தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai


5. நவ்வந்துவனார்.

இந்நூலின் ஐந்தாம் பகுதியாகிய நெய்தற்கலி 33 செய்யுட்களையும் செய்தவரது இயற்பெயர் ‘அந்துவன்’ என்பது இவர் கல்வி யறிவொழுக்கங்களாற் சால்புற்றபின் சிறப்புப்பொருளை யுணர்த்தும் ‘ந’ என்னும் இடைச்சொல்லை முதலிலும் உயர்வு குறித்துவரும் ‘ஆர்’ என்னும் இடைச்சொல்லை ஈற்றிலுஞ் சேர்த்து 1நவ்வந்துவனாரென்று வழங்கப் பெற்றார். இப்பெயரின் முன் ‘ஆசிரியன்’ என்பதும் 2‘மதுரை யாசிரியன்’ என்பதும் சேர்ந்தும் இவர் பெயர் வழங்கும். 

இவர் மதுரையாசிரியர் என்று சிறப்பிக்கப் பெறுதலானும் மதுரையையும் அதனையடுத்த திருப்பரங்குன்றத்தையும் மதுரையின்கண் ஒழுகும் வையையாற்றையும் அதன் கரைக்கண்ணதாகிய திருமருதந் துறை முதலியவற்றையும் புகழ்ந்து கூறுதலானும் இவருடைய ஊர் மதுரையென்று தோற்றுகிறது.

இவருடைய பெயர் ஆசிரியரென்ற சிறப்புப் பெயரை அடை மொழியாகக் கொண்டு வருதலால் இவரை அந்தண ரென்பர்.

இவர், (பரி. 8 : 2; கலி, 1; 129 : 1 - 3; 133 : 3 - 5; 142 : 24 - 28; 150.) சிவபெருமானையும், (பரி. 6 : 55, 69; 8) முருகக் கடவுளையும், (பரி. 8 : 1 - 2; கலி. 119 : 3; 123 : 3; 127 : 4; 145 : 64) திருமாலையும், (கலி. 145 : 64) திருமகளையும், (கலி. 124 : 1 - 3; ) நம்பி மூத்தபிரானையும், (கலி. 124 : 1; 134 : 1 - 3) கண்ணணையும், (பரி. 8 : 3) பிரமனையும், (பரி. 8 : 7) திசை காவலரையும், (பரி. 8 : 4 - 7) முப்பத்து மூவரையும் உயர்த்துப் புகழ்தலாலும்
(பரி. 11 : 78; ) அந்தணர்கள் விழவுதொடங்குதலையும் (பரி. 11 : 84 - 85; கலி. 130 : 9) ஆவுதி பண்ணுதலையும், (கலி. 126 : 3 - 5) அந்தணத் துறவிகள் மாலைக் காலத்தில் முதுமொழி நினைந்து ஒலியும் அசைவுமின்றி நிட்டையிலிருத்தலையும் (பரி. 11 : 81 - 83, 91) கன்னியர் தைந்நீராடுந் தவத்தையும் எடுத்துரைத்தலானும் மற்றும் சில காரணங்களாலும் இவரை வைதிக சமயத்தவரென்று துணியலாம்.


1 ‘நன்மை’ என்னுஞ்சொல்லை முதலிற்சேர்த்ததாகக் கொண்டு ‘நல்லந்துவனார்’ என்றே வழங்குவாரும் உளர்.

2 ‘மதுரை யாசிரியர்’ என்றும் பாடம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:09:01(இந்திய நேரம்)