தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Ingurunooru Mugavurai - TVU-க.இரண்டாம் பதிப்பின் முகவுரை


இரண்டாம் பதிப்பின் முகவுரை

“சந்தனப் பொதியத் தடவரைச் செந்தமிழ்ப்    பரமா சாரியன் பதங்கள்    சிரமேற் கொள்ளுதுந் திகழ்தரற் பொருட்டே.”

ஐங்குறுநூறென்பது கடைச்சங்கப்புலவர்கள் அருளிச் செய்த நூல்களாகிய எட்டுத்தொகைகளில் மூன்றாவது; சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்தது; பொருள்களின் இயற்கை அழகையும் தமிழ்ப்பாஷையின் இனிமையையும் நன்கு தெரிவிப்பது; இத்தமிழ்நாட்டின் பழையகாலத்தின் நிலைமையையும் சில சரித்திரங்களையும் புலப்படுத்துவது : பொருளிலக்கணத்தின் பகுதிகளாகிய அகம் புறமென்னும் இரண்டனுள், அகத்தின் பகுதிகளுக்கு இலக்கியமாக அமைந்துள்ளது; அகமாவது ஒத்த அன்பினராகிய தலைவனும் தலைவியும் தம்முட் கூடுகின்ற காலத்துப் பிறந்து அக்கூட்டத்தின் பின்பு அவ்விருவராலும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய் எப்பொழுதும் உள்ளத் துணர்வாலேயே அனுபவிக்கப்படும் இன்பம். இன்பம் பற்றி அகத்தே நிகழும் ஒழுக்கத்தை அகமென்றது ஆகுபெயர். அகம்-உள்.

இந்நூல் சிவபெருமானுடைய துதியாகிய கடவுள் வாழ்த்துச் செய்யுளொன்றை முதலிற்பெற்றுப் பின்னர் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லையென்னும் ஐந்திணைகளுள் ஒவ்வொன்றற்கு முரிய ஒழுக்கங்களைத் தனித்தனி விளக்கும் நூறு நூறு அகவற்பாக்களைக் கொண்டு முறையே ஐந்து வகையாகப் பகுக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொரு திணையும் பத்துப் பத்துப் பகுதிகளையுடையது.

இதிலுள்ள பாக்கள் 501. இவை 3-அடிச் சிற்றெல்லையையும் 6-அடிப் பேரெல்லையையும் உடையவை.

நற்றிணை முதலியவற்றிலுள்ள பாக்களைக்காட்டிலும் அடிவரையறையிற் குறைந்த நூறு நூறு பாக்களால் மருதமுதலிய ஐந்திணையொழுக்கங்களைத் தனித்தனியே விளக்குகின்றமையின் இந்நூல் ‘ஐங்குறுநூறு’ என்று பெயர் பெற்றது.

இதிற் கடவுள் வாழ்த்து, பாரதம் பாடிய பெருந்தேவனாராலும் முதனூறாகிய மருதம் ஓரம்போகியாராலும், இரண்டாம் நூறாகிய நெய்தல் அம்மூவனாராலும், மூன்றாம் நூறாகிய குறிஞ்சி கபிலராலும், நான்காம் நூறாகிய பாலை ஓதலாந்தையாராலும், ஐந்தாம் நூறாகிய முல்லை பேயனாராலும் இயற்றப்பட்டன; இதனை,

“மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்    கருதுங் குறிஞ்சி கபிலன் - கருதிய    பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே    நூலையோ தைங்குறு நூறு”.

என்னும் வெண்பாவாலுணர்க.

இத்தொகையைத் தொகுத்தார் புலத்துறைமுற்றிய கூடலூர் கிழார் என்பதும்,தொகுப்பித்தார் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையார் என்பதும் இந்நூலின் இறுதியில் உள்ள பழையவாக்கியத்தால் தெரிகின்றன.

ஓரம் போகியார் முதலிய ஐவரும் முறையே மருதமுதலிய ஐந்திணை வளங்களையும் இனிது விளக்கிப் பாடுதலில் மிக்க பயிற்சியுடையவர்களாதலின், மருத முதலிய ஒவ்வொரு பகுதியையும் படிப்பவர்கள் அப்பொழுது அப்பொழுது அந்த அந்த நிலங்களில் உள்ள பொருள்களைக் கண்கூடாக நுகர்பவர்களாகவே யாவார்கள்.

இதிலுள்ள அகவற்பா ஒவ்வொன்றன் பின்னும் தனித் தனியே கருத்துரையும் பழையவுரையும் உள்ளன. சில பாக்களுக்கு இரண்டு கருத்துரைகளுமுண்டு. அக்கருத்துக்களை இயற்றியவர்கள் நூலாசிரியர்களோ, வேறு யாரோ யாதும் புலப்படவில்லை. தொல்காப்பியப் பொருளதிகாரவுரையில் இந்நூலிலிருந்து மேற்கோளாக எடுத்துக் காட்டிய செய்யுட்களுட் சிலவற்றிற்கு நச்சினார்க்கினியர் முதலியோர் இக்கருத்துரைகளைத் தழுவாமல் வேறு கருத்துரைகள் எழுதி அவற்றிற்கேற்ப அச்செய்யுட்களுக்குப் பொருளும் விளங்க எழுதியிருக்கிறார்கள்.

ஆசிரியர் தொல்காப்பியனார் “மாயோன்மேய” (தொல்.அகத். 5) என்னும் சூத்திரத்தில், ‘முல்லை, குறிஞ்சி மருத நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’ என நிலங்களுக்கு முல்லை முதலாக முறை கூறினாரேனும் அதில், ‘சொல்லவும் படுமே’ என்ற உம்மையால், இங்ஙனம் சொல்லாத முறையாலும் திணைகள் சொல்லப்படுமென்று அவர் அறிவுறுத்தினாராதலின், புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் இந்நூலில் திணைகளை மருத முதலாகத் தமக்கு வேண்டிய முறையாற் கோத்தாரென்றுணர்க. இக்கருத்தை “உம்மை எதிர்மறையாகலின், இம்முறையன்றிச் சொல்லவும்படுமென்பது பொருளாயிற்று ; தொகைகளிலும் கீழ்க்கணக்குகளிலும் இம்முறை மயங்கக் கோத்தவாறு காண்க” (தொல். அகத். 5-ஆம்சூ, உரை) எனவும், “இனி, ‘சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’ என்ற வழிச் சொல்லாத முறையாற் சொல்லவும்படு மென்று பொருள் கொண்டமை பற்றிப் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தலெனவும் கோத்தார்; ஐங்குறுநூற்றினும் பிறவற்றினும் வேறுபடக் கோத்தவாறு காண்க’ (கலித்தொகை கடவுள் வாழ்த்துரை, எனவும் போந்துள்ள ஆசிரியர் நச்சினார்க்கினியர் வாக்கியங்களும், “சொல்லிய முறையாற் சொல்லவும்படும் என்ற உம்மை பிறவாற்றானும் சொல்லப்படுமென்பது பட நிற்றலானும், பத்துப்பாட்டாலும், கலித்தொகையும், ஐங்குறுநூறும், கீழ்க்கணக்கும், 1சிற்றட்டகமும் முதலாகிய சான்றோர் செய்யுட்களிலெல்லாம் வேண்டிய முறையான் வைத்தலானும் இவ்வாற்றான் எண்ணப்பட்டனவெனக் கொள்க” (அகத். 6) என்னும் நாற்கவிராய நம்பி அகப்பொருளின் உரையாசிரியர் வாக்கியமும் வலியுறுத்துமாறறிக.

இந்நூலைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் முறையே மலைநாட்டுப் புலவரும் மலைநாட்டரசருமாதலால், ஆதனவினியென்னுஞ் சேரனைத் தலைவனாகப் பெற்ற முதற்பத்தையுடைய மருதம் முதலிலும், தொண்டிப்பத்தையுடைய நெய்தல் மருதத்தின் பின்னும் மலைநாட்டரசர்களைப் பாடி மலைநாட்டிற் பெரும்பாலும் வதிந்து மலைவளம் பாடுதலிற் புகழ்பெற்ற கபிலர் பாடிய குறிஞ்சி நெய்தலின் பின்னும் கோக்கப்பெற்றன வென்று இம்மூன்றற்கும் ஒருவாறு முறை கூறலாமாயினும், பாலையும் முல்லையும் இவற்றின் பின்னர் முறையே அமைக்கப் பெற்றதற்குக் காரணம் ஒருவாற்றானும் விளங்கவில்லை [தொண்டி சேரநாட்டிற் கடற்கரைக் கண்ணதொரு நகரம்; இதனை, ‘குட்டுவன்றொண்டி’ (ஐங், 178) என்பதனாலுணர்க.]

ஐங்குறுநூறு போலவே ஐந்திணையொழுக்கங்களை மேற்கூறியவாறு பாகுபாடு செய்து தொகுத்துத் தனித்தனியே கூறும் வேறு பழைய நூல்களுள் இப்பொழுது தெரிந்தவை வருமாறு :

எட்டுத்தொகையுள் கலித்தொகையும், பதினெண் கீழ்க்கணக்கினுள் ஐந்திணையைம்பது, திணைமாலை நூற்றைம்பது, திணைமொழியைம்பது, ஐந்திணையெழுபது, கைந்நிலையென்பனவும், பத்துப்பாட்டுள் மதுரைக்காஞ்சி முதலியனவும், பழைய உரைகளிற் காணப்படுகின்ற சிற்றட்டகமென்பதுமாம் ; சிற்றட்டகத்துள்ள சில பாக்கள் மட்டும் பழையவுரைகளிற் காணப்படுகின்றனவேயன்றி நூல் முழுவதும் காணப்படாமையின், அதனைப் பற்றி ஒன்றும் இப்பொழுது எழுதக் கூடவில்லை, _________________________________________________

மேற்கூறிய இலக்கிய நூல்களிலும் தொல்காப்பிய முதலிய இலக்கண நூல்களிலும் திணைகளைக் கோத்துள்ள முறை ஒரு படியாகவில்லை ; அவை வருமாறு :-

ஐங்குறுநூறு
மரு
நெய்
குறிஞ்
பா
முல்
கலித்தொகை
பா
குறிஞ்
மரு
முல்
நெய்
ஐந்திணையைம்பது
முல்
குறிஞ்
மரு
பா
நெய்
திணைமாலைநூற்றைம்பது
குறிஞ்
நெய்
பா
முல்
மரு
திணைமொழியைம்பது
குறிஞ்
பா
முல்
மரு
நெய்
ஐந்திணை யெழுபது
குறிஞ்
முல்
பா
மரு
நெய்
கைந்நிலை
குறிஞ்
பா
முல்
மரு
நெய்
மதுரைக்காஞ்சி
மரு
முல்
்குறிஞ்
பா
நெய்
பெருங்கதை
மரு
முல்
குறிஞ்
பா
.....
தொல்.பொருளதிகாரவுரை
முல்
குறிஞ்
மரு
நெய்
.....
இறையனாரகப்பொருளுரை
குறிஞ்
நெய்
பா
முல்
மரு
நாற்கவிராயநம்பியகப்பொருளுரை
குறிஞ்
பா
முல்
மரு
நெய்
வீரசோழியம்
முல்
குறிஞ்
மரு
பா
நெய்
மாறனகப்பொருள்
குறிஞ்
பா
முல்
மரு
நெய்
இலக்கணவிளக்கம்
குறிஞ்
பா
முல்
மரு
நெய்

இந்நூலின் பழையவுரை பதவுரையுமன்று ; பொழிப்புரையுமன்று ; அகத்திணை நூல்களுக்கேயுரிய உள்ளுறையுவமம்; இறைச்சிப் பொருள் முதலியவற்றைப் பெரும்பாலும்லமுற விளக்கிச் சிலசில இடத்து மட்டும் திரிசொற்களின் பொருளைப் புலப்படுத்திச் சிறுபான்மை இலக்கணக் குறிப்பையும் சொன்முடிபு பொருண் முடிபுகளையும் பெற்றுள்ளது. 469-ஆம் பாடலுக்கு மேலுள்ளவற்றிற்குக் கையெழுத்துப் பிரதியில் இவ்வுரை காணப்படவில்லை; இடையிடையே சிலசில பாடல்களுக்குமில்லை. ஆனாலும் கிடைத்த வரையிற் பாடல்களின் பொருள்களைத் தெரிந்துகொள்வதற்கு இவ்வுரைமிகச் சிறந்த கருவியாகவுள்ளது. இந்நூல்போலவே நடையாலும் பொருள் நுணுக்கத்தாலும் 1இவ்வுரையும் மிகப் பாராட்டற்பாலது. இவ்வுரை இல்லையாயின் இந்நூற் பாக்களிலுள்ள உள்ளுறையுவமம் முதலியனவும் மற்ற அருமை பெருமைகளும் நன்கு புலப்படா. இவ்வுரையாசிரியர் இன்னாரென்பது ஒருவாற்றானும் விளங்கவில்லை, ஆனாலும் நடையை உற்றுநோக்கின், பேராசிரியா,் நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலியவர்களுள் இவர் ஒருவரோ அல்லது அவர்களைப்போன்ற வேறு ஒருவரோவென்று ஊகிக்கப்படுகிறார்.

தொல்காப்பியப் பொருளதிகாரம், இறையனாரகப்பொருள், நாற்கவிராய நம்பி அகப்பொருள் முதலிய நூல்களை உரையுடன் பன்முறை ஆராய்ந்தவர்களுக்கு இந்நூலின் நயன் நன்கு புலப்படும் : நடையும் தெற்றென விளங்கும்.  

பழைய உரையில்லாத செய்யுட்களுக்கு உள்ளுறையுவமம் முதலியவற்றைப் புலப்படுத்தி ஏதோ ஒரு வகையாக உரை எழுதி இதனுடன் பதிப்பிக்கலாமென்ற விருப்பம் சில சமயம் எனக்கு நிகழ்ந்ததுண்டு; நிகழ்ந்தும் இந்நூலையும் இவ்வுரையையும் உற்று நோக்க அவ்விருப்பம் அடியோடே மாறிவிட்டது. இந்நூல் முழுமைக்கும் நான் எழுதிவைத்த அரும்பதவுரையை இதனுடன் பதிப்பியாமைக்குக் காரணமும் அதுவே.

சிலசில இடத்து மூலம் மட்டும் தனியேயுள்ள பிரதிகளின் பாடம் வேறாகவும், இந்நூல் பழைய உரையாசிரியர் கொண்ட பாடம் வேறாகவும், மேற்கோளாக எடுத்துக் காட்டியிருக்கும் நச்சினார்க்கினியர் முதலியோர்கள் கொண்ட பாடம் வேறாகவும், அவ்வப்பிரதிகளிற் காணப்பட்டன. அவை ஒருவாறு தொகுத்துப் பிரதிபேதமாக அவ்வப்பக்கங்களின் இறுதியிற் பதிக்கப்பட்டுள்ளன. பிரதிகளிலுள்ளவாறே பதிப்பித்திருத்தலால் அவற்றுட் சில பாடபேதங்களுக்குப் பொருள்கள்புலப்படா.

இந்நூலின் 129, 130-ஆம் செய்யுட்கள் ஒரு பிரதியிலும் காணப்படவில்லை. 416, 490-ஆம ் செய்யுட்களின் இரண்டாமடிகளிற் சீர்கள் குறைந்துள்ளன ; அவற்றை ஒரு பிரதியானும் நிரப்பக்கூடவில்லை.

மூலம், கருத்துரை, பழையவுரை என்னும் இம்மூன்றனுள் எழுத்துக்கள் சிதைந்துபோன பாகத்தை....... இவ்வொற்றைப்புள்ளி நிரைகள் காட்டும்.

சில சொற்கள் பின்னுள்ளவாறு இந்நூற் கையெழுத்துப் பிரதிகளிற் காணப்பட்டன :-

அடும்பு (=அடம்பு)          துடக்கம் (=தொடக்கம்)
அணுமை (=அணிமை)         துடங்கின்று (=தொடங்கின்று)
அலம்வருதல் (=அலமருதல்)     நெருனை (=நெருநை)
அற்சிரம் (=அச்சிரம்)         பஞ்சாய் (=பைஞ்சாய்)
இற்றி (=இத்திமரம்)          பழுநி (=பழுனி)
கலிழ்தல் (=கலுழ்தல்)        வல்லினை (=வல்லுனை)
குருசில் (=குரிசில்)          வேணும் (=வேண்டும்)

இதன் முதற்பதிப்பு 1903-ஆம் வருஷத்திற் பதிப்பிக்கப்பெற்றது. பின்பு கிடைத்த பழைய கையெழுத்துப் பிரதிகளால் அறிந்த பிரதி பேதங்களும் அரும்பதவகராதியில் பழைய நூலாராய்ச்சிக்கு இன்றியமையாத சில குறிப்புக்களும் இப்பதிப்பிற் சேர்க்கப்பெற்றுள்ளன.

திருவாவடுதுறையா தீனத்து மகாவித்துவானும் என் ஆசிரியருமாக விளங்கிய திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்களுடைய கண்மணிபோன்ற முதன் மாணாக்கரும் பாடஞ்சொல்லுதல், செய்யுள் செய்தல், நூலாராய்தல் முதலியவற்றில் அவர்களை போன்றவரும் , முன்பு கும்பகோணம் கவர்ன்மெண்ட் காலேஜ் தமிழ்ப் பண்டிதராயிருந்தவரும், வேறுகவலையின்றி நூலாராய்ச்சியையே செய்துகொண்டு காலங்கழிக்கும்படி வற்புறுத்திக்கூறி அவ்வாறே யான் நடத்தற்குக் கரும்பு தின்னக் கூலிகொடுத்தாற் போலத் தம்முடைய அரிய வேலையை அன்புடன் எனக்கு எளிதிற் கிடைக்கச் செய்தவரும், 1"இரந்துபுன் மாக்கடமை யென்றுந் துதியா, வரந்தரவென் முன்னின்றவள்ள” லுமாகிய திரிசிரபுரம் வித்துவான் ஸ்ரீ தியாகராச செட்டியாரவர்களுடைய பேருதவி எழுமையும் மறக்கற்பாலதன்று. அவர்கள் செய்த மேற்கூறிய அரிய உதவியில்லையேல் எனக்கும் பழைய தமிழ் நூலாராய்ச்சிக்கும ்இக்காலத்தில் யாதோரியைபுமின்றென்பது திண்ணம். ஆதலால் இனியதும் அரியதுமான இந்நூற்பதிப்பை அவர்களிடத்துள்ள நன்றியறிவிற்கு அறிகுறியாக அவர்களுக்கு உரியதாக்குகின்றேன்.

இதனைப் பதிப்பிக்குங் காலத்துச் சலிப்பின்றி உடனிருந்து வழக்கம்போல் ஒப்புநோக்குதல் முதலிய பலவகை உதவிகள் புரிந்த பழைய மெய்யன்பர்கள்பால் மிக்க நன்றி பாராட்டுகின்றேன்.

உடனிருந்து உதவி செய்பவர்கள் முதலியோர் விஷயத்தில் எனக்குச் சிறிதும் பொருட்கவலையுண்டாகாதபடி பேரன்புடன் பொருளுதவி செய்து சில வருஷங்களாக ஆதரித்து வரும், ஸ்ரீஸேதுஸமஸ்தானாதிபதிகளும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்களும் சென்னைச் சட்ட நிரூபண சபை அங்கத்தினர்களுமான கௌரவம் பொருந்திய ம-m-m-ஸ்ரீ பா. இராஜராஜேசுவர ஸேதுபதியவர்களைப் பாதுகாத்தருளும் வண்ணம் தமிழ்த் தெய்வத்தை இறைஞ்சுகின்றேன்.

இந்நூற் பரிசோதனைக்குக் கிடைத்த கையெழுத்துப் பிரதிகள் மூலமும் கருத்துரையுமுள்ளவை :

திருவாவடுதுறையாதீனத்துப் ...... பிரதி 1 ம-m-m-ஸ்ரீ ஜே. எம். வேலுப்பிள்ளையவர்கள் ....... “ 1 திருமயிலை வித்துவான் ஸ்ரீ சண்முகம் பிள்ளையவர்கள் ...... “ 1 _________________________________________________________________

            மூலமும் கருத்துரையும்            பழையவுரையுமுள்ள பிரதி :

ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ. தே. லக்ஷ்மண கவிராயரவர்கள் கொடுத்த பிரதி 1

இவைகளன்றி ஒப்புநோக்குதற்கு அவ்வப்பொழுது கிடைத்த வேறு பிரதிகள் சில.

மேற்கூறிய யாவும் மிகப் பழமையானவைகளே.

இந்நூலின் பெருமையையும், எனது சிறுமையையும் நன்குணர்ந்த விவேகிகள் இப்பதிப்பிற் காணப்படும் பிழைகளைப் பொறுத்துக் கொள்வார்களென்று நம்புகிறேன்.

இப்படியே யான் எண்ணிய ஒவ்வொரு காரியமும் இடையூறின்றி இனிது நிறைவேறும்படி திருவருள் சுரக்கும்வண்ணம் எல்லாம்வல்ல முழுமுதற்கடவுளைச் சிந்தித்து வாழ்த்தி வந்திக்கின்றேன்.

 ‘தியாகராச விலாசம்’                      இங்ஙனம், திருவேட்டீசுவரன் பேட்டை,                 வே. சாமிநாதையன்.    15-11-1920.  
_________________________________________________________________  

இவற்றின் வரலாற்றைப் புறநானூற்று முகவுரையாலுணர்க.

சிற்றடக்கமென்றும் பிரதிவேறுபாடுண்டு.

இவ்வரிய உரைப்பிரதியைத் தந்த உபகாரி ஆழ்வார் திருநகரி ஸ்ரீ. தே. லக்ஷ்மண கவிராயரவர்கள்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 11:45:02(இந்திய நேரம்)