Primary tabs
திருப்பனந்தாள் ஆதீன கர்த்தர்களாகிய ஸ்ரீலஸ்ரீ காசிவாசி ஸ்வாமிநாத ஸ்வாமிகளவர்களைப் போய்ப் பார்த்து ‘நான் இதனைப் பதிப்பிக்கத் தொடங்கியிருக்கிறேன், நிறைவேறவேண்டும்’ என்று சொன்னபோது அவர்கள் 100 ரூபாய் உவந்தளித்து ‘இன்னும் அவசியமானபோது முட்டுப்படாவண்ணம் வேண்டிய உதவியைச் செய்வோம்’ என்றும் வாக்களித்தார்கள். அஃது எனக்கு இக்காரியத்தை இடையூறின்றி முடித்து விடலாமென்ற இன்பத்தையும் தைரியத்தையும் தந்தது. அவர்கள் தமிழபிமானம் என்னை மகிழ்வித்ததனால் அதனை இம் முகவுரையின் இறுதியில் (பக்கம் 8) ‘தமிழ் வளர்க்கு முயற்சி’ என்பதில் தெரிவித்திருக்கிறேன். இப்போது பல்கலையும் வளர்க்கக் கருதித் தமிழ் வளர்த்தற்காகச் சென்னைச் சருவகலாசாலைத் தனித் தமிழ்ப் பரீக்ஷையில் ஒவ்வோராண்டிலும் முதன்மையாகத் தேறும் வித்துவானுக்கு 1000 ரூபாய் பரிசளிப்பதாக (Fund) மூலதனம் ஏற்படுத்தி இப்போது சிலவருடமாக வழங்கிவரும் வள்ளன்மை உலகம் அறிந்ததே.
இத்தொகை ஒவ்வோராண்டிற் பெறுபவர் ஒவ்வொருவரேயாயினும் இவ்வேற்பாடு ஒவ்வோராண்டிலும் பல மக்களை நன்றாகத் தமிழ் ஞானம் உறுவித்தற்கு ஏதுவாகு மென்பது ஒருதலை. ஸ்ரீ குமர குருபார் ஈட்டிய செல்வம் தமிழ் வளர்ச்சி செய்யாதிருக்குமா!
இப்போது தமிழ் நாட்டினுள் மிக்க செல்வமுடைய தமிழர்கள் பலரிருப்பினும் அவர்களுள் யாரேனும் தம் பாஷையில் அபிமானம் வைத்து அதனை வளர்த்தற்கு எவ்வகையாகவாவது முன் வந்தார்களா? அவர்கள், ‘எமக்குத் தமிழில் அபிமானம் அதிகம்’ என்று தம்மைப்பற்றித் தாமே சொல்லிக்கொள்ளுஞ் சொல் பொருளுரையாகுமா? அதனாற் பயன் யாது?
உண்மையில் ஒருவர் தம் பாஷையில் அபிமான முள்ளவராயிருந்தால், தாம் அதனைப்பயின்று அரியபொருளை அறியாதிருப்பாரா? அறியாவிட்டால் அம்மொழிவாணரது தாரதம்மிய மறியச் சக்தி யுடையராவாரா? பயில இயலாவிட்டாலும் அதனை வளர்த்தற்கு வேண்டிய முயற்சி செய்யாதிருப்பாரா? அதனை நன்கு அறிந்தவர் பால் அன்பு செய்தலும் அவரைப் பாராட்டுதலும் அவர்க்கு உபகரித்தலுமில்லா திருப்பாரா?
மற்றைச் செல்வர் பாஷாபிமானமற்ற நிலைமையிலிருக்கும் இக்காலத்தில் பனசையாதீன கர்த்தரவர்கள் இப்பரிசிலை ஏற்படுத்தியது மிகவும் கொண்டாடத்தக்க தமிழபிமானச் செய்கையென்பதை யாரே