தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai




 
7
முகவுரை

சில தொகை நிலைச் செய்யுட்களினிறுதியிற் கூறப் பெற்றிருத்தல்போல, இதனிறுதியில் இதனைத் தொகுத்தாரிவர், தொகுப்பித்தாரிவர் என்ற குறிப்பு இன்றேனும்,

‘‘நாடும் பொருள்சான்ற நவ்வந் துவனாசான்
சூடுபிறைச் சொக்கன் றுணைப்புலவோர் - 1 தேடுவார்
கூட்டுணவே வாழ்த்தோடு கொங்காங் கலியினையே
2கூட்டினான் ஞாலத்தோர்க் கு’’

என்பதனால், ஆசிரியர் நவ்வந்துவனார் கடவுள் வாழ்த்தையும் பாடிச்சேர்த்து இதனைத்தொகுத்தாரென்று தெரிகின்றது. முற்கூறியபடி பெருங்கடுங்கோன் முதலியவர்கள் பாலைத்திணை முதலியவற்றைப் பாடினாராயின் நவ்வந்துவனார் தொகுத்தாரென்று இங்கே கூறுவதிற் சிறப்பென்னை? சிறப்புறப் பொருந்துமாறு யாது? எனின் இவர், அவர்களும் தாமும் பாடிய பலதிணைக்குமுரிய கலிப்பாக்களில் ஒவ்வொருவர் பாடல்களையே ஒவ்வொரு திணைக்கு எடுத்துக்கொண்டு அத்திணைக்கண் அமைக்கத் தக்கவற்றையெல்லாம் அவரவர் பாடலிலிருந்தே நுணுகி ஆராய்ந்து சேர்த்தமைத்து ஐந்திணையையும் தொகுத்தார் என்னும் அருமை பற்றிப் போலுமென்க.

இங்ஙனம் தொகுத்ததில் ஐந்திணையும் விரவிக் கோக்கப் பெற்ற நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு போலாது, விரவாது கோக்கப் பெற்ற ஐங்குறுநூறு, அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்கள், இலக்கண நூல்கள், இவற்றுள் ஒன்றிலேனும் 3 முதலிடம் பெறாத பாலைத்திணையை இவர் முதலில் நிறுவியதற்குக் காரணம், யாவரும் இத்திணையை முதலில் வைக்காமையால், இது முதலில் வருமோ வாராதோவென்று ஐயுற்றுமயங்கி வாராதென்று திரிய வுணர்வார்க்கு அத்திரிபுணர்ச்சியை நீக்கல் கருதிப்போலும்; அன்றி, பாலை நானிலப் பொதுவாதலின், பொதுவை முற்கூறிச் சிறப்பைப் பிற்கூறுவதும் மரபென்பது பற்றி எனினுமாம்; வேறு பொருந்துவன உளவேனும் கொள்க. முதலில் இடம்பெறாது குறையுற்ற இத்திணை முதலில் இடம் பெற்றதற்கு முதல், இவருடைய கல்வி யறி வாற்றலே யாம். வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு வழக்குக் கிழுக்கு முண்டோ!


      (பிரதிபேதம்) 1. தேடுபோர்ந்து கூட்டு, தேடிப் போந்து கூட்டு, தேடுவோர் கூட்டு.

      (பிரதிபேதம்) 2. ஊட்டினான் ஞாலத் தவர்க்கு.

       3. இந்நூல் 12 ஆவது பக்கம் பார்க்க.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:26:32(இந்திய நேரம்)