தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஊன்பொதி பசுங்குடையார்

ஊன்பொதி பசுங்குடையார்
10
வழிபடுவோரை வல் அறிதீயே;
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே;
நீ மெய் கண்ட தீமை காணின்;
ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி;
5
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
10
மலைத்தல் போகிய, சிலைத் தார் மார்ப!
செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ்,
நெய்தலங்கானல் நெடியோய்!
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே!
திணையும் துறையும் அவை.
சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

203
'கழிந்தது பொழிந்து' என வான் கண்மாறினும்,
'தொல்லது விளைந்து' என நிலம் வளம் கரப்பினும்,
எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை;
'இன்னும் தம்' என எம்மனோர் இரப்பின்,
5
'முன்னும் கொண்டிர்' என, நும்மனோர் மறுத்தல்
இன்னாது அம்ம; இயல் தேர் அண்ணல்!
இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும்,
உள்ளி வருநர் நசை இழப்போரே;
அனையையும் அல்லை, நீயே; ஒன்னார்
10
ஆர் எயில் அவர்கட்டாகவும், 'நுமது' எனப்
பாண் கடன் இறுக்கும் வள்ளியோய்!
பூண் கடன், எந்தை! நீ இரவலர்ப் புரவே.
திணையும் துறையும் அவை.
சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ் சேட்சென்னியை ஊன் பொதி பசுங்குடையார் பாடியது.

370
.............................................ளி,
நாரும் போழும் செய்து உண்டு, ஒராங்குப்
பசி தினத் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு
ஆர் பதம் கண்ணென மாதிரம் துழைஇ,
5
வேர் உழந்து உலறி, மருங்கு செத்து ஒழிய வந்து,
அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல்,
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின்
பெடை பயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண்,
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை,
10
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட,
பழுமரம் உள்ளிய பறவை போல,
ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென,
துவைத்து எழு குருதி நிலமிசைப் பரப்ப,
விளைந்த செழுங் குரல் அரிந்து, கால் குவித்து,
15
படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி,
எருது களிறு ஆக, வாள் மடல் ஓச்சி,
அதரி திரித்த ஆள் உகு கடாவின்,
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி,
'வெந் திறல் வியன் களம் பொலிக!' என்று ஏத்தி,
20
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின்
வரை மருள் முகவைக்கு வந்தனென்; பெரும!
வடி நவில் எஃகம் பாய்ந்தென, கிடந்த
தொடியுடைத் தடக் கை ஓச்சி, வெருவார்
இனத் தடி விராய வரிக் குடர் அடைச்சி,
25
அழு குரல் பேய்மகள் அயர, கழுகொடு
செஞ் செவி எருவை திரிதரும்,
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே!
திணையும் துறையும் அவை.
சோழன் செருப்பாழி எறிந்த இளந்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

378
தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய,
தொடை அமை கண்ணி, திருந்து வேல் தடக் கை,
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின்,
5
நல் தார், கள்ளின், சோழன் கோயில்,
புதுப் பிறை அன்ன சுதை சேய் மாடத்து,
பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என்
அரிக் கூடு மாக் கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
10
எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல,
மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை
தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு,
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல்,
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும்,
15
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும்,
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
20
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
இருங் கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே.
திணை அது; துறை இயன்மொழி.
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:01:21(இந்திய நேரம்)