Primary tabs
கலிவெண்பாட்டு 34; உறழ்கலி 5. என்று, இக்கலித்தொகையின் ஒவ்வொரு பாடலின் உரையிறுதியிலுமுள்ள குறிப்பால் அறியப்படுகிறது. இவ்வகையின் கணக்கு இதற்கு மாறாகவும் வேறு சில நூலுரைகளிற் காணப்படும்.
இது சிருங்கார ரசமாகிய இன்பச்சுவையைத் தலைமையாகக் கொண்டதொரு தொகை நிலைச் செய்யுள். அஃதாவது ஒத்த அன்புடையரான தலைவனும் தலைவியுமாகிய இருவரும் தங்களுள் ஒருவர் பாலொருவர் அன்புசெய்த இயல்பைப் பண்டை நூல் வழக்கிற்கு அமையக் கூறுவது. தொல்லாசிரியர் கருத்து இக்கலிப்பா இச்செய்தி கூறுதற்கே உரித்தென்பதும் துன்பச் செய்தி கூறுதற்கு உரித்தன்றென்பதுமாம்; இவை:-
தெரியிழை மகளிரொடு மைந்தரிடை வரூஉங்
கலப்பே யாயினும் புலப்பே யாயினு
மைந்திணை மரபி னறிவுவரத் தோன்றிப்
பொலிவொடு புணர்ந்த பொருட்டிற முடையது
கலியெனப் படூஉங் காட்சித் தாகும்’’ - என்றும்
‘‘கலியே வஞ்சியிற் கையற வுரையார்’’-என்றும்
முறையே 1அகத்தியனாரும் பன்னிருபாட்டியலுடையாரும் கூறுதலால் அறியலாகும். ஆதலால் இத்தொகையில் அகப்பொருட்செய்திகள் மிக அழகுறப் பாராட்டப்பட்டிருக்குமென்பது கூறாமலே விளங்கும்.
அன்றியும், இஃது உவமை முதலியனவும் பிற செய்திகளும் கூறுமுகத்தால். அந்தணர், அரசர், அமைச்சர், வணிகர், வேளாளர்களும் பிறருமாகிய ஆடவரும்மகளிரும், இளமையிலும் முதுமையிலும் அறிந்தொழுக வேண்டிய பற்பல நீதிகளைக் கற்பித்து, தன்னைப் படித்தவரை நன்னெறிச் செலுத்தத் தக்க மேம்பாடுடையது. இதில் அறம் பொருள் முதலியவற்றின் சிறப்புக்களும், நல்லவர் தீயவர் பண்புகளும், விலங்கு, பறவை, மரம், செடி, கொடிகளினியல்புகளும், பலநூற் செய்திகளும், காலத்தின் தன்மையும் கூறப்பெற்றிருக்கின்றன. அன்றியும் இது தமிழ் நாட்டின் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்களையும், அக்காலத்து நிகழ்ச்சிகள் பலவற்றையும் அறிதற்கும் உய்த்துணர்தற்கும் பெருந்துணையாக உள்ளது.
(பிரதிபேதம்)
1. தொல். செய். சூ. 129 ‘ஒத்தாழிசைக்கலி’ இளம்.
மேற்கோள்.