உடன்போய் மீள்கின்ற தலைமகள் தன் ஊர்க்குச் சொல்கின்றாரைக் கண்டு கூறியது. 7
398
'புள்ளும் அறியாப் பல் பழம் பழுனி,
மட மான் அறியாத் தட நீர் நிலைஇ,
சுரம் நனி இனிய ஆகுக!' என்று
நினைத்தொறும் கலிழும் என்னினும்
5
மிகப் பெரிது புலம்பின்று தோழி! நம் ஊரே.
தலைமகள் மீண்டு வந்துழி, அவட்குத் தோழி கூறியது. 8
399
'நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நல் மணம் கழிக' எனச்
சொல்லின் எவனோ மற்றே வென் வேல்,
மை அற விளங்கிய கழல்அடி,
5
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?
உடன் கொண்டுபோன தலைமகன் மீண்டு தலைவியைத் தன் இல்லத்துக்கொண்டு புக்குழி, 'அவன் தாய் அவட்குச் சிலம்பு கழி நோன்பு செய்கின்றாள்' எனக் கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும் வந்தார்க்குச் சொல்லியது. 9
400
மள்ளர் அன்ன மரவம் தழீஇ,
மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்
அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில்,
'காதல் புணர்ந்தனள் ஆகி, ஆய் கழல்
5
வெஞ் சின விறல் வேல் காளையொடு
இன்று புகுதரும்' என வந்தன்று, தூதே.
உடன்போய் வதுவை அயரப்பட்ட தலைவி, 'தலைவனோடு இன்று வரும்' எனக் கேட்ட செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது. 10