தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Mugavurai1 - TVU-பாரதம் பாடிய பெருந்தேவனார்


பாடினோர் முதலியவர்களின் வரலாறு

1. பாரதம் பாடிய பெருந்தேவனார் :- இந்நூலிற் கடவுள் வாழ்த்தியற்றிய இவர் கடைச்சங்கப்
புலவர்களுள் ஒருவர்.உரைநடை இயற்றுதலிலும் செய்யுள் செய்தலிலும் மிக்க ஆற்றலுடையவர்.
இவர் பிறந்த இடம் தொண்டைநாடு; இது,

“சீருறும் பாடல்பன் னீரா யிரமுஞ் செழுந்தமிழ்க்கு
வீரர்தஞ் சங்கப் பலகையி லேற்றிய வித்தகனார்
பாரதம் பாடும் பெருந்தேவர் வாழும் பழம்பதிகாண்
மாருதம் பூவின் மணம்வீ சிடுந்தொண்டை மண்டலமே”

என்னும் தொண்டைமண்டல சதகச்செய்யுளால் விளங்குகின்றது..

பெருந்தேவனாரென்பது இவரது இயற்பெயர். இஃது இவரியற்றிய பாரதச் செய்யுளைத்
தொல்காப்பியப் பொருளதிகாரவுரையில் மேற்கோளாக எடுத்துக்காட்டும் இடங்களில்
நச்சினார்க்கினியர், “இச்செய்யுள் பெருந்தேவனாரியற்றியது” என்று புலப்படுத்தியிருத்தலால்
துணியப்படும். பாரதத்தை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றியதனாற் பாரதம்
பாடிய பெருந்தேவனாரென்றும் இவர் வழங்கப்படுவர். இவருடைய பாரதச் செய்யுட்கள்
தொல்காப்பியப் பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரையிலன்றி யாப்பருங்கலவிருத்தி
முதலியவற்றிலும் மேற்கோள்களாக அமைந்த பெருமை வாய்ந்தவை.

திருவள்ளுவ மாலையிலுள்ள ‘எப்பொருளும் யாரும்’ என்னும் வெண்பா இவர் இயற்றியதாகத்
தெரிகிறது.

இவரியற்றிய கடவுள் வாழ்த்துக்களுள் ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு
இவைகளிலுள்ளவைகள்சி்வபெருமான் துதிகளாகவும், நற்றிணையிலுள்ளது திருமால் துதியாகவும்,
குறுந்தொகையிலுள்ளது முருகக்கடவுள் துதியாகவும் உள்ளனவாதலால் இவருடைய கடவுள்
வழிபாடும் கொள்கையும் இன்னவெனத் துணிந்து சொல்லக் கூடவில்லை.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 11:34:59(இந்திய நேரம்)