தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Mugavurai3- TVU


பாடினோர் முதலியவர்களின் வரலாறு

3. அம்மூவனார் :- இந்நூலின் இரண்டாம் நூறாகிய நெய்தற்றிணையைப் பாடிய இவர்
கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர் ; இவர் பெயர் இடுகுறியோ காரணக்குறியோ யாதும்
புலப்படவில்லை. நற்றிணை, 18-ஆம் செய்யுளிலும், புறநானூறு 209-ஆம் செய்யுளின்
பின்னுள்ள வாக்கியத்திலும் மூவனென்று ஓர் உபகாரியின் பெயர் வந்திருத்தலால், மூவனென்ற
பெயரொன்று பண்டைக்காலத்தில் வழங்கிவந்ததென்று தெரிகிறது. இவர் நெய்தற்றிணையில்
மிகப்பயின்றவர் ; அதன் வளங்களை விளங்கப்பாடுதலில் மிக்க ஆற்றலுடையவர். தமிழ்
நாட்டரசர்களுள் சேரன், பாண்டியன் என்னும் முடியுடை வேந்தர் இருவராலும்,
திருக்கோவலூரையாண்ட காரியென்னும் வள்ளலாலும் ஆதரிக்கப் பெற்றவர். சேரநாட்டுக்
கடற்கரைப் பட்டினமாகிய தொண்டிநகரமும், அந்நாட்டின் கண்ணதாகிய மரந்தைநகரமும், பாண்டி
நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய கொற்கைநகரமும், நடு நாட்டின் கண்ணதாகிய கோவலூரும்
இந்நூலிலும் பிற தொகை நூல்களிலும் இவராற் பாராட்டப்பெற்றிருத்தலின், இவர்
அந்நகரங்களில் இருந்தவரென்றும் இவர் காலத்தில் அவைகள் மிக விளக்க
முற்றிருந்தனவென்றும் கூறலாம். அகநானூறு 35-ஆம் செய்யுளில் பெண்ணையாற்றை இவர்
சிறப்பித்திருக்கிறார்.

எட்டுத்தொகையில் இவரியற்றிய செய்யுட்கள்-127; (நற்றிணை-10, குறுந்தொகை-11,
இந்நூலில் நெய்தல்-100, அகநானூறு-6). நற்றிணை முதலிய ஏனைத் தொகை நூல்களிலுள்ள
27-பாடல்களிலும் நெய்தற்றிகுரியன பல.

கிழவற்குரைத்த 13-ஆம் பத்தில் தலைவி மிக்க இளமையுடையாள் என்றதற்கேற்ப அவளுடைய
பேதைப்பருவத்து விளையாட்டுக்களிற் பலவற்றை அழகாகக் கூறியிருத்தல் படித்து
இன்புறற்பாலது.

தலைவன் தன் நாட்டையும் கொடுத்துத் தலைவியை மணக்கத் துணிந்தனன் என்று தலைவியின்
பெறற்கருமையை இவர் பாராட்டுகிறார்; ஐங். 147. இக்கருத்தே அகநானூறு 280-ஆம்
செய்யுளிலும் வந்துள்ளது.

‘கடலினும் நட்புப் பெரிது’ (184), எப்பொழுதும் மொழியத்தக்க சொற்கள், ‘மெல்லிய இனிய
மேவரு தகுந’ (குறுந். 306) ; ‘நல்கூர்ந் தார்வயின் நயனில ராகுதல் தகாது’ (குறுந். 327)
என்பன இவர் எடுத்துக் காட்டும் சில நீதிகளாகும்.

தொண்டிப்பத்து முழுவதையும் ஒரு செய்யுளின் ஈற்றடியிலுள்ள சொற்களைக்கொண்டு அதற்கடுத்த
செய்யுளை இவர் தொடங்கிப் பாடியிருக்கும் நயம் படித்து மகிழ்வதற்குரியதாகும்.

குறுந்தொகையில் பலவிடங்களில் இவர் பெயர் அம்மூவன் என்றே காணப்படுகிறது .



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 11:31:54(இந்திய நேரம்)