலைக் கொளவே.
இதுவும் அது. 3

34
அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
பொய்கைப் பூத்த, புழைக் கால் ஆம்பல்
தாது ஏர் வண்ணம் கொண்டன
ஏதிலாளர்க்குப் பசந்த என் கண்ணே.
இதுவும் அது. 4

35
அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
நிறத்தினும் நிழற்றுதல் மன்னே;
இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே.
வாயிலாய்ப் புகுந்தார் தலைமகன் குணம் கூறிய வழி, 'அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், இப்பொழுது காண் என் மேனி பசந்தது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 5

36
அம்ம வாழி, தோழி! ஊரன்
நம் மறந்து அமைகுவன் ஆயின், நாம் மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே
கயல் எனக் கருதிய உண் கண்
5
பசலைக்கு ஒல்காவாகுதல் பெறினே.
தான் வாயில் நேரும் குறிப்பினளானமை அறியாது, தோழி வாயில் மறுத்துழி, அவள் நேரும் வகையால் அவட்குத் தலைமகள் சொல்லியது. 6

37
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பசந்து, பனி மல்க
வல்லன் வல்லன் பொய்த்தல்;
தேற்றான், உற்ற சூள் வாய்த்தல்லே.
தலைமகளைச் சூளினால் தெளித்தான் என்பது கேட்ட காதல் பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது. 7

38
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்
தண் தளிர் வௌவும் மேனி,
ஒண் தொடி முன்கை, யாம் அழப் பிரிந்தே.
தலைமகன் மனைவயிற் போகக் கருதினான் என்பது சொல்லிய தன் தோழிக்குப் பரத்தை சொல்லியது. 8

39
அம்ம வாழி, தோழி! ஊரன்
வெம் முலை அடைய முயங்கி, நம் வயின்
திருந்து இழைப் பணைத்தோள் நெகிழ,
பிரிந்தனன் ஆயினும், பிரியலன் மன்னே.
ஒரு ஞான்று தலைவன் தன் மனைக்கண் சென்றது கொண்டு, 'அவன் பெண்மை நலம் எல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தான்' என்பது தலைவி கூறினாள் எனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, தன் தோழிக்குச் சொல்லியது.

40
'அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
ஒண் தொடி முன்கை யாம் அழப் பிரிந்து, தன்
பெண்டிர் ஊர் இறைகொண்டனன்' என்ப
கெண்டை பாய்தர அவிழ்ந்த
5
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே.
உலகியல் பற்றித் தலைவன் தன் மனைக்கண் ஒரு ஞான்று போனதே கொண்டு, 'அவ்வழிப் பிரியாது உறைகின்றான்' என்று, அயற் பரத்தையர் பலரும் கூறினார் என்பது கேட்ட காதல்பரத்தை, அவர் பாங்காயினார் கேட்ப, தன் தோழிக்குச் சொல்லியது

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:50:11(இந்திய நேரம்)