தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பரணர்

பரணர்
4
வாள், வலம் தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன;
தாள், களம் கொள, கழல் பறைந்தன
கொல்ல் ஏற்றின் மருப்புப் போன்றன;
5
தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ,
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறி பதத்தான் இடம் காட்ட,
கறுழ் பொருத செவ் வாயான்,
எருத்து வவ்விய புலி போன்றன;
10
களிறு, கதவு எறியா, சிவந்து, உராஅய்,
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
15
மாக் கடல் நிவந்து எழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ
அனையை ஆகன்மாறே,
தாய் இல் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பரணர் பாடியது.

63
எனைப் பல் யானையும் அம்பொடு துளங்கி,
விளைக்கும் வினை இன்றிப் படை ஒழிந்தனவே;
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே;
5
தேர் தர வந்த சான்றோர் எல்லாம்,
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே;
விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம்,
பொறுக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே;
சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென,
10
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே,
என் ஆவதுகொல்தானே கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர்
பாசவல் முக்கி, தண் புனல் பாயும்,
யாணர் அறாஅ வைப்பின்
15
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே?
திணையும் துறையும் அவை.
அவரை அக் களத்தில் பரணர் பாடியது.

141
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை
மாண் இழை விறலி மாலையொடு விளங்க,
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ,
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்!
5
யாரீரோ?' என, வினவல் ஆனா,
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல!
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே,
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே,
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்
10
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும்,
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ,
கடாஅ யானைக் கலி மான் பேகன்,
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என,
மறுமை நோக்கின்றோ அன்றே,
15
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே.
திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.

142
அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,
வரையா மரபின் மாரிபோல,
கடாஅ யானைக் கழல் கால் பேகன்
5
கொடைமடம் படுதல் அல்லது,
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே.
திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

144
அருளாய் ஆகலோ கொடிதே; இருள் வர,
சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழ நின்
கார் எதிர் கானம் பாடினேமாக,
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண்
5
கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப,
இனைதல் ஆனாளாக, 'இளையோய்!
கிளையைமன், எம் கேள் வெய்யோற்கு?' என,
யாம் தன் தொழுதனம் வினவ, காந்தள்
முகை புரை விரலின் கண்ணீர் துடையா,
10
'யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள், இனி:
எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும்,
வரூஉம்' என்ப 'வயங்கு புகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு,
முல்லை வேலி, நல் ஊரானே.'
திணையும் துறையும் அவை.
அவனை அவள் காரணமாகப் பரணர் பாடியது.

145
'மடத் தகை மா மயில் பனிக்கும்' என்று அருளி,
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை,
கடாஅ யானைக் கலி மான் பேக!
பசித்தும் வாரேம்; பாரமும் இலமே;
5
களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி,
'அறம் செய்தீமோ, அருள் வெய்யோய்!' என,
இஃது யாம் இரந்த பரிசில்: அஃது இருளின்,
இன மணி நெடுந் தேர் ஏறி,
10
இன்னாது உறைவி அரும் படர் களைமே!
திணையும் துறையும் அவை.
அவனை அவள் காரணமாக அவர் பாடியது.

336
வேட்ட வேந்தனும் வெஞ் சினத்தினனே;
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்;
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
5
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே;
இயவரும் அறியாப் பல் இயம் கறங்க,
அன்னோ, பெரும் பேதுற்றன்று, இவ் அருங் கடி மூதூர்;
அறன் இலள் மன்ற தானே விறல் மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
10
முகை வனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகை வளர்த்து எடுத்த நகையொடு,
பகை வளர்த்திருந்த இப் பண்பு இல் தாயே.
திணை காஞ்சி; துறை மகட்பாற் காஞ்சி.
பரணர் பாடியது.

341
வேந்து குறையுறவும் கொடாஅன், ஏந்து கோட்டு
அம் பூந் தொடலை அணித் தழை அல்குல்,
செம் பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை,
எழு விட்டு அமைத்த திண் நிலைக் கதவின்
5
அரை மண் இஞ்சி நாட் கொடி நுடங்கும்
..............................................
புலிக் கணத்து அன்ன கடுங் கண் சுற்றமொடு,
மாற்றம் மாறான், மறலிய சினத்தன்,
'பூக் கோள்' என ஏஎய், கயம் புக்கனனே;
10
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல் இயல்,
சுணங்கு அணி வன முலை, அவளொடு நாளை
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின்,
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு
15
வாரா உலகம் புகுதல் ஒன்று எனப்
படை தொட்டனனே, குருசில்; ஆயிடைக்
களிறு பொரக் கலங்கிய தண் கயம் போல,
பெருங் கவின் இழப்பது கொல்லோ,
மென் புனல் வைப்பின் இத் தண் பணை ஊரே!
திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

343
'மீன் நொடுத்து நெல் குவைஇ,
மிசை அம்பியின் மனை மறுக்குந்து,
மனைக் குவைஇய கறி மூடையால்,
கலிச் சும்மைய கரை கலக்குறுந்து;
5
கலம் தந்த பொற் பரிசம்
கழித் தோணியான், கரை சேர்க்குந்து;
மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்
புனல்அம் கள்ளின் பொலந் தார்க் குட்டுவன்
10
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன,
நலம்சால் விழுப் பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்,
புரையர் அல்லோர் வரையலள், இவள்' எனத்
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர்,
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை
15
வருந்தின்று கொல்லோ தானே பருந்து உயிர்த்து
இடை மதில் சேக்கும் புரிசை,
படை மயங்கு ஆர் இடை, நெடு நல் ஊரே?
திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

348
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ,
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய,
கள் அரிக்கும் குயம், சிறு சில்
மீன் சீவும் பாண் சேரி,
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன,
குவளை உண்கண் இவளை, தாயே
ஈனாளாயினள்ஆயின், ஆனாது
நிழல்தொறும் நெடுந் தேர் நிற்ப, வயின்தொறும்,
செந் நுதல் யானை பிணிப்ப,
10
வருந்தலமன் எம் பெருந் துறை மரனே!
திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

352
தேஎம் கொண்ட வெண் மண்டையான்,
வீ..............................................கறக்குந்து;
அவல் வகுத்த பசுங் குடையான்,
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து;
5
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர்
குன்று ஏறிப் புனல் பாயின்,
புற வாயால் புனல் வள
............................................. நொடை நறவின்
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி
10
உறந்தை அன்ன உரைசால் நன் கலம்
கொடுப்பவும் கொளாஅனெ
.......................ர் தந்த நாகு இள வேங்கையின்,
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின்
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும்
15
சிறு கோல் உளையும் புரவி ெ..................
.............................................. யமரே.
திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

354
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கப்
புரையோர் சேர்ந்தென, தந்தையும் பெயர்க்கும்;
வயல் அமர் கழனி வாயில் பொய்கை,
5
கயல் ஆர் நாரை உகைத்த வாளை
புனலாடு மகளிர் வள மனை ஒய்யும்
ஊர் கவின் இழப்பவும் வருவது கொல்லோ
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை,
வீங்கு இறைப் பணைத் தோள், மடந்தை
10
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே?
திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

369
இருப்பு முகஞ் செறித்த ஏந்து எழில் மருப்பின்,
கருங் கை யானை கொண்மூ ஆக,
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள் மின் ஆக, வயங்கு கடிப்பு அமைந்த
5
குருதிப் பலிய முரசு முழக்கு ஆக,
அரசு அராப் பனிக்கும் அணங்கு உறு பொழுதின்,
வெவ் விசைப் புரவி வீசு வளி ஆக,
விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த
கணைத் துளி பொழிந்த கண் அகன் கிடக்கை.
10
ஈரச் செறுவயின் தேர் ஏர் ஆக,
விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின்
செருப் படை மிளிர்ந்த திருத்துறு பைஞ் சால்,
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி,
விழுத் தலை சாய்த்த வெருவரு பைங் கூழ்,
15
பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு,
கண நரியோடு கழுது களம் படுப்ப,
பூதம் காப்ப, பொலிகளம் தழீஇ,
பாடுநர்க்கு இருந்த பீடுடையாள!
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி
20
வேய்வை காணா விருந்தின் போர்வை
அரிக் குரல் தடாரி உருப்ப ஒற்றி,
பாடி வந்திசின்; பெரும! பாடு ஆன்று
எழிலி தோயும் இமிழ் இசை அருவி,
பொன்னுடை நெடுங் கோட்டு, இமையத்து அன்ன
25
ஓடை நுதல, ஒல்குதல் அறியா,
துடி அடிக் குழவிய பிடி இடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா ஈகைத் தகை வெய்யோயே!
திணையும் துறையும் அவை; துறை ஏர்க்கள உருவகமும் ஆம்.
சேரமான் கடல் ஓட்டிய வெல் கெழு குட்டுவனைப் பரணர் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:24:01(இந்திய நேரம்)