Primary tabs
பாடினோர் முதலியவர்களின் வரலாறு
2. ஓரம்போகியார்
:- இந்நூலின் முதல் நூறாகிய மருதத்தைப் பாடிய இவர் கடைச்சங்கப்
புலவருள் ஒருவர். இவர் பெயர் ஓரம்போதியார் என்றும், ஓரேர்போகியார் என்றும்,
ஒன்னார்
உழவர் என்றும், காம்போதியார் என்றும் பிரதிகளில் வேறுபட்டுக் காணப்படுகின்றது.
இவர்
மருதத்திணையின் வளங்களை உள்ளுறையுவமை இறைச்சி முதலிய நயங்கள் தோன்ற
விளங்கப் பாடுதலில் மிக்க ஆற்றலுடையவர்.
இவராற் பாடப்பெற்றவர்
ஐவர். அவர்களுள் முடிமன்னர் மூவர்.
( 1 ) சேரமான்களில் ஆதன் அவினி என்பவன், (ஐங். முதற்பத்து),
( 2 ) வெல்போர்ச்சோழன் கடுமான் கிள்ளி ( 56. 78 ),
( 3 ) பாண்டியன் (54)
உபகாரிகள்
இருவர் :
( 1 ) விராஅன் ( 58 )
( 2 ) மத்தி ( 61 ).
இவர் பாடலில் வந்துள்ள
ஊர்கள் நான்கு : ( 1 ) தேனூர் ( 54-5, 57 ), ( 2 ) ஆமூர் ( 56 ),
( 3 ) இருப்பை ( 58 ), 4 கழார் ( 61 ). இவற்றுள் தேனூரை வேனிலாயினும் தண்புனல்
ஒழுகும்
தேனூரென்றும், பாண்டியன் தேனூரென்றும், கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்
தேனூரென்றும், வேள்விகள் மலிந்த தேனூரென்றும் மற்ற ஊர்களினும் சிறப்பாகப் பாராட்டுதலை
நோக்கும் போது இவருக்கு இவ்வூரின்கண் ஏதேனும் நெருங்கிய பற்று இருக்கலாமென்று
தோற்றுகிறது.
நதிகளில் காவிரி
( 42 ) யும், வையை ( 7 )யும், இந்திர விழாவும் ( 62 ), தைந்நீராடும்
விரதமும் ( 84 ) இவரால் குறிக்கப்பெற்றுள்ளன.
இவர் பாடியனவாக இப்பொழுது
தெரிந்தவை : ஐங்குறுநூற்றில் முதல் நூறு, நற்றிணையில்
இரண்டு ( 20, 360 ), குறுந்தொகை யில் ஐந்து ( 10, 70, 122, 127, 384),
அகநானூற்றில்
இரண்டு ( 286, 316 ), புறநானூற்றில் ஒன்று ( 284 ) ஆக 110 செய்யுட்களாகும்.
திருவள்ளுவரைப் போலவே
இவர் நூலின் தொடக்கத்தில் இல்லறத்தை வைத்துச் சிறப்பிக்கிறார்.
இல்லறம் செவ்வனே நடைபெறுவதற்கும் கற்பொழுக்கம் குன்றாமலிருப்பதற்கும் அரசனது
காவல்
இன்றியமையாததாகலின் முதற்கண் காவலனை வாழ்த்துகிறார்.
1 புதுக்கோட்டையைச் சார்ந்த
விராலிமலை இவன் மலையாகவும், அம்மலையைச் சார்ந்த
இருப்பையூர் இவன் ஆட்சியிலிருந்த இருப்பையூராகவும் கருதப்படுகின்றன. மாதவர் நோன்பும்
மடவார் கற்பும், காவலன் காவல் இன்றெனினின்றால்’ (மணி. 22 : 208-9) என்ற
அடிகள்
கவனிக்கற்பாலன.
அரச வாழ்த்தோடு ‘பால்பல
வூறுக’ (3) ‘பார்ப்பாரோதுக’ (4) என்று இவர் கூறியிருப்பது
‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர், காவலன் காவா னெனின்’ என்ற திருக்குறளை
நினைப்பூட்டுகிறது.,
தலைவி மணம் நிகழ்ந்த
பின்னர் அல்லாமற் றலைவனை எதிர்ப்பட்ட ஞான்றே கற்புப்
பூண்டொழுகுகின்ற சிறப்பை (6)யும், தலைவனிடத்திற் புலத்தற்குரிய காரணமாயின உளவாகவும்
தலைவி அவற்றை மனங்கொளாத சிறப்பை (ஐங். 1, குறுந் 10)யும் இவர் பாராட்டியிருப்பது.
தமிழ் மகளிரின் கற்பின் பெருமைக்கு ஒரு சான்றாகும். குலப்பெண்கள் தம் கணவரை
அதிகமாகப்
புலத்தலினால் வரும் தீமைகளை இவர் நன்கு விளக்கியுள்ளார்; அகநா. 316. ‘தலைவி
தலைவன் வீட்டிற் கால்வைத்த நாள்முதல் தலைவனுக்குச் செல்வம் முதலிய நன்மைகள்
பெருகின’ என்பது தோன்ற அவளை ‘விழவு மூதாட்டி’ (குறுந் 10), ‘தலைவன் செல்வம்பெற்று
மகிழ்தற்குரியான்’ என்று கூறுவதை நோக்க, ‘ஏர் பிடித்தவன் என்ன செய்வான், பானை
பிடித்தவள் பாக்கியம்’ என்ற பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. தலைவியை
ஐம்புலன்களுக்கும் இன்பம் தருபவ
ளென்று
இவர் கூறியிருப்பது (குறுந். 70)
‘கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு, மொண்டொடி கண்ணே யுள’ என்ற திருக்குறளுக்கு
இலக்கியமாகவுள்ளது.
இவ்வாசிரியர் கூறும் சில
உவமைகள் படித்து இன்புறற் பாலனவாகும். தலைவன் மார்பு
ஊரவர்க்கெல்லாம் பொதுவாகிய பழனம் போலாது தலைவிக்கே யுரித்தாதல் (4); தலைவன்
மார்புக்குப் பழனத்தை உவமையாகக் கூறிப் பரத்தையின் மார்பு பலர்படிந்துண்ணும்
தண்ணியகயம் போன்றது (84) என்றல்; இழிந்தோராகிய பரத்தையர் தோளுக்கு உயர்ந்த
பொருளை உவமை கூறாது, கழுந்து தேய்ந்து வழு வழுப்பாகவும் பருத்ததாகவுமுள்ள
உளுத்தங்காயை அடித்தற்குதவும் தடியை உவமை கூறுதல் (குறுந். 384)
உலகியல் தொடர்பான பல
செய்திகளை இவர் அழகு தோன்றக் கூறுகிறார் : மகளிர், தாம்
மகவைப் பெற்றதனால் தம் கணவருக்கு வேம்பாவதாக நினைப்பதை, ‘தூயர் நறியர் நின்
பெண்டிர் பேய் அனையம் யாம் சேய்பயந்தனமே’ (70) என்றல்; ‘புதைத்தல்
ஒல்லுமோஞாயிற்றதொளி’ (71), ‘சிறுவரின் இனைய செய்தி, நகாரோ பெரும நிற்கண்டிசினோர்’
(85); ‘நும்மோ ரன்னோர் மாட்டும் இன்ன, பொய்யொடு மிடைந்தவை தோன்றின்,
மெய்யாண்டுளதோ விவ் வுலகத்தானே’ (அகம், 286)
புறப்பொருட் செய்திகளாக
இவர் கூறுவன பகைவர் புல்லார் தலும் (4) மறக் குடியிற் பிறந்த
ஒருவனது வீரத்தின் மேம்பாடுமே (புறநா 284) யாகும். இவற்றுள் பகைவர் புல்லார்தல்
புறப்பொருள்களைப் பற்றிக் கூறும் இலக்கண நூல்களில் யாண்டும் கூறப்படவில்லை. ஆனால்
சங்க நூல்களில் ஐங்குறுநூற்றைத் தவிரத் தெரிந்தவரையில் சிறுபஞ்சமூலத்தில்
மட்டும்
இதற்கு இலக்கியம் அமைந்துள்ளது.