தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

நெட்டிமையார்

நெட்டிமையார்
9
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
5
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச்
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த,
10
முந்நீர் விழவின், நெடியோன்
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே!
திணையும் துறையும் அவை.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

12
பாணர் தாமரை மலையவும், புலவர்
பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும்,
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
5
இனிய செய்தி, நின் ஆர்வலர் முகத்தே?
திணை அது; துறை இயன்மொழி.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

15
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி,
பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல் எயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல்,
5
வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத்
தேர் வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்து;
துளங்கு இயலான், பணை எருத்தின்,
பாவு அடியான், செறல் நோக்கின்,
ஒளிறு மருப்பின் களிறு அவர
10
காப்பு உடைய கயம் படியினை;
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு
நிழல் படு நெடு வேல் ஏந்தி, ஒன்னார்
ஒண் படைக் கடுந் தார் முன்பு தலைக் கொண்மார்,
15
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய,
வசை பட வாழ்ந்தோர் பலர்கொல்? புரை இல்
நல் பனுவல், நால் வேதத்து,
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல் மாண்
20
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
யூபம் நட்ட வியன் களம் பலகொல்?
யா பலகொல்லோ? பெரும! வார் உற்று
விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
25
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.
திணையும் துறையும் அவை.
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:22:15(இந்திய நேரம்)