Primary tabs
III
இஃதொரு புறமிருக்க,.................விரிவஞ்சி மேற்கோட்கள் சேர்க்காது விடுத்தாம்.
இனி, இந்நூலைக் காலம்சென்ற சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் 1887-ஆம் வருடத்திற் பதிப்பித்தார்கள் அப்பதிப்பிலடங்கிய பிரதிகள் யாவும் செலவாகி விட்டமையான் அவை பணத்தாலும் சிநேகத்தாலும் மற்றெவ்விதத்தாலும் கொளற்கரியனவாய் முடிந்தன. ஆதலின் வேறுவழிகாணாது எனக்கு இனியனவாத்தோன்றிய சிற்சில பாட்டுக்களை மாத்திரம் கையெழுத்தில் பெயர்த்துக்கொண்டேன். என்னைப் போலவே பலரும் இப்புதிய பதிப்பை எதிர்ப்பார்த்திருப்பராதலின் இதனை இரண்டாம்முறை அச்சிட்டு உதவியவருக்கு யாம் பெரிதும் நன்றி பாராட்டக்கடமைப்பட்டவராயிருக்க, இதற்குத் தாம் பல வாண்டுகளாக அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளும் சேர்த்தருளிய பிரும்மஸ்ரீ அனந்தராமையருக்கு நாம் எத்துணைக் கடமைப்பட்டுளோமென்பது கூறாமலே விளங்கும்....................... (14-2-25.)
-----
(நவசக்தி.)
கலித்தொகை என்பது பழைய சங்க நூல்களுள் ஒன்று. அஃது எட்டுத்தொகையுள் ஒன்றாயிருப்பது. கலித்தொகையைக் “கற்றறிந்தார் போற்றுங் கலி” என்று தமிழர்கள் போற்றி வருவது கவனிக்கற்பாற்று.
கலித்தொகை, மக்கள் இன்பவாழ்விற் குரிய அகப்பொருளை அறிவுறுத்தும் நூல். அகப்பொருளை யுணர்த்தும் நூல் பலவற்றுள் கலித்தொகை தலையாயது என்று கூறுவது மிகையாகாது. அகப்பொருளிலக்கணம் பயின்ற ஒருவன் கலித்தொகை வாசித்து வருவானாயின், அவன் உடல் உணவு முதலியவற்றையும் மறந்து இன்பத்தால் விழுங்கப்படுவன் என்பது திண்ணம். அவன் நுகரும் இன்பத்தை எழுத்தால் எழுத முடியாது. அத்தகை இன்பத்தை யூட்டும் நூலன்றோ நூல்? கலித்தொகையில் அத்தகைப் பேரின்ப மிருப்பதாலன்றோ கற்று அறிந்தார் போற்றுங்கலி என்று அந்நூல் புகழப்படுகிறது? அவ்வின்பநூல் பயின்று இயற்கை யின்பத்தில் திளைத்திருந்த நம்மவர்கள் இதுகாலை போலிநாவல்கள் பயின்று களித்து, இன்பமிழந்து வருவது குறித்து எவரே வருந்தார்?