நொதுமலர் வரைவு வேண்டி விட்டுழித் தலைமகட்கு உளதாகிய வருத்தம் நோக்கி, 'இவள் இவ்வாறு ஆதற்குக் காரணம் என்னை?' என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 5
206
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! உவக்காண்
மாரிக் குன்றத்துக் காப்பாள் அன்னன்;
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள்,
பாசி சூழ்ந்த பெருங் கழல்,
5
தண் பனி வைகிய வரிக் கச்சினனே!
இரவுக்குறிக்கண் தலைமகன் வந்து குறியிடத்து நின்றமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 6
207
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நன்றும்
உணங்கல கொல்லோ, நின் தினையே? உவக்காண்
நிணம் பொதி வழுக்கின் தோன்றும்,
மழை தலைவைத்து, அவர் மணி நெடுங் குன்றே.
'மழையின்மையால் தினை உணங்கும்; விளையமாட்டா; புனங்காப்பச் சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று' என வெறுத்திருந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. 7
208
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! கானவர்
கிழங்கு அகழ் நெடுங் குழி மல்க வேங்கைப்
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு,
மணி நிற மால் வரை மறைதொறு, இவள்
5
அறை மலர் நெடுங் கண் ஆர்ந்தன பனியே.
செவிலிக்கு அறத்தொடு நின்ற தோழி, அவளால் வரைவு மாட்சிமைப் பட்ட பின்பு, 'இவள் இவ்வாறு பட்ட வருத்தம் எல்லாம் நின்னின் தீர்ந்தது' என்பது குறிப்பின் தோன்ற அவட்குச் சொல்லியது. 8
209
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நீ மற்று
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்,
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண் தலை மா மழை சூடி,
5
தோன்றல் ஆனாது, அவர் மணி நெடுங் குன்றே.
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் அவனை நினைவு விடாது ஆற்றாளாகியவழி, 'சிறிது மறந்து ஆற்ற வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 9