தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆலத்தூர் கிழார்

ஆலத்தூர் கிழார்
34
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என,
5
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என,
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
'காலை அந்தியும், மாலை அந்தியும்,
புறவுக் கரு அன்ன புன் புல வரகின்
10
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி,
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து,
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி,
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு
15
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்,
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின்
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்,
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து,
20
சான்றோர் செய்த நன்று உண்டாயின்,
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி,
கொண்டல் மா மழை பொழிந்த
நுண் பல் துளியினும் வாழிய, பலவே!
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

36
அடுநை ஆயினும், விடுநை ஆயினும்,
நீ அளந்து அறிதி, நின் புரைமை வார் கோல்,
செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
5
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய,
கருங் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய்
நெடுங் கை நவியம் பாய்தலின், நிலை அழிந்து,
வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப, காவுதொறும்
கடி மரம் தடியும் ஓசை தன் ஊர்
10
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப,
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின்
சிலைத் தார் முரசம் கறங்க,
மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே.
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.

69
கையது, கடன் நிறை யாழே; மெய்யது,
புரவலர் இன்மையின் பசியே; அரையது,
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவல் பாண!
5
பூட்கை இல்லோன் யாக்கை போலப்
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை;
வையகம் முழுதுடன் வளைஇ, பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை,
10
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி,
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே;
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார்
15
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல்
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி,
நீ அவற் கண்ட பின்றை, பூவின்
20
ஆடு வண்டு இமிராத் தாமரை
சூடாயாதல் அதனினும் இலையே.
திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

225
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய,
இடையோர் பழத்தின் பைங் கனி மாந்த,
கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர,
நில மலர் வையத்து வல முறை வளைஇ,
5
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு,
'ஆற்றல்' என்பதன் தோற்றம் கேள், இனி:
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை,
முள்ளுடை வியன் காட்டதுவே 'நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்கொல்?' என,
10
இன் இசைப் பறையொடு வென்றி நுவல,
தூக்கணங் குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப
ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி,
ஞாலங் காவலர் கடைத்தலை,
காலைத் தோன்றினும் நோகோ யானே.
திணையும் துறையும் அவை.
சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.

324
வெருக்கு விடை அன்ன வெகுள் நோக்குக் கயந் தலை,
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய்,
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரையுடை வால் முள்
5
ஊக நுண் கோல் செறித்த அம்பின்,
வலாஅர் வல்வில் குலாவரக் கோலி,
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன் புலம் தழீஇய அம் குடிச் சீறூர்,
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த
10
வெண் காழ் தாய வண் கால் பந்தர்,
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து,
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை
வலம் படு தானை வேந்தர்க்கு
உலந்துழி உலக்கும் நெஞ்சு அறி துணையே.
திணையும் துறையும் அவை.
ஆலத்தூர் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 21:56:33(இந்திய நேரம்)