தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-முதற்சம்புடத்தின் அபிப்பிராயம்


முதற்சம்புடத்தின் அபிப்பிராயம்.
(பிரஹ்மஸ்ரீ மஹாமஹோபாத்தியாய உ. வே. சாமிநாதையர்வர்கள்.)

சென்னைப் பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய பிரஹ்மஸ்ரீ, இ. வை. அநந்தராமையரவர்கள் பலவருடங்களாக மிக முயன்று நன்கு பரிசோதித்துப் பதிப்பித்துச் சில மாதங்களுக்கு முன்பு வெளிப்படுத்திய கலித்தொகையின் முதற்பகுதிப் புத்தகத்தைப் படித்துப்பார்த்துப் பரிசோதனைமுறை முதலியவற்றை யறிந்து மிக்க ஆநந்தமடைந்தேன். இருபது வருடங்களுக்குக் குறையாமற் பழகி இவர்களுடைய ஆற்றல்களை ஒருவகையாக யான் அறிந்திருப்பினும் இதுகாறும் இவர்கள்பாற் கண்டறியப்படாமலிருந்த விசேட ஆற்றல்கள் பலவற்றை இப்பதிப்பால் நன்கு அறிந்தேன். சிறந்த ஒரு நூல் எத்தனைவகையாக ஆராய்ச்சிசெய்து பதிப்பிக்கப்பட வேண்டுமோ அத்தனைவகையிலும் சிறிதும் குறைவின்றி ஆராய்ச்சி செய்யப்பெற்று இப்புத்தகம் விளங்குகின்றது. இப்பதிப்பிலுள்ள விசேடங்களெல்லாம் இதன் முகவுரையைப் படிப்பவர்களுக்கு நன்கு விளங்குமாதலின், இங்கே அவற்றை எழுதவில்லை.

அருந்தமிழ்ப்புலவர்கள், புதுமொழிகளும் புதியாபொருள்களுமாகிய அமுதப்பெருக்கத்தைக் கூட்டுண்ணுதற்கு நல்விருந்தென்றும் செந்தமிழ்ச் செல்வர்களுக்கு வாய்த்த ஒரு கருவூலமென்றும் இப்புத்தகத்தைச் சொல்லலாம்.

தமிழ்ப் பாஷாபிமானிகள் இதனை வாங்கிப்படித்து, இந்நன் முயற்சியிற் சிறிதும் சலிப்படையாதபடி இப்பதிப்பாசிரியர்க்குப் பொருளுதவிசெய்து ஊக்கமளிப்பார்களாயின், அவ்வுதவி தமிழ்ப் பாஷைக்கே செய்த பெரியதோ ருதவியாகுமென்பதிற் சந்தேகமில்லை. எந்தக்காரியத்திற்கும் பொருள் இன்றியமையாததென்பது யாவரும் அறிந்ததன்றோ!

சென்னை.
திருவேட்டீசுவரம்பேட்டை,
தியாகராஜவிலாஸம். 5-4-25.
இங்ஙனம்:
வே. சாமிநாதையர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:25:58(இந்திய நேரம்)