தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

61-70

61-70

61
நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
நெடு நீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்,
கை வண் மத்தி, கழாஅர் அன்ன
நல்லோர் நல்லோர் நாடி,
5
வதுவை அயர விரும்புதி நீயே.
'வதுவை அயர்ந்தாள் ஒரு பரத்தையைச் சில் நாளில் விட்டு, மற்றொரு பரத்தையை வதுவை அயர்ந்தான்' என்பது அறிந்த தலைமகள் அவன் மனைவயின் புக்குழிப் புலந்தாளாக,'இது மறைத்தற்கு அரிது' என உடன்பட்டு, 'இனி என்னிடத்து இவ்வாறு நிகழாது'

62
இந்திர விழவில் பூவின் அன்ன
புன் தலைப் பேடை வரி நிழல் அகவும்
இவ் ஊர் மங்கையர்த் தொகுத்து, இனி
எவ் ஊர் நின்றன்று மகிழ்ந! நின் தேரே?
இதுவும் அது. 2

63
பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊர!
எம் நலம் தொலைவது ஆயினும்
துன்னலம் பெரும! பிறர்த் தோய்ந்த மார்பே.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறியது. 3

64
அலமரல் ஆயமொடு அமர்துணை தழீஇ
நலம் மிகு புதுப் புனல் ஆட, கண்டோர்
ஒருவரும் இருவரும் அல்லர்;
பலரே தெய்ய; எம் மறையாதீமே.
தலைமகன் பரத்தையரோடு புனலாடினான் என்பது அறிந்த தலைமகள் அவன் மறைத்துழிச் சொல்லியது. 4

65
கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல்
சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர!
புதல்வனை ஈன்ற எம் மேனி
முயங்கன்மோ தெய்ய; நின் மார்பு சிதைப்பதுவே.
ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. 5

66
உடலினென் அல்லேன்; பொய்யாது உரைமோ:
யார் அவள், மகிழ்ந! தானே தேரொடு,
தளர் நடைப் புதல்வனை உள்ளி, நின்
வள மனை வருதலும் வௌவியோளே?
புதல்வனைப் பிரியாதவன் பிரிந்து, புறத்துத் தங்கி, வந்தானாக, அவனோடு புலந்து தலைமகள் சொல்லியது. 6

67
மடவள் அம்ம, நீ இனிக் கொண்டோளே
'தன்னொடு நிகரா என்னொடு நிகரிப்
பெரு நலம் தருக்கும்' என்ப: விரிமலர்த்
தாது உண் வண்டினும் பலரே,
5
ஓதி ஒள் நுதல் பசப்பித்தோரே.
தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை புறன் உரைத்தாள் எனக் கேட்ட தலைவி தலைமகன் வந்துழி, அவள் திறத்தாராய் நின்று ஒழுகும் வாயில்கள் கேட்பச் சொல்லியது. 7

68
கன்னி விடியல், கணைக் கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர!
பேணாளோ நின் பெண்டே
யான் தன் அடக்கவும், தான் அடங்கலளே?
பரத்தை தான் தலைமகளைப் புறங்கூறி வைத்து, தன்னைத் தலைமகள் புறங்கூறினாளாகப் பிறர்க்குக் கூறினமை கேட்ட தலைவி தலைமகற்குச் சொல்லியது. 8

69
கண்டனெம் அல்லமோ, மகிழ்ந! நின் பெண்டே?
பலர் ஆடு பெருந் துறை, மலரொடு வந்த
தண் புனல் வண்டல் உய்த்தென,
உண்கண் சிவப்ப, அழுது நின்றோளே!
தலைமகன் பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையைக் களவில் மணந்து ஒழுகுகின்றதனை அறிந்த தலைமகள், 'தனக்கு இல்லை' என்று அவன் மறைத்துழிச் சொல்லியது. 9

70
பழனப் பல் மீன் அருந்த நாரை
கழனி மருதின் சென்னிச் சேக்கும்
மா நீர்ப் பொய்கை யாணர் ஊர!
தூயர்; நறியர் நின் பெண்டிர்:
5
பேஎய் அனையம், யாம்; சேய் பயந்தனமே.
பரத்தையரோடு பொழுது போக்கி நெடிது துய்த்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. 10

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:50:36(இந்திய நேரம்)